கனடாவில் இரவு விடுதிக்குச் சென்ற இளம்பெண் ஒருவரின் பானத்தில் மயக்கமருந்து கலக்கப்பட்டதால், அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலைக்கு ஆளானார்.
ஒன்ராறியோவில் இந்த பயங்கர அனுபவத்திற்குள்ளான Cassandra Trudel (26) என்ற அந்த இளம்பெண், மற்ற இளம்பெண்களை எச்சரிப்பதற்காக தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வதாக தெரிவித்துள்ளார்.
கடந்த சனிக்கிழமை, ஒன்ராறியோவிலுள்ள Sudburyயில் அமைந்திருக்கும் இரவு விடுதி ஒன்றிற்கு நண்பர்களுடன் சென்றிருக்கிறார் Cassandra. அவர்கள் பானங்கள் அருந்திக்கொண்டிருக்கும்போது, இரண்டு பெண்கள் வந்து Cassandra மற்றும் அவரது தோழி ஒருவருடன் பேச்சுக்கொடுத்திருக்கிறார்கள்.
பிறகு அவர்கள் அங்கிருந்து சென்றுவிட, தனது பானத்தை சுவைத்திருக்கிறார் Cassandra. சில நிமிடங்களுக்குள் அவருக்கு ஒவ்வாமை ஏற்பட்டு, மூக்கிலும் கண்களிலும் நீர் கொட்டத் துவங்கி, தொண்டை வீங்கி, வலது கை மரத்துப்போகத் துவங்கியுள்ளது.
உடனே Cassandraவும் அவரது தோழியும் கழிவறைக்குச் செல்ல, அவர்களிடம் முன்பு பேச்சுக்கொடுத்த பெண்கள், அவர்களைத் தொடர்ந்து பின்னாலேயே வந்திருக்கிறார்கள்.
அப்போதுதான், அந்தப் பெண்கள் தங்களுடன் பேச்சுக்கொடுத்து தங்கள் கவனத்தைத் திருப்ப, மற்றொரு பெண் தங்கள் பானத்தில் மயக்க மருந்து ஒன்றைக் கலந்திருக்கவேண்டும் என்ற சந்தேகம் Cassandraவுக்கு ஏற்பட்டுள்ளது.
தனக்கு என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பதற்காக அந்தப் பெண்கள் தங்கள் பின்னாலேயே கழிவறைக்கு வந்திருக்கக்கூடும் என்கிறார் அவர்.
Cassandra மருத்துவமனைக்குச் செல்ல, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது பானத்தில் date rape drug ஒன்று கலந்திருக்கவேண்டும் என்று தெரிவிக்க, அதிர்ச்சியடைந்துள்ளார் அவர்.
இந்த date rape drug என்பது என்னவென்றால், யாராவது இளம்பெண்களின் பானத்தில், அவருக்குத் தெரியாமல் அந்த மருந்தைக் கலந்துவிட, அவர்கள் மயங்கியிருக்கும் நேரத்தில் அவர்களை கடத்தி, வன்புணர்வுக்காளாக்க பயன்படுத்தப்படும் போதை மருந்து போன்ற ஒரு மருந்தாகும்.
ஏற்கனவே Sudburyயில் மட்டுமின்றி மொத்த ஒன்ராறியோவிலும் பெண்கள் பாலியல் தொழிலுக்காக கடத்தப்படுவது சர்வசாதாரணம் என பொலிசார் தெரிவித்துள்ள நிலையில், தனக்கும் அதற்காகத்தான் மயக்க மருந்து கொடுக்கப்பட்டிருக்கலாம் என நம்பும் Cassandra, இரவு விடுதிகளுக்குச் செல்லும் பெண்கள் கவனமாக இருக்கவேண்டும் என்றும், குறிப்பாக இதுபோல் யாராவது வந்து கவனத்தைத் திசை திருப்பி மயக்க மருந்துகளை பானங்களில் கலக்கும் அபாயம் உள்ளது என்பதால், தாங்கள் அருந்தும் பானத்தைக் கையிலிருந்து கீழே வைப்பது கூட ஆபத்துதான் என்றும் எச்சரித்துள்ளார்.