முதன்முறையாக கணினி வழித்தேர்வை நாளை டிஎன்பிஎஸ்சி நடத்த உள்ளது. மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு நாளை காலை 9 மணிக்கும் பிற்பகல் 1.30 மணிக்கும் கணினி முறையில் நடத்தப்பட இருக்கிறது.
வினாக்கள் ஏறுமுக வரிசைப்படி ஒவ்வொன்றாக கணினி திரையில் தோன்றும். அதில் தேர்வர்கள் ஒவ்வொரு வினாவிற்கும் விடை அளிக்கலாம். சரியான விடையை தேர்வு செய்ய வேண்டும் என்றால் கொடுக்கப்பட்ட விடை தெரிவுகளில் ஒன்றின் மீது கிளிக் செய்ய வேண்டும். அதன் பின் அதை சேமிக்க வேண்டும். அதை செய்ய தவறினால் விடைகள் சேமிக்கப்படாது என தேர்வாணையம் அறிவித்துள்ளது.
தேர்வு தொடங்கியபோது 180 நிமிடங்கள் இருப்பதாக காட்டப்படும். பின் அந்த நேரம் படிப்படியாக குறைந்து பூஜ்யம் நிலையை எட்டியவுடன் தேர்வானது கணினி அமைப்பால் தானாக சமர்ப்பிக்கப்பட்டு விடும் என டிஎன்பிஎஸ்சி கூறியுள்ளது.
கணினி வழித்தேர்வு என்பதால் வழக்கத்தை விட விரைவாக முடிவுகள் வெளியிடப்படும் என்று தேர்வர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. அதே வேளையில் இம்முறை மிகவும் எளிதாக இருக்கும் பட்சத்தில் குரூப் 2, குரூப் 4 போன்ற லட்சக்கணக்கானோர் பங்கேற்கும் தேர்வுகளையும் மிக வேகமாக நடத்தி முடிக்க இந்த கணினி வழித்தேர்வை தேர்வாணையம் கையில் எடுக்கும் எனவும் கூறப்படுகிறது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM