தன்னை ஒரு பயண விரும்பியாக அநேகர் அடையாளம் காட்டிக்கொள்வது அண்மைக் காலங்களில் அதிகரித்திருப்பதை வர்த்தக வாழ்வியலின் ஓர் ஆடம்பர வெளிப்பாடாகவே கருதத் தோன்றுகிறது. பயணங்கள் இப்போது எளிதில் சாத்தியப்படுகின்றன. விரல் சொடுக்கில் உலகின் எந்த மூலைக்கும் பயணப்படும் வாய்ப்புகள் இன்று கண்முன் விரிந்திருக்கின்றன. மாயாவிக் கதைகளின் காட்சிகள்போல் ஓரிடத்தில் மறைந்து, மற்றோர் இடத்தில் தோன்றுவது இப்போது நிஜமாகியிருக்கிறது. தொழில்நுட்பம் இத்தகைய பல நிஜங்களைச் சாத்தியமாக்கியிருப்பது மறுக்கவியலாத உண்மைதான். என்றாலும், அதற்கீடாக நாம் கொடுக்கப்போகும் விலை, கற்பனைக்கெட்டாத அளவுக்கு அழிவை ஏற்படுத்த வல்ல இயற்கைச் சீற்றங்களின் வடிவில் அவ்வப்போது நம்மை அச்சுறுத்துவதும் நிகழ்ந்துகொண்டுதானிருக்கிறது.
கடந்த சில வருடங்களில் மட்டும் இமயமலைப் பகுதிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு நிலச்சரிவுகளும் வெள்ளப்பெருக்கும் தொடர்ந்து ஏற்படுவதை, செவிவழிச் செய்தியாக நாம் கடந்துவருகிறோம். அங்கு வாழ்ந்த அனுபவத்திலிருந்து நான் பெற்ற பாடங்கள் முற்றிலும் வேறானவை. மலைகளைக் குடைந்து, பொங்கிப் பெருகும் நதிகளின் குறுக்கே அணைகள் அமைத்து, நீராற்றல்கொண்டு மின்சாரம் தயாரித்து, மலைகளின் குறுக்கே ராட்சத இரும்புப் பாலங்கள் அமைத்து சுற்றுலா வசதிகளை மேம்படுத்திக் கொடுத்து… மக்களின் பொருளாதார நிலையை உயர்த்தும் முயற்சிகள் என்று அரசாங்கங்கள் சூளுரைத்தாலும் உண்மையில் அங்கு வாழும் மக்கள் இவற்றையெல்லாம் மனதார விரும்புகிறார்களா என்ற கேள்வி எழமலில்லை. நான் சந்தித்த சில மலையக மக்கள் தங்கள் மலைகளின் இயற்கை வளங்களை தனியார் நிறுவனங்களும் அரசாங்கமும் சேர்ந்து சீர்குலைப்பதாகவே கருதுகின்றனர்.
ஜோகிந்தர் நகர் எனும் அழகிய மலைப் பள்ளத்தாக்கில் தேநீர் இடைவேளைக்காக நின்றோம். மழை குறைந்து இலையுதிர்காலம் தொடங்கியிருந்தது. கண்ணுக்கெட்டும் தூரம் வரை மலை முகடுகள் மடிப்புகளாக விரிந்திருந்தன. மரங்கள் பல வண்ணங்கள் சூடியிருந்தன. மலை முடுக்குகளிலெல்லாம் காற்று மோதியதில் உண்டான ஓசை ஒருவிதத்தில் கடல் அலைகள் கரையை முட்டும்போது எழும் ஓசைக்கு ஒப்பானதாக இருந்தது. கண்களை மூடி அவ்வோசையின் மீது கவனம் செலுத்தினேன்.
