ஜூன் 14-ம் தேதி சென்னையில் அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் எப்படி நடத்துவது என்பது குறித்து ஆலோசிக்க அ.தி.மு.க மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் கூடியது. அந்தக் கூட்டத்தில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ் இருவரும் கலந்துகொண்டனர். கூட்டத்தில் முதலில் திருவள்ளூர் கிழக்கு மாவட்டச் செயலாளர் மாதவரம் மூர்த்தி ஒற்றைத் தலைமை குறித்து விவாதத்தைக் கிளப்பினார். அதற்கு ஆதரவாகவும், எதிராகவும் குரல்கள் எழுந்தன. பிறகு இரு தரப்பினருக்கும் இடையே வார்த்தை மோதல் வெடித்தது. கூட்டம் முடிந்தபிறகு செய்தியாளர்களைச் சந்தித்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஒற்றைத் தலைமை விவாதத்தைப் பற்றிக் கூறினார்.
அதன்பிறகுதான் இந்த ஒற்றைத் தலைமை விவகாரம் சூடு பிடித்தது. அடுத்த நாளான ஜூன் 15-ம் தேதி கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் வைத்தியலிங்கம், அமைப்புச் செயலாளர் ஜே.சி.டி.பிரபாகர், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன், தர்மர், பி.எச்.மனோஜ் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னாள் எம்.பி கோபாலகிருஷ்ணன், மாவட்டச் செயலாளர் அசோக் உள்ளிட்ட பலரும் நேற்று ஓ.பன்னீர்செல்வத்தைச் சந்தித்து இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்தினர்.
மேலும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர்கள் பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஆர்.பி.உதயகுமார், எம்.ஆர்.விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம், பா.வளர்மதி, திண்டுக்கல் சீனிவாசன், தளவாய் சுந்தரம், மாவட்டச் செயலாளர்கள் வி.என்.ரவி, சத்யா, ராஜேஷ் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
அதைத் தொடர்ந்து ஜூன் 16-ம் தேதி கட்சித் தலைமை அலுவலகத்தில் முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, சி.வி.சண்முகம், மூத்த தலைவர்கள் செம்மலை, பொன்னையன், கொள்கை பரப்புச் செயலாளர் வைகைச்செல்வன் உள்ளிட்ட 11 பேர்கொண்ட தீர்மானக்குழு உறுப்பினர்கள் ஆலோசனைக்கூட்டம் நடத்தினர். கட்சி அலுவலகத்துக்கு ஓ.பி.எஸ் வரும் தகவல் வந்தவுடன் ஆலோசனைக் கூட்டத்தை வேறொரு நாளைக்கு ஒத்திவைத்து, ஜெயக்குமார், சி.வி.சண்முகம், வளர்மதி ஆகியோர் கட்சி அலுவலகத்திலிருந்து புறப்பட்டுச் சென்றனர். கட்சி அலுவலகம் வந்த ஓ.பி.எஸ் அங்கிருந்த பிற கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார்.
இந்நிலையில் ஓ.பி.எஸ், இ.பி.எஸ்-க்கு ஆதரவான போஸ்டர்களும் பரபரப்பைக் கிளப்பின. ஆனால், `ஒற்றைத் தலைமைக்கு எதிராக ஓ.பி.எஸ் திட்டவட்டமாக இருக்கிறார். அவரை சமாதானப்படுத்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், அவர் இந்த முறை விட்டுக்கொடுக்கமாட்டார்’ என அவரின் ஆதரவாளர்கள் உறுதியாகக் கூறுகிறார்கள். இந்த தகவலுக்கு நேர்மாறாக தற்போது கட்சியில் ஒற்றைத் தலைமை கட்டாயம் தேவை என்று எடப்பாடி பழனிசாமி தரப்பினர் போர்க்கொடி பிடித்து வருகின்றனர்.
இந்த பரபரப்பான சூழலில் இன்றும் அ.தி.மு.க தலைமை அலுவலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடந்தது. துணை ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், முன்னாள் அமைச்சர்கள் ஜெயக்குமார், வளர்மதி, சி.வி.சண்முகம் உள்ளிட்ட முக்கிய கட்சி நிர்வாகிகள் தலைமை அலுவலகத்துக்கு வந்திருந்தனர். இன்று கட்சித் தலைமை அலுவலகத்துக்கு இ.பி.எஸ் வருவார் என்று செய்தி வெளியானது. ஆனால் கடைசி நிமிடம் வரை அவர் வரவில்லை.
இந்நிலையில் அ.தி.மு.க கட்சித் தலைமை அலுவலகத்துக்கு வெளியே ஓ.பி.எஸ் ஆதரவாளர்கள் ஓ.பி.எஸ்-க்கு ஆதரவாகவும், முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிராகவும் கோஷம் எழுப்பினர். அந்தக் கோஷங்களுக்கு எதிராக ஜெயக்குமாரின் ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் இருதரப்பினருக்கும் இடையே சிறு சலசலப்பு ஏற்பட்டது.
எடப்பாடி பழனிச்சாமியின் ஆதரவாளரான பெரம்பூர் முன்னாள் பகுதி செயலாளர் மாரிமுத்து ரத்த காயங்களோடு வெளியேறினார். இவரைப் பன்னீர்செல்வத்தின் ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. தொடர்ந்து ஐந்தாவது நாளாக அ.தி.மு.க-வில் மட்டுமின்றி… தமிழ்நாடு அரசியல் அரங்கிலும் பரபரப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் இந்த `ஒற்றைத் தலைமை’ விவகாரத்தின் உச்சகட்ட காட்சி எப்படி இருக்கப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!