மிகவும் அரிய வகை பறவையாக கருதப்படும் “ஆர்டிக் ஸ்குவா” எனும் கடற்காகம் தனுஷ் கோடி பகுதியில் கண்டறியப்பட்டுள்ளது.
மன்னார் வளைகுடா பல்லுயிர் வளம் மிக்க ஒரு பகுதி. இப்பகுதியில் கடல் சார்ந்த உயிரினங்களும், பறவைகளும் அதிக அளவில் காணப்படும். ஆண்டுதோறும் இப்பகுதியில் தோன்றும் பறவைகள் குறித்த கணக்கெடுப்பை கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து செய்து வருகிறார், மதுரையை சேர்ந்த ரவீந்தரன். பறவை ஆர்வலரான இவர் பறவைகள் வாழ்விடம், வலசை பறவைகள் குறித்த ஆய்வு ஒன்றை 2015-ம் ஆண்டு முதலே செய்து வருகிறார்.
இந்த ஆய்வின் தொடர்ச்சியாகவே கல்லூரி மாணவர்களை ஒருங்கிணைத்து பறவைகள் கணக்கெடுப்பை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் இந்தாண்டும் இப்பணியில் ஈடுபட்டிருக்கும் போது அரிய வகை பறவை இனமான கடற் காகத்தை கண்டறிந்துள்ளனர்.
”பெரும்பாலும் ஆழமான கடல் பரப்பில் வாழும் இக்கடற் காகத்தை ஐரோப்பியர்கள் “கடற் கொள்ளையன்” என அழைக்கின்றனர். ஏனெனில் தனது உணவுக்காக பறவைகளிடம் இருந்தும், பிற கடற்காகத்திடம் இருந்தும் இவை உணவை திருடிக்கொள்கின்றன. அதுமட்டுமில்லாமல், தங்களுடைய குஞ்சுகளுக்கு இரையாக சிறிய ஊர்வன மற்றும் பாலூட்டி உயிரிகளையும், மற்ற பறவைகளின் முட்டைகளையும் வேட்டையாடுகின்றன. ஆழ் கடலில் வாழும் இவ்வுயிரினம் இனப்பெருக்க காலத்தின் போது மட்டுமே வெளியே வருகிறது. உலகின் தென் துருவத்திலும் வட துருவத்திலும், இனப்பெருக்கம் செய்யும் ஒரே உயிரினம் இந்த கடற்காகம் தான்” என ரவீந்திரன் தெரிவித்துள்ளார்.