மதுரை: ரூ.10,000 கோடி தொழில் முதலீடுகளை ஈர்க்கவே நான் 25 நாட்கள் வெளிநாடுகளுக்கு சென்றிருந்தேன் என்று நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கூறியுள்ளார்.
மதுரை எல்லீஸ் நகரில் தொழிலணங்கு தலைப்பில் மகளிர் சுய உதவிக்குழுக்களை சார்ந்த உறுப்பினர்களை தொழில் முனைவோர்களாக உருவாக்கும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. ஆட்சியர் அனீஸ் சேகர் தலைமை வகித்தார். இதில் கலந்து கொண்ட நிதி மற்றும் மனித வள மேலாண்மை துறை அமைச்சர் பிடிஆர்.பழனிவேல் தியாகராஜன், நிகழ்ச்சியை தொடங்கி வைத்துப் பேசினார்.
அப்போது அவர், “எந்த ஒரு அரசியல் தத்துவம், கொள்கையை கூறிகொண்டே இருக்கிறமோ, அதை ஒரு விநாடி கூட மறக்காமல் எந்த நிகழ்விலும் விவாதத்திலும் ஒரு சட்டத்தை உருவாக்கும் போதும் கூட அந்த தத்துவத்திற்கும், கொள்கைக்கும் ஏற்புடையதா? இல்லையா? என்று சிந்தித்து செயல்பட வேண்டும். அந்த அடிப்படையில்தான் தற்போது தமிழக முதல்வர், அமைச்சர்கள் செயல்படுகின்றனர். பெண்கள் முன்னேற்றத்திற்கும், உரிமைக்கும் திமுக அரசு முக்கியத்துவம் கொடுக்கிறது. தத்துவமும், கொள்கைக்கும் எந்தளவுக்கு முக்கியமோ அதற்கு ஏற்ப செயல்திறனும், திட்டமும் தேவை.
அதை வெற்றிகரமாக செயல்படுத்துவதற்கு சிந்தனை தேவை. சுய உதவிக்குழுக்கள் 23 ஆண்டுகளுக்கு முன் உருவாக்கப்பட்டது. இநு்த குழுக்கள், சில இடங்களில் சிறப்பாக நடந்ததும், சில இடங்களில் ஏற்றத்தாழ்வுகளுடன் நடந்தது. கணக்கு பட்டியல் கூட சில இடங்களில் சரியாக இல்லை. தற்போது அவற்றையெல்லாம் சரி செய்து தற்போது சுய உதவிக்குழு உறுப்பினர்களை தொழில் முனைவோராக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன. அதற்காக பெண்கள் சுய உதவிக்குழுக்களுக்கு ஊக்கமும், உதவிகளும் தமிழக அரசு அளித்து வருகிறது. நான் நேற்று சென்னையில் இருந்தேன்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வேண்டும் என்பதற்காகவே நான் சென்னையில் 4 மணிக்கு எழுந்து மதுரைக்கு 6 மணி விமானத்தில் வந்தேன். மீண்டும் 2 மணி விமானத்தில் சென்னை செல்ல உள்ளேன். நான் 30 ஆண்டுகள் வெளிநாடுகளில் உயர்ந்த பொறுப்புகளில் பெரிய நிறுவனங்களில் இருந்துள்ளேன். தமிழகத்தில் வளர்ச்சி உருவாக்க வேண்டுமென்றால் உலக அளவில் பெரிய நிறுவனங்களுடன் தொடர்பு வேண்டும். அந்த தொடர்புகளை கொண்டுதான் தற்போது நான் உலகின் பெரிய நிறுவனங்களில் இருந்து 10 ஆயிரம் கோடி அளவில் முதலீடுகள் ஈர்க்க வேண்டும்.
அதற்காக நான் கடைசி 25 நாட்கள் அமெரிக்கா, கனடா, சிங்கபூர், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து நாடுகளுக்கு சென்றிருந்தேன். ஒவ்வொரு மாவட்டத்திலும், சட்டப்பேரவைத் தொகுதியிலும் அமைச்சர்களும், எம்எல்ஏ-க்களும் பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் கொடுத்தால்தான், மகளிர் சுய உதவிகளுக்கும், பெண்கள் உரிமை, கல்வி, சொத்து உரிமை பெற்றுக் கொடுக்க முடியும். இந்த அடிப்படையிலே நாங்கள் செயல்படுகிறோம்.” என்று அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணையாளர் சிம்ரன் ஜித் சிங் காலோன் மற்றும் தொழில் முனைவோர்கள், மகளிர் சுய உதவிக்குழு உறுப்னர்கள் கலந்து கொண்டனர்.