காபூல்:ஆப்கனில் குருத்வாராவில் பயங்கரவாதிகள் நிகழ்த்திய வெடிகுண்டு தாக்குதலில் இருவர் உயிரிழந்தனர். தெற்கு ஆசிய நாடான ஆப்கன் தலைநகர் காபூலில், சீக்கியர்களின் வழிபாட்டு தலமான ‘கர்தே பர்வன் குருத்வாரா’ உள்ளது.
குண்டு வெடிப்பு
இங்கு நேற்று காலை திடீரென அடுத்தடுத்து இரண்டு பயங்கரமான குண்டு வெடிப்பு சத்தம் கேட்டது. இதைத் தொடர்ந்து விரைந்து வந்த தலிபான் ராணுவத்தினரை நோக்கி பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டனர்.இரு தரப்பிலும் நடந்த துப்பாக்கிச் சண்டையில், பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
படுகாயம் அடைந்த ஏழு பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து உள்துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அப்துல் நபி தகோர் கூறியதாவது: பயங்கரவாதிகள் குருத்வாராவில் குண்டு வெடிப்பு நிகழ்த்தி உள்ளனர். அத்துடன் தற்கொலைப் படையினர் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்தில் குருத்வாராவுக்குள் நுழைய முயன்றனர்.
அவர்களின் முயற்சியை ராணுவத்தினர் முறியடித்தனர். இந்த மோதலில் மூன்று பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்.இவ்வாறு அவர் கூறினார்.இந்த தாக்குதலில் சீக்கியர் ஒருவர் உட்பட, இருவர் பலியானதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்., கோரசன் பயங்கரவாத அமைப்பு தான் காரணம் எனக் கூறப்படுகிறது. கடந்த, 2020ல் காபூலில் உள்ள ஷோர் பஜார் குருத்வாராவில் நடந்த தாக்குதலில், 25 பேர் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதலுக்கு ஐ.எஸ்.,கோரசன் பொறுப்பேற்றது.
இந்தியா கண்டனம்
ஆப்கனில் குருத்வாராவில் நடந்த பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சீக்கியர்களை குறி வைத்து நடத்தப்பட்ட இந்த தாக்குதல் கவலை அளிப்பதாக, நம் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். ஆப்கன் நிலவரம் குறித்து இந்தியா கூர்ந்து கவனித்து வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
Advertisement