த. வளவன், மூத்த பத்திரிகையாளர்
தலைவனும் தலைவியும் காதலித்து மணம் புரிந்து வாழ்கிற போது பல உரிமைகளை தலைவிக்கு தலைவன் அமைக்கப் பெற்று வாழும் வாழ்க்கை வெற்றிகரமான வாழ்க்கை ஆகிறது. ஆனால், இந்த வெற்றிகரமான வாழ்க்கை மிகக் குறைந்த நிலைப்பாடு உடையனவாகவே குறுந்தொகைச் சூழலில் உள்ளது. அதாவது தேடிக் கண்டுபிடிக்க வேண்டிய நிலையில் தான் சூழல் உள்ளது.
தலைவன் தலைவியை விட்டுப் பிரிகிறான். நீண்ட நாட்கள் ஆகியும் அவன் வந்து சேரவில்லை. தோழி தலைவனின் வாரா இயல்பை எண்ணிக் கவலை கொள்கிறாள். அந்நேரத்தில் தலைவி “தலைவன் தனக்குத் தந்தையும் தாயும் போன்ற இயல்பினை உடையவன். அவன் நிச்சயம் நம்மை நாடி வருவார்” என்று கூறித் தோழியை தேற்றுகிறாள்.
தன்னுடைய தந்தை, தாய் ஆகியோரை ஒரு நாள் பொழுதில் மறந்துவிட்டு தலைவனுடன் இல்லறத்தைத் தொடங்குகிறாள் தலைவி. தந்தை, தாய் ஆகியோர் இருந்தால் எவ்வாறு தலைவியை வருத்தப்படாமல் காப்பார்களோ அதுபோல இனித் தலைவன் தலைவியைத் தாங்க வேண்டும். தந்தையையும், தாயையும் தன் அன்பால், தன் அரவணைப்பால் சமப்படுத்த வேண்டும். இதனைச் செய்யும் தலைவன் வெற்றி பெறுகிறான். தலைவி மகிழ்ச்சியடைகிறாள்.
“நம் நலம் தொலைய நலம் மிகச் சாஅய்
இன்உயிர் கழியினும் உரையல் அவர் நமக்கு
அன்னையும் அத்தனும் அல்லரோ
புலவி அஃது எவனோ அன்பிலங்கடையே”
என்ற பாடலில் அன்பின் காரணமாகவே ஊடலின் தோற்று நிலையான புலவி தோன்றுகிறது என்று தலைவி பேசுகிறாள். இருப்பினும் தலைவன் வராத குறை இங்கு இருக்கத்தான் செய்கிறது.
அள்ளுர் நன்முல்லையாரின் பாடல் ஒன்றில் தலைவி தலைவனுடன் இணைந்து இருக்கும் இரவுப் பொழுது கழிய மெல்ல வைகறை வந்து விடுகிறது. அவ்வைகறை வாள் போல் தோன்றி இருவரையும் பிரித்தது என்று தலைவி எண்ணுகிறாள்.
“குக்கூ என்றது கோழி. அதன் எதிர்
துட்கென்றது என் தூஉ நெஞ்சம்
தோள் தோய் காதலர் பிரிக்கும்
வாள் போல் வைகறை வந்தன்றால் எனவே”
இப்பாடலில் தோள் தோய் காதலர் என்பது தலைவன் தலைவியின் நெருக்கத்தைக் காட்டும் பகுதியாகும். வாள் என்பது இருவரின் இணைவைப் பிரிக்கும் வைகறையாகின்றது. இரவு முழுவதும் தலைவனும் தலைவியும் மகிழ்ந்து இருந்தனர் என்பதை இப்பாடல் காட்டுகிறது. இப்பாடலைத் தலைவியின் பூரிப்புடன் தொடர்புபடுத்தி உரையாசிரியர்கள் உரை காணுகின்றனர். அதற்கான எக்குறிப்பும் இல்லாத நிலையில் இந்தப்பாடல் அந்த உள் கருத்து உடையது என்று வலிந்து நோக்க இயலவில்லை. தலைவனும் தலைவியும் தோள் தோய்ந்து இன்பம் கொண்டனர் என்பதற்கு இப்பாடல் சான்றாகின்றது.
பெண்பாற் புலவர்களின் பாடல்களில் ஓரிரு பாடல்கள் மட்டுமே தலைவனுடன் தலைவி கொண்ட இன்பத்தின் சான்றினைக் காட்டும் பாடல்களாக விளங்குகின்றன. மற்றவை வருத்த மிகுதியைக் காட்டும் பாடல்களாகவே உள்ளன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“