திட்டத்தை திரும்ப பெறுங்கள் – மத்திய அரசுக்கு வலியுறுத்தும் தமிழக முதல்வர்.!

‘அக்னிபாதை’ எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று, பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து இன்று அவர் விடுத்துள்ள அறிக்கையில், “இராணுவத்தில் ஒப்பந்த முறையில் ஆள் சேர்ப்பதற்கு மத்திய பாஜக அரசு புதிதாகக் கொண்டு வந்துள்ள “அக்னிபாதை” திட்டத்திற்குக் கடுமையான எதிர்ப்புத் தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். 

நாட்டின் பாதுகாப்பின் மீது அக்கறை கொண்டுள்ள பல முன்னாள் ராணுவ அதிகாரிகள் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். மாதமிருமுறை வெளிவரும் பிரபல ஃப்ரன்ட்லைன் பத்திரிக்கைக்கு அளித்துள்ள பேட்டியில், முன்னாள் மேஜர் ஜெனரல் ஜி.டி பக்ஸி, “இத்திட்டத்தைக் கேள்விப்பட்டுத் திடுக்கிட்டுப் போனேன். For God’s sake please don’t do it” என்று தனது அச்சத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.

இன்னொரு ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரல் ராஜ் கத்யன், “4 ஆண்டு ஒப்பந்தப் பணியில் சேரும் ராணுவ வீரர், தன் உயிரைத் தியாகம் செய்யும் அளவிற்குப் போரில் பணியாற்றுவார் என எதிர்பார்க்க முடியாது” என்று கவலை தெரிவித்துள்ளார்.

அரசியல் கட்சிகள் தவிர, நாட்டின் பாதுகாப்புப் பணியில் பல்லாண்டுகள் பணியாற்றிய பல முன்னாள் ராணுவ அதிகாரிகளும், “ராணுவப் பணி பகுதிநேரப் பணி” அல்ல என்றும், “இதுபோன்ற தேர்வு, ராணுவத்தில் கட்டுப்பாட்டைக் கெடுக்கும்” என்று கூறி, இந்தத் தேர்வுத் திட்டம் ஆபத்தானது என எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இந்திய நாட்டின் பாதுகாப்பினைக் கருத்தில் கொண்டு, லட்சக்கணக்கான இளைஞர்களின் ராணுவப் பணி எனும் லட்சியத்தைச் சிதைக்கும் இந்த “அக்னிபாதை” எனும் தேச நலனுக்கு எதிரான திட்டத்தை உடனடியாக மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.