சென்னை: தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக் கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழகப் பகுதிகளின் மேல், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக 19-ம் தேதி தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக் கூடும். 20, 21, 22-ம் தேதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 94 டிகிரி ஃபாரன்ஹீட் அளவில் இருக்கக்கூடும்.