சென்னை: ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தங்களை விடுவிக்கக் கோரி நளினி, ரவிச்சந்திரன் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. மேலும் இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தை நாடவும் தலைமை நீதிபதி அமர்வு அறிவுறுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுதலை செய்து கடந்த மாதம் தீர்ப்பளித்தது. இதையடுத்து ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் தங்களை விடுவிக்கக் கோரி நளினி, ரவிச்சந்திரன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தனித்தனியாக வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கு விசாரணை, தலைமை நீதிபதி முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி என்.மாலா ஆகியோர் அடங்கிய அமர்வில் நடந்தது. இந்நிலையில், நீதிபதிகள் நேற்று பிறப்பித்துள்ள தீர்ப்பி்ல், ‘‘பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுவித்து உத்தரவிட்டது போல, இந்த வழக்கில் தங்களால் எந்த உத்தரவையும் பிறப்பிக்க இயலாது. இதே கோரிக்கை தொடர்பாக ஏற்கெனவே தொடரப்பட்ட வழக்குகளை இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு தள்ளுபடி செய்துள்ள நிலையில், அதே விவகாரம் தொடர்பான வழக்கு நிலைக்கத்தக்கதல்ல.
இந்திய அரசியல் சாசனத்தின் 161-வது பிரிவின் கீழ் ஆயுள் தண்டனை கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வது தொடர்பாக ஆளுநரின் கையெழுத்து அவசியம் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் இந்த விஷயத்தில் தமிழக அரசே முடிவு எடுக்க முடியும் எனக்கூற முடியாது.
பேரறிவாளன் வழக்கில் உச்ச நீதிமன்றம் தனக்குரிய பிரத்யேக வானளாவிய அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுவித்து உத்தரவிட்டுள்ளது. அதேபோல தங்களால் செயல்பட முடியாது.
மேலும் பேரறிவாளன் வழக்கிலும் ஆளுநரின் ஒப்புதல் இல்லாமல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டவர்களை விடுவிக்கலாம் என உச்ச நீதிமன்றம் கூறவில்லை. சட்டத்துக்குட்பட்டு முடிவு எடுக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தியுடன் சேர்ந்து 9 போலீஸார் உட்பட 15 அப்பாவி பொதுமக்களும் உயிரிழந்துள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தை எல்லாம் ஆளுநர் பரிசீலித்துத்தான் அமைச்சரவையின் தீர்மானம் சரியா, தவறா என்ற முடிவு எடுக்க முடியும்.
எனவே, நளினி, ரவிச்சந்திரன் ஆகியோரை விடுவிக்கும்படி தமிழக அரசுக்கு இந்த நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க இயலாது என்பதால் இந்த வழக்குகளை தள்ளுபடி செய்கிறோம். அதேநேரம் மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து சட்ட ரீதியாக பரிகாரம் தேடிக்கொள்ள எந்த தடையும் இல்லை’’ என தீர்ப்பளித்துள்ளனர்.
உச்ச நீதிமன்றம் செல்வோம்
இந்த தீர்ப்பு தொடர்பாக நளினி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் எம்.ராதாகிருஷ்ணன் கூறும்போது, ‘‘உச்ச நீதிமன்றத்துக்கு உள்ள பிரத்யேக அதிகாரம், உயர் நீதிமன்றத்துக்கும் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி விடுதலை செய்வார்கள் என நினைத்தோம். 7 பேரில் ஒருவரை விடுவித்துள்ள நிலையில் நளினி உள்ளிட்டோரை விடுதலை செய்யாமல் இருப்பது அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. விரைவில் உச்ச நீதிமன்றம் சென்று இந்த வழக்கில் வெற்றி பெறுவோம்’’ என்றார்.
இதற்கிடையே, ‘‘சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, பேரறிவாளன் விடுதலை மூலமாக காயம்பட்ட காங்கிரஸாரின் நெஞ்சுக்கு மருந்து அளிப்பதாக உள்ளது’’ என காங்கிரஸ் தரப்பு வழக்கறிஞர் சி.கனகராஜ் தெரிவித்துள்ளார்.