குடியரசுத் தலைவர் தேர்தலில் போட்டியிட தாம் விரும்பவில்லை என ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
நாட்டின் 15-வது குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வரும் ஜூலை 18-ஆம் தேதி நடைபெறுகிறது. இதனால் ஆளும் பாஜகவும், காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வேட்பாளரை தேர்வு செய்வதில் ஆர்வம்காட்டி வருகின்றன.
இந்நிலையில் கடந்த 15ஆம் தேதி டெல்லியில் மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் திமுக உள்ளிட்ட 17 எதிர்க்கட்சிகள் பங்கேற்றன. இந்த ஆலோசனையின்போது தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் பெயரை எதிர்க்கட்சிகள் பரிந்துரைத்தன. ஆனால் அவர் போட்டியிட மறுத்துவிட்டார்.
இதனைத்தொடர்ந்து ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சரும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா பெயர் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் குடியரசுத் தலைவர் தேர்தலில் தாம் போட்டியிட விரும்பவில்லை என்று பரூக் அப்துல்லாவும் அறிவித்துவிட்டார் .
மேலும் ஜம்மு காஷ்மீர் மிகவும் இக்கட்டான சூழலை கடந்து கொண்டிருக்கிறது. எனவே இந்த நிச்சயமற்ற சூழலில், ஜம்மு காஷ்மீருக்கு எனது உதவி தேவையென கருதுகிறேன். தொடர்ந்து ஜம்மு-காஷ்மீருக்கும், நாட்டிற்கும் சேவையாற்ற விரும்புவதாக பரூக் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து வேட்பாளர் தேர்வு தொடர்பாக வரும் ஜூன் 21ஆம் தேதி சரத் பவார் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM