பாட்னா: முப்படைகளில் குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது. பல மாநிலங்களில் ரயில்கள், பஸ்களை போராட்டக்காரர்கள் எரித்ததால் பீதி ஏற்பட்டுள்ளது. அக்னி பாத் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று தெலங்கானா மாநிலம் செகந்திராபாத் ரயில் நிலையத்தில் இருந்த 3 பயணிகள் ரயில்களுக்கு போராட்டக்கார்கள் தீ வைத்ததில் சில பெட்டிகள் எரிந்து நாசமாகின. பல ரயில்களின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் ரயில் நிலையமே போர்க்களமாக மாறியது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார் மீதும் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர, போலீசார் துப்பாக்கியால் சுட்டனர். மேலும், தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டினர். இந்த கலவரத்தில் ஒருவர் பலி ஆனார். இவர் தெலங்கானா மாநிலம் வாரங்கல் மாவட்டத்தை சேர்ந்த ராகேஷ் ஆவார். இந்நிலையில், இளைஞர் மரணத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள தெலங்கானா முதல்வர் கே.சந்திரசேகர ராவ், இளைஞரின் உயிரிழப்பு அதிர்ச்சி அளிப்பதாகத் தெரிவித்துள்ளார். உயிரிழந்த இளைஞரின் குடும்பத்திற்கு 25 லட்ச ரூபாய் நிதி உதவியும் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்குவதாக அறிவித்துள்ளார். மேலும் ஒன்றிய அரசின் தவறான கொள்கைகளே காரணம் என்று குற்றம்சாட்டிய முதல்வர், தெலுங்கானா மக்களை மாநில அரசு பாதுகாக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.