கடலலைகள் புரள்வதுபோலவே அவ்வோசை மனதில்பட்டு எதிரொலித்தது. கண்களைத் திறந்தபோது மலைத்தொடர்களின் மடிப்புகள் கடலலைகள்போல் காட்சியளித்தன. புறத்தில் தோன்றிய காட்சிகளெல்லாம் மறைந்து, அகக்கண் விழித்துக்கொண்டு மலை நிலத்தையெல்லாம் மறையச் செய்து கருநீலக் கடலை ஓசை வடிவில் உணர்த்தியது. கைகளில் வைத்திருந்த தேநீர்க் கோப்பையை நண்பர் வற்புறுத்தி வாங்கினார். பாதியளவு மட்டுமே குடித்து, மிச்சமிருந்த தேநீரை ஒரு மடக்கில் குடித்துவிட்டு அங்கிருந்து பயணத்தைத் தொடர்ந்தோம்.
குல்லு மற்றும் மணாலி சுற்றுலாத் தலங்களாக அறியப்பட்டாலும் ஜோகிந்தர்நகர், பாலம்பூர், ஜியோல், காங்ரா போன்ற பெரிதும் வெளியில் தெரியாத ஊர்களில்தான் மலையழகை அதன் உண்மையுருவில் கண்டுணர முடியும்.
என்று சில ஊர்களைக் கடக்கும்போது மனதில் தோன்றுவதுண்டு. ஜோகிந்தர் நகர் அவ்வுணர்வை என்னுள் கிளர்த்தியது.
ஜோகிந்தர் நகரைக் கடந்து மண்டியை அடைந்தபோது நேரம் நண்பகலைக் கடந்திருந்தது. மதிய உணவுக்காக இளைப்பாறினோம். உணவகத்தில் இளைஞர்கள் அதிகம் தென்பட்டனர். கேரளாவிலிருந்து இரு சக்கர வாகனங்களில் வந்திருந்தனர் சிலர். பிரபல புல்லட் நிறுவனமொன்று நடத்தும் இமயமலை சாகசப் பயணங்கள் ஆண்டுதோறும் நடைபெறுவது வழக்கம். அவ்விளைஞர்கள் அதில் தேர்வானவர்கள் என்பது அவர்களது உடுப்புகள் மற்றும் வண்டிகளிலிருந்து தெளிவாகத் தெரிந்தது. அனைவரும் தத்தமது பயண அனுபவங்களை சிலாகித்துப் பேசிக்கொண்டிருந்தனர்.
மண்டியிலிருந்து குல்லு சுமார் தொண்ணூறு கிலோமீட்டர் தொலைவிலிருந்தது. இரண்டரை மணி நேரத்தில் சென்றடைந்துவிடலாம் என்று அனுமானித்துக்கொண்டிருந்தோம். அப்போது உணவகத்தில் பணிபுரியும் ஒருவர் நாங்கள் பேசுவதை கவனித்தவராக “அவ்வளவு சுலபமாக நீங்கள் குல்லுவை அடைந்துவிட முடியாது. மலைச்சாலையை விரிவுபடுத்தும் பணி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது. அங்கு மலையை உடைத்துக்கொண்டிருக்கிறார்கள். மறுபுறத்தில் நீர்மின்சார புராஜக்ட்டுக்காக பியாஸ் நதியின் குறுக்கே அணையெழுப்புகிறார்கள். பாறைகள் உடைந்து விழும் அபாயம் அதிகமிருக்கிறது. கனரக வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக மட்டுமே கடந்து செல்ல முடியுமென்பதால் உங்கள் பயண நேரம் கூடுவதற்கு வாய்ப்பு அதிகம்.” அவரது குரலில் ஒரு வெறுமை தொனித்தது. “மலையை உடைக்கிறார்கள்” என்றபோது அவர் குரல் அமிழ்ந்து பின் எழுந்தது. “மாற்று வழி ஏதேனும் இருக்கிறதா குல்லுவை சென்றடைவதற்கு?” என்றேன். “மாற்று வழியில் செல்ல நீங்கள் நான்கு மலைகளை ஏறி இறங்கவேண்டியிருக்கும். நீங்கள் யோசித்து முடிவெடுத்துக்கொள்ளுங்கள்” என்று கூறிவிட்டுச் சென்றார்.
