செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் கொரோனா தொற்று தடுப்பு பணிகள் தொடர்பாக ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதில் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கலந்து கொண்டார்.
அதன் பிறகு அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது, தமிழகத்தில் கொரோனா அதிகரித்து வருகிறது. சென்னையை அடுத்தப்படியாக செங்கல்பட்டில் தான் அதிக பாதிப்பு இருக்கிறது. செங்கல்பட்டு மாவட்டத்தில் நாளொன்றுக்கு 500 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதனை ஆயிரமாக அதிகரிக்க சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அறிவுறுத்தி உள்ளோம்.
செங்கல்பட்டு மாவட்டத்தில் கொரோனா சிகிச்சைக்காக 400 படுக்கைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று பரவல் விகிதம் 10 சதவீதத்தை தாண்டும் போது புதிய கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என்பது மத்திய அரசின் விதிமுறை. ஆனால் தமிழகத்தில் 2,3 சதவீதத்திலேயே பாதிப்பு விகிதம் உள்ளது. கொரோனா பரவல் மேலும் அதிகரித்தால் கட்டுப்பாடுகள் விதிக்க வாய்ப்புள்ளது என தெரிவித்துள்ளார்.