நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கடந்த சில தினங்களாக தீவிர விசாரணை நடத்தினர். அப்போது, ராகுல் காந்திக்கு எதிரான அமலாக்கத்துறையின் இந்த விசாரணையை எதிர்த்து அந்தக் கட்சியினர் டெல்லி உள்ளிட்ட பல இடங்களில் போராட்டம் நடத்தினர். இந்தப் போராட்டத்தில் கரூர் காங்கிரஸ் எம்.பி ஜோதிமணியை குண்டுகட்டாக தூக்கிச் சென்று டெல்லி போலீஸார் கைதுசெய்தனர்.
அப்போது ஜோதிமணியை டெல்லி போலீஸார் கொடூரமாக தாக்கியதாக, அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், “டெல்லி காவல்துறையினர் என்னை கிரிமினல் போல கைதுசெய்திருக்கின்றனர். மேலும், எனது ஆடையை கிழித்திருக்கின்றனர். ஒரு மணி நேரமாக தண்ணீர் கேட்டும் எங்களுக்கு தண்ணீர்கூட தரவில்லை.
ஒரு பெண் நாடாளுமன்ற உறுப்பினருக்கு இதுபோன்ற அவல நிலை ஏற்பட்டிருக்கிறது. இது மாதிரியான கொடுமை யாருக்கும் நடக்கக்கூடாது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்” எனப் பேசியிருந்தார். மேலும் இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் புகாரளிக்கப்பட்டது. மேலும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இந்தச் சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்திருந்தன.
இந்த நிலையில், மக்களவை காங்கிரஸ் உறுப்பினர்களின் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரியின் அலுவலகம் சார்பில், “காங்கிரஸ் எம்.பி ஜோதிமணி டெல்லி ஆர்.எம்.எல் மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நேஷனல் ஹெரால்டு வழக்கை எதிர்த்து நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, டெல்லி போலீஸார் அவர்மீது தடியடி நடத்தியதாகக் கூறப்படுகிறது” என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.