நாமக்கல்: தன்னை முன்னிலைப் படுத்துவதற்கு அண்ணாமலை பொய்யான தகவலை கூறி வருகிறார், படித்த ஒரு ஐபிஎஸ் அதிகாரி இவ்வாறு கூறுவதா என்று பல்வளத்துறை அமைச்சர் நாசர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாமக்கல் அருகே அக்கியம்பட்டி மற்றும் முதலைபட்டி பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம், லத்துவாடி பால் குளிரூட்டும் நிலையம், புதிய பால் பண்ணை அமைய உள்ள இடம் ஆகிய இடங்களில் தமிழக பால்வளத்துறை அமைச்சர் சாமு நாசர் ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் கூறியதாவது: “பால்வளத் துறையில் 77 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இது கடந்த ஆட்சியில் ஏற்பட்ட நஷ்டம். இதை சமாளிக்க பால் பொருட்களை ஏற்றுமதி மற்றும் புதிய ரக பால்பொருட்கள் தயாரிக்கப்பட்டு அதன் மூலம் சரி செய்யப்படும். பால்வளத் துறையில் காலியாக உள்ள ஆயிரம் பணியிடங்களை பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். பால் பொருட்கள் விற்பனை தொடர்பாக பாஜக தலைவர் அண்ணாமலை, ஒப்பந்தப் புள்ளியில் சேர்க்காத ஒரு பொருளை சேர்த்ததாக கூறி பொய்யான தகவலை மக்களிடம் பரப்பி வருகிறார்.
அண்ணாமலை தன்னை முன்னிலைப்படுத்துவதற்கு பொய்யான தகவலை கூறி வருகிறார். படித்த ஒரு ஐபிஎஸ் அதிகாரி இவ்வாறு கூறுவது சரியல்ல. போலீஸ் என்றால் ஒவ்வொரு எழுத்துக்கும், ஒழுக்கத்தைக் கடைப்பிடிக்கக் கூடிய வார்த்தைகள் இருக்கிறது. குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க துடிக்கிறார். அண்ணாமலையின் இந்தப் பேச்சு ஏற்க கூடியது அல்ல. ஐபிஎஸ் அதிகாரி பேசக்கூடிய பேச்சா இது. சாதாரண போலீஸ்காரர் கூட இப்படி பேசமாட்டார். நோட்டா ஓட்டுகளை விட அவர் குறைவான வாக்குகளை வாங்குவார்.
திராவிட மாடல் ஆட்சி நடக்கிற இந்தக் காலகட்டத்தில் ஒருபோதும் பாஜக காலூன்ற முடியாது. எப்படியாவது ஓட்டு வாங்க வேண்டும் என்பதற்காக பொய் சொல்லி வருகிறார்” என்று அமைச்சர் நாசர் கூறியுள்ளார்.
இந்நிகழ்ச்சியில் சுற்றுலாத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன், மாநிலங்களவை உறுப்பினர் கேஆர்என் ராஜேஸ்குமார் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.