மதுரையில் சாலையில் சுற்றித்திரிந்த மனநலம் பாதிக்கப்பட்ட 9 வயது சிறுவனை மீட்டு பெற்றோர்களிடம் ஒப்படைத்தனர் மாநகர காவல்துறை.
மதுரை கீரைத்துரை பகுதியைச் சேர்ந்த தம்பதிகள் பாலமுருகன் – பானு. இருவரும் அப்பகுதியில் கூலி வேலைசெய்து வாழ்க்கை நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு 3 ஆண் குழந்தைகளும், 2 பெண் குழந்தைகளும் உள்ள நிலையில், இரண்டாவது மகனான ராஜ்கபூர் சிறுவயதில் இருந்தே மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் வளர்ந்து வருகிறார். இந்நிலையில் பானு கடைக்கு சென்றிருந்த நேரத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட சிறுவன் ராஜ்கபூர் வீட்டை விட்டு வெளியேறி சென்றுவிட்டார். வீட்டிற்கு திரும்பி வந்தபோது அங்கு மகன் இல்லாததால் அதிர்ச்சியடைந்த பானு மகனை பல இடங்களில் தேடி அலைந்துள்ளார்.
இந்நிலையில் தெற்கு மாசி வீதி பகுதியில் சிறுவன் ராஜ்கபூர் இன்று அதிகாலை தனியாக சாலையில் நடந்து சென்றதை பார்த்த ஐடி நிறுவன ஊழியரான மணிகுமார் என்பவர் காவல்துறைக்கு கொடுத்த தகவலின்பேரில் விளக்குத்தூண் காவல்துறையினர் சிறுவனை காவல்நிலையம் அழைத்து வந்து பேசியதில் சிறுவன் கீரைத்துரைப் பகுதியை சேர்ந்தவர் என்பதை கண்டறிந்து பெற்றோர்களிடம் பத்திரமாக ஒப்படைத்தனர். மனநலம் பாதிக்கப்பட்ட தனது மகனை மீட்டு ஒப்படைத்த காவல்துறையினருக்கு தாய் பானு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM