Minister Muthusamy says Kilambakkam bus terminal will operate in September: கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம் செப்டம்பர் மாதம் பயன்பாட்டுக்கு வரும் என அமைச்சர் முத்துச்சாமி தெரிவித்துள்ளார்.
சென்னையை அடுத்த வண்டலூர் உயிரியல் பூங்கா அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் புதிய புறநகர் பேருந்து நிலையம் கட்டுமான பணி கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கி நடந்து வருகிறது.
இந்த பேருந்து நிலையம் சி.எம்.டி.ஏ.வுக்கு சொந்தமான 88.52 ஏக்கர் பரப்பளவில் ரூ.393.74 கோடி மதிப்பில் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையமாக கட்டப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் புதிய புறநகர் பேருந்து நிலையத்தில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளை வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமி ஆய்வு மேற்கொண்டார்.
இதையும் படியுங்கள்: என் மீது நடவடிக்கையா? இந்த பூச்சாண்டிக்கு பயப்பட மாட்டேன்: ஜெயக்குமார்
அப்போது அமைச்சர் முத்துச்சாமி, சி.எம்.டி.ஏ. அதிகாரிகளிடம் முடிவுற்ற பணிகள் மற்றும் இன்னும் முடிவு பெறாமல் உள்ள பணிகள் குறித்து கேட்டறிந்தார். இதனையடுத்து நடந்து முடிந்த கட்டுமான பணிகளை ஒவ்வொரு இடமாக சென்று ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது அமைச்சர் தா.மோ.அன்பரசன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துச்சாமி, கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தின் கட்டுமான பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு வரும் செப்டம்பர் மாதம் பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறக்கப்படும். இந்த பஸ்நிலையம் திறக்கப்பட்ட உடன் சென்னை புறநகர் மற்றும் சென்னை- திருச்சி தேசிய நெடுஞ்சாலைகளில் போக்குவரத்து நெரிசல் குறையும்.
மேலும் செங்கல்பட்டில் ரூ.50 கோடி செலவில் 11 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைப்பதற்கான இடம் குறித்து ஆய்வு செய்தோம். இந்த புதிய பேருந்து நிலையம் அமையும் இடமானது மாவட்ட ஆட்சியர் அலுவலகம், நீதிமன்றம் போன்ற பகுதிகளுக்கு இடையில் அமைய உள்ளது. பேருந்து நிலையத்துடன் இணைத்து பணிமனையும் அமைக்கப்பட உள்ளதால் செங்கல்பட்டு நகர்ப்புற பகுதியில் போக்குவரத்து நெரிசல் பெருமளவு குறையும்.
அதே போன்று மாமல்லபுரத்தில் ரூ.60 கோடி செலவில் 6 ஏக்கர் பரப்பளவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இவை அனைத்துக்கும் தேவையான நிதி சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் மூலமாக வழங்கப்பட உள்ளது என கூறினார்.