சென்னை: “இளைஞர்கள் தேன்கூடு போன்றவர்கள், அவர்கள் எதிர்காலத்தின் மீது நீங்கள் தொடர்ந்து கல் எறிந்தால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும்” என்று எச்சரித்துள்ள தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி, “சங்பரிவாரங்களை முப்படைகளுக்குள் புகுத்தும் நடவடிக்கைதான் ‘அக்னி பாதை’ திட்டமா?” என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்.
இது குறித்து இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “முப்படைகளுக்கும் 46 ஆயிரம் படை வீரர்களைத் தேர்வு செய்யும் அக்னி பாதை என்ற திட்டத்தை மோடி தலைமையிலான பாஜக அரசு அறிவித்துள்ளது. வேலையின்மை, உறுதியற்ற தன்மை, கேள்விக்குறியான எதிர்காலம் என்ற கவலையில் இருக்கும் இந்திய இளைஞர்களுக்கு இந்த அறிவிப்பு பேரதிர்ச்சியாக அமைந்துள்ளது.
முப்படைகளின் நீண்ட கால மரபுகள் மற்றும் நெறிமுறைகளைத் தகர்க்கும் அக்னி பாதை திட்டம் ஆபத்தானது. இந்தத் திட்டத்தின் கீழ் பணியமர்த்தப்படும் வீரர்களுக்கு எதிர்காலம் குறித்த உத்தரவாதம் இல்லை. இந்த அச்சத்தின் காரணமாகத் தான் உத்தரப் பிரதேசம், பிஹார் உள்ளிட்ட பல மாநிலங்களில் இளைஞர்கள் வெகுண்டெழுந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள்.
முப்படைகளில் பணியாற்றி ஓய்வு பெற்ற அதிகாரிகளும் அக்னி பாதை திட்டத்தை முற்றிலும் எதிர்த்துள்ளனர். அக்னி பாதை திட்டத்தில் முப்படைகளில் சேர்க்கப்படும் இளைஞர்களுக்கு 6 மாதங்கள் பயிற்சி அளிக்கப்படும். தேர்வு செய்யப்பட்டவர்களில் 75 சதவிகிதம் பேர் அடுத்த 42 மாதங்களில் பணியிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்பது தான் இளைஞர்களின் எதிர்காலத்தைக் கேள்விக்குறியாக்கியுள்ளது.
75 சதவிகிதம் பேரை பணியிலிருந்து விடுவிக்கிறார்கள் என்றால், அவர்கள் சரியான பயிற்சி பெறவில்லை என்றே அர்த்தம். சரியான பயிற்சி பெறாதவர்களை எப்படி பணியாற்ற அனுமதிக்க முடியும் என்ற கேள்வியும் எழுகிறது. 42 மாதங்களுக்கு மட்டும் பணியாற்ற அனுமதிப்பது பயிற்சித் திட்டத்தையே கேலிக்குரியதாக்குகிறது.
அக்னி பாதை திட்டம் என்பது சங்பரிவாரங்களை முப்படைகளுக்குள் புகுத்தும் நடவடிக்கையோ என்ற சந்தேகம் இயல்பாக எழுகிறது. அக்னி பாதை திட்டத்தில் 17 வயது முதல் 21 வயது வரையிலான இளைஞர்களை மட்டுமே சேர்ப்பது பல கேள்விகளை எழுப்புகிறது. இதனால், பாதுகாப்புப் படையில் பணியாற்றும் வாய்ப்பை நமது இளைஞர்களில் பெரும்பாலோர் இழந்துவிடும் நிலை ஏற்பட்டுள்ளது.
குறைவான பயிற்சி, குறைவான பணிக்காலம் என்பது, தரம் மற்றும் செயல்திறன் ஆகியவற்றில் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும். சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். பெரிய தொகையில் கவனம் செலுத்தாமல், சிறிய தொகையில் கவனம் செலுத்துவது முட்டாள்தனமாகும்.