குல்லுவில் அன்றிரவு தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்திருந்தோம். பியாஸ் நதியைப் பார்வையிட்டபடி ஒரு தங்கும் விடுதி. கணிணித்திரையில் அவ்விடத்தைக் கண்டபோதே மனம் பரவசமடைந்தது. அங்கே சென்று தங்கப்போகிறோமென்கிற எண்ணம் பரவசத்தைப் பன்மடங்கு கூட்டியது. பியாஸ் நதி ஓசை வடிவில் செவிகளினூடே பாய்ந்து மூளையையும் மனத்தையும் நிறைத்திருந்தது.
குல்லுவை அடைவதற்கு நாற்பது கிலோமீட்டர் இருந்தபோது வானில் புகை மேகங்கள் சூழ்ந்திருப்பதை தூரத்திலிருந்தே காண முடிந்தது.
ராட்சத புல்டோசர்கள்கொண்டு ஆங்காங்கே மலையை இடித்துக்கொண்டிருந்தனர். தகர்க்கப்பட்ட கற்பாறைகளை கிரேன்கள் மூலம் அகற்றும் பணிகள் நடைபெற்றன. மஞ்சள் நிறத் தொப்பியணிந்த தொழிலாளர்கள் மலை வளைவுகளிலும், அபாயகரமான உயரங்களிலிலும் தொங்கியபடி வேலை செய்துகொண்டிருந்தனர். ‘கரணம் தப்பினால் மரணம்’ என்று மேலே எந்நேரத்திலும் உருண்டு வரும் பாறைகளும், கீழே ஆழப் பள்ளத்தாக்கில் பாய்ந்தோடும் பியாஸ், பார்வதி நதிகளுமென அவ்விளைஞர்கள் உயிரைப் பணயம்வைத்து வேலை செய்துகொண்டிருந்தனர். புழுதியப்பிய முகத்தோடு சாலையோரத்தில் அமர்ந்து பீடி பிடித்துக்கொண்டிருந்தார் ஓர் இளைஞர். அவரது மஞ்சள் நிற உலோகத் தொப்பியை தரையில் வைத்திருந்தார். “நீங்கள் எந்த ஊர்?” என்றேன். “பீகார்” என்றார். “அங்கிருந்து இவ்வளவு தூரம் வந்து வேலை செய்கிறீர்களா?” என்றேன். “ஆம்” என்று பீடி புகைத்துக்கொண்டே விரலால் மற்ற இளைஞர்களையும் சுட்டிக்காட்டினார். “நாங்கள் அனைவரும் இங்கு வந்து ஆறு மாதங்களுக்கு மேலாகின்றன. கான்ட்ராக்ட் அடிப்படையில் வந்திருப்பதால் பணி முடியும் வரை இங்கிருந்து செல்ல முடியாது. மழை, நிலச்சரிவு என்று ஏதேனும் ஏற்பட்டால் வாரக்கணக்கில் பணிகள் தடைப்பட்டு நிற்கும். சீரமைப்புப் பணிகள் முடிந்த பிறகுல் மீண்டும் எங்கள் வேலை தொடங்கும்” என்று கூறினார். “பீகாரிலிருந்து இவ்வளவு தொலைவு வந்து வேலை செய்யக் காரணமென்ன?”
“இதுதான்… வேறென்ன?” என்பதுபோல் தனது வயிற்றைத் தடவிக் காண்பித்தார். வாகன நெரிசலில் வெகு நேரம் காத்திருந்தோம். சில அடிகள் முன்னேறிவிட்டு மீண்டும் நின்றுவிட்டோம். இயந்திரங்களின் ஓயாத இரைச்சலும், புழுதிக்காற்றும் மனதையும் உடலையும் கடும் சோர்வுக்குள்ளாக்கின. எங்களைவிட வேகமாகப் பறந்தோடி வந்த புல்லட் வீரர்களும் எங்களுக்குச் சற்று தொலைவில் நின்றிருந்தனர்.
