சென்னை: சென்னையை அருகே 5 துணை நகரம் அமைக்கும் பணியை தமிழகஅரசு தீவிரப்படுத்தி உள்ளது. அதற்காக சிறப்பு அதிகாரிகளை நியமனம் செய்துள்ளது.
சென்னையை ஒட்டி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமழிசை, திருவள்ளூர், மீஞ்சூர் ஆகிய இடங்களில் புதிய துணை நகரங்கள் அமைக்கும் திட்டத்தை தமிழகஅரசு முடுக்கி விட்டுள்ளது. அதற்காக ஒரு தலைமை திட்ட அதிகாரி மற்றும் 16 உதவி திட்ட அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
துணைநகர் தொடர்பாக ஏற்கனவே சட்டப்பேரவை மானிய கோரிக்கை விவாதத்தின்போது, தெரிவிக்கப்பட்டது. ‘சென்னை பெருநகரில் உள்ள ஐந்து இடங்களில், புதிய துணை நகரங்கள் ஏற்படுத்தப்படும்’ என சமீபத்தில் சட்டசபையில் அறிவிக்கப்பட்டது. அப்போது, திருமழிசை துணை நகரத்தில் 138 ஏக்கரில் சுமார் 9,700 அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டும் பணி விரைவில் தொடங்கும் என்று வீட்டுவசதித் துறை அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருமழிசை, திருவள்ளூர், மீஞ்சூர் ஆகிய இடங்களில் புதிய துணை நகரங்கள் ஏற்படுத்துவதற்கான பூர்வாங்க பணிகளை துவக்க சி.எம்.டி.ஏ., முடிவு செய்து, ஒரு தலைமை திட்ட அதிகாரி தலைமையில், 16 உதவி திட்ட அதிகாரிகள் அடங்கிய சிறப்பு பிரிவை உருவாக்கி சி.எம்.டி.ஏ., நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.
துணைநகர் தொடர்பாக இந்த அதிகாரிகள் வாரம் ஒரு முறை ஆய்வு கூட்டம் நடத்தி, அடுத்தக்கட்ட பணிணிகளை மேற்கொள்ள சிறப்பு பிரிவு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதன் காரணமாக, ஐந்து இடங்களிலும், புதிய துணை நகரங்கள் அமைக்கும் பணி விரைவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டு, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைப்பார் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த துணைநகரங்களில், எதிர்கால தேவையை கருத்தில் வைத்து, மக்களுக்கு தேவையான கல்வி, வேலைவாய்ப்பு வசதிகள் ஒரே இடத்தில் கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், திட்டமிட்ட முறையில் சாலைகள், பூங்காக்கள், விளையாட்டு வசதிகள், மழை நீர் வடிகால்கள், கழிவு நீர் வடிகால் அமைப்புகள் ஆகியவை, முன்கூட்டியே திட்டமிட்டு உருவாக்கப்படும் என்றும், வாகன நிறுத்துமிடங்கள், கிடங்கு வசதிகளை உள்ளடக்கியதாக துணை நகரம் அமையும் என்று சிஎம்டிஏ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், இந்த நகரத்தில், குடியிருப்புகள், வணிக, தொழில் பகுதிகள், எங்கெங்கு எப்படி இருக்க வேண்டும் என்பது முறையாக திட்டமிடப்பட்டு அமைக்கப்படும் என்றும், ஏற்கனவே அமைக்கப்பட்ட மறைமலை நகர், மணலி புதுநகர் திட்டங்களில் காணப்பட்ட குறைகள் இல்லாத வகையில், புதிய துணை நகரங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.