திருச்சி: 2018-ம் ஆண்டு ஏற்பட்ட பெருவெள்ளத்தால் மண் அரிப்பு ஏற்பட்டதால் கொள்ளிடம் ஆற்றிலுள்ள புதிய பாலத்தின் அடிப்பகுதியை பலப்படுத்த ரூ.6.28 கோடியில் தடுப்புச்சுவர், கான்கிரீட் தரைத்தளம் அமைக்க அரசு நிதி ஒதுக்கீடு செய்துள்ளது.
திருச்சி திருவானைக்காவல்- நம்பர் 1 டோல்கேட் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே கடந்த 1928-ல் கட்டப்பட்ட பாலம் வலுவிழந்ததால், அதனருகிலேயே ரூ.88 கோடியில் சென்னை நேப்பியர் பால வடிவத்துடன் புதிய பாலம் கட்டப்பட்டு 14.2.2016 அன்று திறந்து வைக்கப்பட்டது.
இந்த சூழலில், கடந்த 2018 ஆகஸ்ட் மாதம் பெய்த கனமழையால் ஏற்பட்ட பெருவெள்ளத்தில் கொள்ளிடம் ஆற்றிலுள்ள பழைய பாலத்தின் 18,19-வது தூண்கள் அடித்துச் செல்லப்பட்டன. வெள்ளம் குறைந்தவுடன் சென்னை ஐஐடி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளைக் கொண்ட வல்லுநர் குழுவினர் கொள்ளிடம் ஆற்றுக்குச் சென்று பாலங்களை ஆய்வு செய்தபோது, பழைய பாலம் உடைபட்டதன் காரணமாக புதிய பாலத்தில் 17, 18, 19, 20, 21 ஆகிய தூண்களுக்கு இடைப்பட்ட பகுதிகளில் சுமார் 2 மீட்டர் ஆழத்துக்கு மேல் மண் அரிப்பு ஏற்பட்டிருந்தது தெரியவந்தது.
இதனால், புதிய பாலத்தின் அடித்தளம் வலுவிழக்கும் சூழல் ஏற்பட்டதால், உடனடியாக சீரமைப்பு பணிகளை மேற்கொள்ளுமாறு தமிழக அரசுக்கு வல்லுநர் குழு பரிந்துரை செய்தது. இதையடுத்து பாலத்தின் அடிப்பகுதியை வலுப்படுத்த மேற்கொள்ள வேண்டிய திட்டப் பணிகள் குறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தனர்.
அதனடிப்படையில் இப்பணிகளை மேற்கொள்ள தற்போது ரூ.6.28 கோடி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுகுறித்து மாநில நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறும்போது, “கொள்ளிடம் ஆற்றிலுள்ள புதிய பாலத்தின் கீழ்பகுதியில் கடந்த 2018-ல் ஏற்பட்ட மண்அரிப்பின் ஆழம் தற்போதைய நீரோட்டத்தின் காரணமாக கொஞ்சம், கொஞ்சமாக அதிகரித்து வருகிறது. இதேநிலை நீடித்தால், அடுத்தடுத்து பெருவெள்ளம் வரக்கூடிய சமயங்களில் புதிய பாலத்தின் கட்டுமானத்துக்கே ஆபத்து ஏற்படலாம்.
எனவே பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கையாக, மண் அரிப்பிலிருந்து பாதுகாக்கும் வகையில் புதிய பாலத்தின் அடிப்பகுதி முழுவதையும் பலப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 17 முதல் 21 வரையிலான தூண்கள் மற்றும் அதற்கு முன்னும், பின்னும் சில மீட்டர் தூரங்கள் என சுமார் 300 மீ நீளத்துக்கு தற்போது அடித்தளம் பலப்படுத்தப்பட உள்ளது. இதற்காக பாலத்தின் அடியில் மண் அரிப்பு அதிகமுள்ள இடங்களில், தூண்களுக்கு பக்கவாட்டில் 6.5 மீ ஆழத்துக்கும், மற்ற இடங்களில் சுமார் 3 மீட்டர் ஆழத்துக்கும் பள்ளம்தோண்டப்பட்டு தடுப்புச்சுவர் மற்றும் கான்கிரீட் தளம் அமைக்கப்பட உள்ளது. இத்திட்டத்துக்கு தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்துவிட்டது. ஒப்பந்ததாரரை தேர்வுசெய்யும் நடைமுறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மிக விரைவில் இப்பணிகள் தொடங்கும் என்றனர்.