மாற்று வழியில் செல்லலாமென்று மனம் அறிவுறுத்தியது. இப்படியே ஓரிடத்தில் தடைப்பட்டு நிற்பதற்கு பதிலாக நான்கு மலைகளைக் கடந்து சென்றுவிடலாம் என்றெண்ணி மாற்று வழியில் வண்டியைச் செலுத்தினோம். அதுவரை குன்றுகளையே மலையாக எண்ணியிருந்த எங்களுக்கு நிஜமான மலைகளின் உயரமும் சுற்றளவும் மனதைக் கலங்கச் செய்தன. கணினி வரைபடத்தின் உதவியோடு ஒரு மலையைக் கடந்து முடித்தபோது அந்தி சாயத்து தொடங்கியிருந்தது. “மலைகள் வேகமாக உறங்குபவை, அதாவது மலைகளில் இருள் வேகமாகச் சூழ்ந்துவிடும்” என்று சாங்கா தாதா கூறியது நினைவுக்கு வந்தது. மேலும் முன்னேறிச் செல்வதா அல்லது வந்த வழியே திரும்புவதா என்று புரியாமல் அங்கேயே திகைத்து நின்றோம். மலைகளா அல்லது மந்திரக் கதைகளில் வரும் மலை அரக்கர்களா என்று தோன்றும் வண்ணம் உயரத்தின் அளவுகோல்களையெல்லாம் மிஞ்சிய உயரத்தில் நின்றன அந்த மலைகள். மலைகளின் வலிமையை அப்பகுதி மரங்களும் கொண்டிருந்தன. மலைச்சரிவுகளை மீறி வெளிப்பட்ட மரத்தின் வேர்கள் அருகிலிருக்கும் மரங்களோடு பின்னிக்கொண்டு நிரந்தர ஆலிங்கன வடிவம் பூண்டிருந்தன. இயற்கை அதன் திருத்தப்படாத உண்மையுருவில் என் முன்னே அரங்கேறிக்கொண்டிருந்தது.
” வழிகள் கடுமையாகும்போது அங்கு வழிகாட்டி தோன்றுவான்” என்று எப்போதோ படித்தது ஏனோ அச்சமயத்தில் நினைவுக்கு வந்தது. மனதில் நம்பிக்கை துளிர்த்தது. எப்படியேனும் ஒரு வழி பிறக்கும்; காத்திருப்போம் என்று அங்கு நின்றிருந்தோம். திசையறியாமல் நின்றிருந்த குழப்பம் கோபமாக உருமாறியது. நாங்கள் எடுத்த முடிவுகளுக்காக ஒருவரை ஒருவர் கடுமையாகச் சாடினோம். நிலைமை சுமுகமாக இருக்கும் வரை எடுக்கும் முடிவுகளை நாம் பரிசீலித்துப் பார்ப்பதில்லை. நிலைமை தடுமாற்றம் காணும்போதுதான் நம் முடிவுகளின் பலமும் பலவீனமும் நமக்குப் புலப்படுகின்றன. செய்வதறியாது தவித்த நாங்கள், மீண்டும் கணினி வரைபடத்தின் வழிகாட்டுதலின்படி இரண்டாவது மலையில் பயணிக்கத் தொடங்கினோம். இருள் போர்வை வேகமாக எங்கள் பின்னே விரிந்துகொண்டிருந்தது. வளைவுகளில் சிறிது கவனம் பிசகினாலும் பாதாளத்தின் பசித்த நாவுகள் எங்களை விழுங்கக் காத்திருந்தன. `துணிவும் நம்பிக்கையும் உடனிருந்தாலும் ஏதாவதொரு மாயம் நிகழ்ந்து நீங்கள் செல்லும் வழி சரியானது என்று யாரேனும் தோன்றி கூற மாட்டார்களா?’ என்று மனம் பரிதவித்தது. கொண்டை ஊசி வளைவுகள் ஒன்றன் பின் ஒன்றாக நெருக்கத்தில் தோன்றின. மலை உச்சியை அடைவதற்கான குறியீடு அது.
