சென்னை: குடியரசுத் தலைவர் தேர்தல் பணிகளை மேற்கொள்ள 14 பேர் கொண்ட மேலாண்மை குழுவை பாஜக அறிவித்துள்ளது.
மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையிலான இக்குழுவில், தமிழகத்தை சேரந்த பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் வானதி சீனிவாசன் இடம்பெற்றுள்ளார்.
குடியரசுத் தலைவர் தேர்தல்வரும் ஜூலை 18-ம் தேதி நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
வேட்புமனு தாக்கல் கடந்த 15-ம் தேதி தொடங்கி வரும் 29-ம் தேதி வரை நடக்க உள்ளது. எனவே, அனைத்து கட்சிகளின் ஒருமித்த கருத்துடன் வேட்பாளரை நிறுத்த பாஜக தீவிரமாக முயற்சித்து வருகிறது.
பொது வேட்பாளர்…
அதேநேரம், காங்கிரஸ், திமுக,திரிணமூல் காங்கிரஸ், தேசியவாதகாங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து பொது வேட்பாளரை நிறுத்தவும் முயற்சித்து வருகின்றன.
இந்நிலையில், தேர்தல் பணிகளை மேற்கொள்ள மத்திய நீர்வளத் துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத் தலைமையில் 14 பேர் கொண்ட மேலாண்மை குழுவை பாஜக தேசிய தலைமை அறிவித்துள்ளது.
இக்குழுவில், மத்திய அமைச்சர்கள் கிஷன் ரெட்டி, அஸ்வினி வைஷ்ணவ், சர்பானந்த சோனோவால், அர்ஜுன் ராம் மேக்வால், பாரதிபவார், தேசிய பொதுச் செயலாளர்கள் வினோத் தாவ்டே, சி.டி.ரவி, தருண் சுக், தேசிய துணைத் தலைவர் அருணா, தேசிய செயலாளர் ரிதுராஜ் சின்ஹா, தேசிய செய்திதொடர்பாளர் சம்பித் பத்ரா, அசாம்மாநில துணைத் தலைவர் ராஜ்தீப் ராய், தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் எம்எல்ஏ ஆகிய 14 பேர் இடம்பெற்றுள்ளனர்.
இக்குழுவின் ஒருங்கிணைப்பாளராக மத்திய அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், இணை ஒருங்கிணைப்பாளர்களாக வினோத் தாவ்டே, சி.டி.ரவி ஆகியோர் செயல்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.