கண்டி மாவட்டத்தில் உள்ள ஒவ்வொரு பிரதேச செயலகத்திலும் ஒரு விற்பனை நிலையத்தை முன்னெடுக்குமாறு மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்களுக்கும் கண்டி மாவட்ட செயலாளர் சந்தன தென்னகோன் அறிவித்துள்ளார்.
மாவட்டச் செயலாளர் மேலும் தெரிவிக்கையில், பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் தொழில் முயற்சியாளர்கள், விவசாயிகள் மற்றும் சிறுதொழில் முயற்சியாளர்கள் தமது உற்பத்திப் பொருட்களை விற்பனை செய்வதற்கு இந்த விற்பனை நிலையத்தைப் பயன்படுத்தலாம் என தெரிவித்தார்.
கண்டி மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்று (17) நடைபெற்ற விவசாயக் குழுக் கூட்டத்தில் மாவட்ட செயலாளர் இதற்கான அறிவுறுத்தல்களை வழங்கினார்.
நாட்டில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை காரணமாக, காய்கறிகள் உள்ளிட்ட அறுவடைகளை ஏற்றிச் செல்வதற்கு எரிபொருள் இல்லாததால், அவர்களின் அறுவடைகளை விற்பனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும், நடமாடும் வாகனங்களை இயக்கி வந்த பல வர்த்தக நிறுவனங்கள் முடங்கியுள்ளதால் , இவ்வாறான விற்பனை நிலையங்கள் மக்களுக்கு நிவாரணம் வழங்குவதாகவும் மாவட்ட செயலாளர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
இவ்வாறான விற்பனை நிலையங்களினூடாக நுகர்வோர் சலுகை விலையில் பொருட்களை கொள்வனவு செய்யக்கூடிய வகையில் இடைத்தரகர்களுக்கான செலவு முற்றாக நிறுத்தப்படும் என மாவட்ட செயலாளர் மேலும் சுட்டிக்காட்டினார்.
நாடு எதிர்நோக்கும் சவால்களை முறியடிக்கும் வகையில் பாரம்பரியக் கட்டமைப்பை முறியடித்து மக்களுக்காகப் பணியாற்றுவது ஒவ்வொரு அரச உத்தியோகத்தரின் பொறுப்பாகும் எனத் தெரிவித்த மாவட்டச் செயலாளர் அதற்கேற்ற வேலைத்திட்டங்களை உருவாக்குமாறும் பணித்தார்.
கண்டி மாவட்டத்தில் ஹரிஸ்பத்துவ பிரதேச செயலக வளாகத்தில் உள்ள இடத்தைப் பயன்படுத்தி இவ்வாறான விற்பனை நிலையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், முன்னோடித் திட்டமாக அமுல்படுத்தப்பட்ட வேலைத்திட்டம் மிகவும் வெற்றிகரமானது எனவும் மாவட்ட செயலாளர் மேலும் தெரிவித்தார்.