போராடும் வீரர்கள் என்பவர்கள் பெருமைக்குரியவர்கள். தன் வாழ்க்கையை நாட்டுக்கு அர்ப்பணிக்க அவர்கள் தயாராக இருக்க வேண்டும். தலைமைத்துவத்தை வெளிப்படுத்தும் திறன் கொண்டவர்களாக இருக்க வேண்டும். இந்நிலையில், இந்தத் திட்டத்தின் ஒவ்வொரு அம்சமும் ஆபத்தானது என்று இளைஞர்கள் அஞ்சுவதால் தான் தன்னெழுச்சியோடு இன்றைக்குத் தெருவில் இறங்கிப் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைக்கு அண்டை நாடுகளுடன் நட்புறவைப் பேணத் தவறியதால், நமது எல்லையில் அச்சுறுத்தல் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இந்தச் சூழலில் நன்கு பயிற்சி பெற்ற, திறமையான, எதிர்காலம் குறித்த பயம் ஏதும் இல்லாத படை வீரர்கள் அவசியம்.
இந்த நோக்கங்களை அக்னி பாதை திட்டம் கண்டுகொள்ளவே இல்லை. அவசரக் கோலத்தில் வெளியிடப்பட்டுள்ள இந்த அறிவிப்பால் ஏற்படும் மோசமான விளைவுகளைப் பற்றி நாட்டுக்கு எச்சரிப்பது நமது கடமை. எனவே, அக்னி பாதை திட்டத்தை ஒத்திவைத்துவிட்டு, பணியில் உள்ள மற்றும் ஓய்வுபெற்ற முப்படை அதிகாரிகளுடன் மத்திய அரசு ஆலோசனை நடத்த வேண்டும். தரம், செயல் திறன் மற்றும் பொருளாதாரம் ஆகிய 3 விஷயங்களில் எவ்வித சமரசமும் செய்து கொள்ளாமல் புதிய திட்டத்தை வகுக்க வேண்டும்.
அக்னி பாதை திட்டத்தினால் நாடே தீப்பற்றி எரிந்து கொண்டிருக்கிறது. 300-க்கும் மேற்பட்ட ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன. ரயில் பெட்டிகள் எரிக்கப்பட்டு சொத்துகள் கடுமையான பாதிப்பை சந்தித்து வருகின்றன. அக்னி பாதை வீரர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது என்றும், ஓய்வூதியம் வழங்குவதால் அதிக நிதிச்சுமை ஏற்படுவதாகவும் கூறப்படுகிறது. ஆனால், ராணுவத்திற்கு ஒதுக்கப்படுகிற மொத்த நிதி ஒதுக்கீட்டில் ஓய்வூதியம் 20 சதவிகிதம் தான். பணிப் பாதுகாப்பில்லாத காரணத்தால் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்ட நிலையில், அர்ப்பணிப்பு உணர்வோடு உயிரையும் துறக்க வேண்டிய ராணுவப் பணியில் அக்னி வீரர்கள் ஈடுபாட்டுடன் பணியாற்றுவார்களா?
பணமதிப்பிழப்பு நடவடிக்கை முதல் பொது முடக்க அறிவிப்பு வரை ‘எடுத்தேன், கவிழ்த்தேன்…’ என்று மோடி அரசு செயல்பட்டதால், கோடிக்கணக்கான மக்கள் வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கி அவர்களது எதிர்காலத்தை உறுதி செய்யாமல், தொடர்ந்து அவர்களுக்கு எதிரான தாக்குதலில் மத்திய அரசு ஈடுபட்டு வருவதையே அக்னிபாத் திட்டம் வெளிப்படுத்துகிறது. இளைஞர்கள் தேன்கூடு போன்றவர்கள்.
அவர்கள் எதிர்காலத்தின் மீது நீங்கள் தொடர்ந்து கல் எறிந்தால், அதன் விளைவுகள் மோசமாக இருக்கும் என்று எச்சரிக்க விரும்புகிறேன்” என்று கேஎஸ் அழகிரி கூறியுள்ளார்.