பகற்பொழுதின் சில சொட்டுகள் இன்னும் மீதமிருந்தன. நெடுநேரப் பயணம் உடலை மிகுந்த சோர்வுக்குள்ளாக்கியது. ரத்த அழுத்தம் குறைந்து தலைசுற்றியது. மனிதர்களே காணக் கிடைக்காத அப்பகுதியில் மருத்துவ உதவியென்பது சாத்தியமேயில்லை என்பது புரிந்தது. கைப்பைக்குள் துழாவியதில் சில மெந்த்தால் மிட்டாய்கள் கிடைத்தன. இனிப்பு சுவை ரத்தத்தில் கலந்ததும் சிறிது ஆசுவாசம் கிடைத்தது. வண்டியை நிறுத்திவிட்டு சிற்றோடையொன்றில் முகம் கழுவினேன். மனதில் புத்துணர்ச்சி பிறந்தது. அச்சத்தைக் கடந்துவிடும் நேரத்தில் தெளிவு பிறக்கும். அடுத்து என்ன செய்யலாமென்று மனம் யோசிக்கத் தொடங்கியது. அருகில் கிராமம் ஏதும் இருக்கிறதா என்று கணினி வரைபடத்தில் தேடினோம். மூன்றாவது மலையின் இறக்கத்தில் குடியிருப்புப் பகுதி ஒன்று இருப்பதாக வரைபடம் சுட்டியது. நாங்கள் இரண்டாவது மலையுச்சியை அடையும் தூரத்திலிருந்தோம். இரண்டாவது மலையிறங்கி மூன்றாவது மலையேறி இறங்கினால் கணினி சுட்டும் இடம் வந்துவிடும். அதற்குள் நிச்சயமாக இருட்டிவிடும். வேறு வழி ஏதும் புலப்படாததால் கிடைத்த வழியில் பயணிக்க முடிவெடுத்தோம். கிளம்பு முன்பு அச்சிற்றோடையின் நீரை அள்ளிப் பருகினேன். மனம் என்னையும் மீறி ஓடையுடன் பேசியது.
“ஓடையே, உனது பாதைகளை எனக்குக் காட்டுவாயா… நீ இங்கிருந்து பயணித்து பியாஸ் நதியை அடைவாயல்லவா… எனக்கும் அந்நதியே முகவரி. உன் பாதைகளை எனக்குக் காட்டுவாயா, நான் சோர்ந்துபோயிருக்கிறேன்” என்றேன்.
