ஒட்டுமொத்த கல்வித்துறையும் தீவிரமான மற்றும் சிக்கலான செயன்முறையைக் கடக்க வேண்டியிருப்பதாகவும், கொவிட் சூழ்நிலையைவிட பொருளாதார நெருக்கடியினால் தோன்றியுள்ள நிலையை முகாமைத்துவம் செய்வது சிக்கலாகியுள்ளது என கல்வி அமைச்சின் செயலாளர் எம்.என்.ரத்னசிங்ஹ, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தெரிவித்தார்.
நாட்டில் நிலவும் தற்போதைய கொவிட் மற்றும் பொருளாதார நெருக்கடிகளின் மத்தியில் கல்வித் துறையின் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய்வதற்காக அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு அதன் தலைவர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண தலைமையில் அண்மையில் கூடியபோதே கல்வி அமைச்சின் செயலாளர் இவ்வாறு தெரிவித்தார்.
கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம், பரீட்சைகள் திணைக்களம், கல்வி வெளியீடுகள் திணைக்களம் மற்றும் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு ஆகியவற்றின் அதிகாரிகள் இந்தக் கூட்டத்துக்கு அழைக்கப்பட்டிருந்தனர்.
- பரீட்சை வினாத்தாள்களைத் தயாரிக்கும்போது இழக்கப்பட்ட கல்வி நேரத்தைக் கவனத்தில் கொள்ளுமாறு பணிப்புரை
- சிரமங்களுக்கு மத்தியில் கல்வித் துறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதற்கு குழு பாராட்டு
- 2020ஆம் ஆண்டில் பாடசாலை மாணவர்களின் கல்வி இழப்பு 54%, ஓகஸ்ட் ஆகும்போது 88%அதிகரித்திருப்பதாகப் புலப்பட்டது
குறிக்கப்பட்ட நாட்கள் பாடசாலைகளை நடத்த முடியாமல்போனமையால் வரையறுக்கப்பட்ட காலத்தில் பாடத்திட்டத்தைப் பூர்த்திசெய்ய முடியாமை, தற்பொழுது நிலவும் எரிபொருள் பற்றாக்குறை, பிள்ளைகளின் குடும்பங்களில் காணப்படும் பொருளாதார நெருக்கடி, பெற்றோர் வேலைகளை இழக்கும் நிலை போன்ற மோசமான சூழ்நிலை காணப்படுவதாக கல்வி அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக கற்பித்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் கிராமங்களில் பல்வேறு சிரமங்கள் இருப்பதாகவும், ஒன்லைன் தொழில்நுட்பத்தின் ஊடாக கற்பிப்பது மாணவர்களுக்கு வெற்றிகரமான முறையாக இருக்காது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
கல்வி அமைச்சுக்கான ஒதுக்கீட்டுத் தொகை போதுமானதாக இல்லை என்பது மற்றுமொரு பிரச்சினை என்றும், அரசாங்க ஆதாரங்களுக்கு அப்பாற்பட்ட ஏனைய நிறுவனங்களிடமிருந்து பெறப்படவுள்ள யுனிசெப், ஆசிய அபிவிருத்தி வங்கி, உலக வங்கி போன்ற திட்டங்களின் நிதியை மறுசீரமைக்க முன்னுரிமைத் திட்டங்களை செயற்படுத்துவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
குறிப்பிட்ட காலப் பகுதிக்கு மாத்திரம் பாடசாலைகள் நடத்தப்படுவதால் முழுமையான பாடநெறிகளைப் பூர்த்திசெய்ய முடியாமை பரீட்சையுடன் தொடர்புபட்ட விடயம் என்பதால் பாடத்திட்டத்தின் எல்லையைக் குறைப்பதற்கான அவசியம் குறித்தும் குழு கவனம் செலுத்தியது. இல்லாவிட்டால் மாணவர்கள் மாத்திரமன்றி ஆசிரியர்களும் கடுமையான அழுத்தங்களுக்கு ஆளாக நேரிடும் என்றும் குழு சுட்டிக்காட்டியது.
2020 ஆம் ஆண்டில் மாணவர்களின் கற்றல் இழப்பு 54% ஆகவும், 2021ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதமாகும் போது இந்த எண்ணிக்கை 88% ஆகக் காணப்பட்டது என்றும் இங்கு புலப்பட்டது. இவ்வாறான நிலையில், பரீட்சைகளின் போது உரிய கற்றல் இழப்பைக் கருத்தில் கொண்டு மாணவர்களுக்கு அநீதி இழைக்காத வகையில் வினாத்தாள்களைத் தயாரிக்கப் பரீட்சைகள் திணைக்களம் நடவடிக்கை எடுக்க வேண்டியதன் அவசியத்தை குழு வலியுறுத்தியுள்ளது. தேசிய கல்வி நிறுவகம், கல்வி அமைச்சு மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியன ஒருங்கிணைந்து இது தொடர்பில் கொள்கை ரீதியான முடிவொன்றை எடுக்குமாறு குழு பரிந்துரைத்தது.
தற்போது நிலவும் போக்குவரத்துச் சிரமங்களைக் கருத்தில் கொண்டு மாணவர்களை அருகில் உள்ள பாடசாலையில் தற்காலிகமாக இணைக்கும் முறை தயாரிக்கப்பட்டு வருவதாகவும், இதனை இந்த ஆண்டு டிசம்பர் 31ஆம் திகதி வரை நடைமுறைப்படுத்துவதற்கு எதிர்பார்த்திருப்பதாகவும் இங்கு தெரிவிக்கப்பட்டது.
அனைத்து சிரமங்களுக்கு மத்தியிலும் க.பொ.த சாதாரணதரப் பரீட்சையை உரிய முறையில் நடாத்தியமைக்காக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மற்றும் ஏனைய அனைத்து அதிகாரிகளையும் குழு பாராட்டியுள்ளது. கொவிட் சூழ்நிலை மற்றும் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் கல்வித் துறையை பராமரிப்பதில் அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளுக்காக அனைத்து ஆசிரியர்கள் உட்பட கல்வி அதிகாரிகளையும் குழு பாராட்டியது.
தற்போதைய கொவிட் நிலைமை மற்றும் பொருளாதார நெருக்கடி சூழ்நிலையில் பல்கலைக்கழக அமைப்பில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இங்கு விவாதிக்கப்பட்டது. எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாடு போன்ற சிரமங்களை எதிர்கொள்வதால் பிரயோக ரீதியான பரீட்சைகளுக்கு மாத்திரம் மாணவர்கள் பல்கலைக்கழகங்களுக்கு அழைக்கப்படுவதுடன், ஏனைய விரிவுரைகள் ஒன்லைன் ஊடாக நடத்தப்படுவதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
உலக வங்கியின் நிதியுதவியில் நடைமுறைப்படுத்தப்படும் 100 மில்லியன் டொலர் திட்டத்தை தற்போது நிலவும் நெருக்கடியின் மத்தியில் நல்ல முறையில் பயன்படுத்துமாறு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவுக்கு, அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழு பரிந்துரைத்தது.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ தயாசிறி ஜயசேகர, கௌரவ லசந்த அழகியவன்ன, கௌரவ மொஹமட் முஸம்மில், கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ (வைத்திய கலாநிதி) சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, கௌரவ சிவஞானம் ஸ்ரீதரன், கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய, கௌரவ (வைத்தியகலாநிதி) உப்புல் கலப்பதி ஆகியோர் கலந்துகொண்டனர்.