திறமைக்கு அதிகமாகவே என்னை மக்கள் தூக்கி பிடித்திருக்கிறார்கள் : வெற்றி விழாவில் கமல் பேச்சு

கமல்ஹாசன், விஜய்சேதுபதி, பஹத் பாசில் நடித்த விக்ரம் படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படம் 300 கோடிக்கு மேல் வசூலித்து புதிய சாதனை படைத்துள்ளது. படத்தின் வெற்றி விழா கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் நேற்று இரவு நடந்தது. இதில் கலந்து கொண்டு கமல்ஹாசன் பேசியதாவது:

இந்த வெற்றிக்கு நான் மட்டுமே சொந்தம் கொண்டாட முடியாது. இங்குள்ள யாரும் கொண்டாட முடியாது, அனிருத் இசை அமைத்தார் என்றால் அவருக்கு பின்னால் 20 பேர் பணியாற்றி இருக்கிறார்கள். லோகேஷ் கனகராஜ் இயக்கினார் என்றால் அவருக்கு 16 உதவியாளர்கள் இருந்தார்கள். இப்படி எல்லோராலும் தான் இந்த வெற்றி சாத்தியமானது.

ஒரு படத்தில் பணியாற்றும் 200 பேரும் சரியாக வேலை செய்தால் தான் வெற்றி கிடைக்கும் ஒருவர் தவறு செய்தால் கூட படம் தோற்று விடும். கடந்த 10 ஆண்டுகளில் இந்த படத்தைத்தான் நான் எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளியிட்டிருக்கிறேன். இந்த படத்தின் மூலம் மக்கள் எனக்கு கொடுத்திருக்கும் பரிசு அவர்களின் உழைப்பில் வந்த பணத்தை. அதைத்தான் நான் சிறந்த பரிசாக கருதுகிறேன்.

என் திறமைக்கு அதிகமாகவே மக்கள் என்னை தூக்கி பிடித்திருக்கிறார்கள். என்னை விட திறமையான பலர் சரியான வாய்ப்புகள், குருக்கள் கிடைக்காமல் காணாமல் போயிருக்கிறார்கள். இந்த வெற்றியால் நான் சோர்ந்துவிட மாட்டேன். ஈசி சேரில் அமர்ந்து விட மாட்டேன். ஓடிக்கொண்டே இருப்பேன். இந்த படத்தில் 75 கோடி ஷேர் வரும் என்பதை வெளிப்படையாகவே கூறுகிறேன். எனக்கு எந்த தயக்கமும் இல்லை.

இவ்வாறு கமல் பேசினார்.

இதனிடையே இந்த வெற்றிக் கொண்டாட்டத்தின் போது உதயநிதி, லோகேஷ், விஜய் சேதுபதி, அனிருத் ஆகியோருக்கு தனித்தனியாக பாசமாக கன்னத்தில் முத்தம் கொடுத்துள்ளார் கமல். இந்த போட்டோக்கள் வைரலாகின.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.