வானம் செந்தூரம் தரித்திருந்தது. செம்மறியாடுகளின் மேய்சசல் ஒலி அருகில் கேட்டது. சற்று நேரத்திலெல்லாம் ஒரு செம்மறியாட்டுக் கூட்டம் மலையிறங்கி சிற்றோடையில் நீரருந்தத் தொடங்கயது. ஆட்டுக் கூட்டத்தின் மேய்ப்பன் கையில் நீண்டதொரு கோலுடன் இறங்கி வந்தான். நெடுநேரத்துக்குப் பிறகு தென்பட்ட மனிதனைக் கண்டதும் மனம் உற்சாகம் கொண்டது. அவரிடம் சைகையில்தான் பேச முடிந்தது. அவர் மலையக மொழி பேசினார். அது இந்தி அல்ல. அவர் “எங்கு செல்ல வேண்டும்?’’ என்று சைகையில் கேட்டார். நான் “குல்லு” என்றேன். “பியாஸ் நதி பாய்கிறதே… அங்கே செல்ல வேண்டும்” என்று சைகையில் நதியை வரைந்து காட்டினேன். அவர் சிறிது நேரம் யோசித்துவிட்டு, வானத்தைப் பார்த்தார். நேரத்தைக் கணக்கிடுகிறார் என்பது புரிந்தது. அதன் பிறகு தரையில் திசைகள் வரைந்து காட்டினார். நான் அதை என் குறிப்பேட்டில் வரைந்துகொண்டேன். “இப்படிச் செல்லுங்கள்” என்று குறுக்குவெட்டாக ஒரு பாதையைக் காண்பித்தார். சாலை அமைப்பே இல்லாத பாதை அது. “இவ்வழியிலா செல்வது?” என்று தயங்கியபடி கேட்டேன். “ஆம்” என்று தலையசைத்துவிட்டு ஆடுகளின் பக்கம் திரும்பினார்.
என்னுடன் வந்த நண்பர் “இந்த மனிதனின் வார்த்தைகளை நம்பி, புதிய பாதையில் செல்வது சரியா… இவன் எத்தகைய மனிதனோ… ஒருவேளை வழிப்பறி கொள்ளையனாக இருந்தால், இவன் விரிக்கும் வலையில் சிக்கிக்கொண்டுவிட்டால் என்ன செய்வது?” என்று எச்சரித்தார்.
மனம் சற்று நிதானித்து, பின்பு மீண்டும் தெளிந்தது. “அந்த மனிதரின் வார்த்தைகளில் நேர்மை இருந்தது. பல நேரங்களில் உறவுகளையும் நண்பர்களையும்விட அந்நியர்களே வாழ்க்கையின் வழிகாட்டிகளாக அமைந்துவிடுகின்றனர். நம்பிச் செல்வோம் வா” என்றேன்.
அவர் கூறிய வழியில் பயணித்தோம். குறுக்கும் நெடுக்குமாக செப்பனிடப்படாத பாதைகளில் வேகமாக இறங்கினோம். சூரியன் தொடுவானில் இறங்கி மறைந்த நேரத்தில் நாங்கள் பள்ளத்தாக்கை அடைந்தோம். நிலவொளி படர்ந்த பியாஸ் நதியில் வெண்ணிற அலைகள் கரைபுரண்டன.
நாங்கள் முன்பதிவு செய்திருந்த தங்கும் விடுதி அங்கிருந்து இரண்டு கிலோமீட்டர் தொலைவிலிருந்தது. பியாஸ் நதி எங்களுடன் பயணித்தது. ஒருவழியாக விடுதியை அடைந்ததும் காலணிகளைக் கழற்றிவிட்டு, பியாஸ் நதியைத் தொட்டு வணங்கி, அந்தச் சிற்றோடைக்கு நன்றி தெரிவித்தேன். என் வேண்டுதலுக்குச் செவி மடுத்த அவ்வோடையின் நீரும் பியாஸ் நதியில் கலந்திருக்கும் என்று நம்பினேன்.
சில மணி நேரம் முன்பு வரை வழியறியாமல் திகைத்து நின்றவர்கள் அன்றிரவு பியாஸ் நதியில் பிடித்த டியூனா மீன்களை பொரித்து, சுவைத்து உண்டோம். `இமயமலையின் ராணி’ என்றறியப்படும் ரோடோடென்டிரான் மலர்களிலிருந்து தயாரிக்கப்பட்ட ஒயினை ருசித்தபடி, நிலவுக்கும், வானுக்கும், பியாஸ் நதிக்கும், சிற்றோடைக்கும், அந்த ஆட்டு மேய்ப்பனுக்கும் “சியர்ஸ்” என்று உரக்கக் கூறினேன்.
வழிகாட்டிகள் சிலரது அறிமுகங்களோடு பயணங்கள் தொடரும்…