நாட்டில் நிலவும் உணவுப் பிரச்சினைக்குத் தீர்வுகாண்பதற்கு அனைத்து அமைச்சுக்களையும் ஒன்றிணைத்து உணவுப் பாதுகாப்புக்கான அமைச்சரவை உபகுழுவொன்றை அமைக்க வேண்டுமென அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவில் (கோபா குழு) தீர்மானிக்கப்பட்டது.
தற்போதைய உணவு நெருக்கடியைச் சமாளிப்பதற்குப் பொறுப்பான அனைத்து நிறுவனங்களையும் ஒன்றிணைத்து, விரைவான முடிவுகளை எடுப்பதற்கும், எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைப் பின்பற்றுவதற்கும், எதிர்கால நடவடிக்கைகள் குறித்து ஆலோசிப்பதற்கும் இந்தக் குழுவை அமைப்பது முக்கியம் என குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினர்.
பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ (பேராசிரியர்) திஸ்ஸ விதாரண தலைமையில் அண்மையில் நடைபெற்ற (10) அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவிலேயே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டது. உணவு நெருக்கடியைச் சமாளிப்பதற்கு சார்க் உணவு வங்கி மற்றும் உலக உணவுத் திட்டம் (WFP) ஆகியவற்றின் ஆதரவைப் பெறுவது குறித்தும் இதில் கலந்துரையாடப்பட்டது.
நாட்டில் உணவுப் பொருட்களுக்கு கட்டுப்பாட்டு விலையை அரசாங்கம் நீக்கியதன் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் கட்டுப்படியாகாத நிலையில் அதிகரித்துள்ளதாக கோபா குழுவின் தலைவர் சுட்டிக்காட்டினார். சந்தையில் கிடைக்கும் உணவுப் பொருட்கள் உயர்ந்த விலையில் இருப்பதால் அரசாங்கத்தின் தலையீட்டில் நியாயமான விலையில் அவற்றை வழங்குவதற்கான சாத்தியக் கூறுகளை ஆராயுமாறும் குழுவின் தலைவர் பரிந்துரைத்தார். இதன்படி, உணவு ஆணையாளர் திணைக்களம், லங்கா சதோச நிறுவனம், கூட்டுறவு மொத்த விற்பனைக் கூட்டுத்தாபனம், அரச வர்த்தகக் கூட்டுத்தாபனம், மற்றும் ஏனைய கூட்டுறவுச் சங்கங்கள் ஊடாக குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு உணவு வழங்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
காலநிலை மாற்றம், ரஷ்ய – உக்ரைன் போர், உலக கோதுமை உற்பத்தியில் ஏற்பட்டுள்ள நெருக்கடி, சோள உற்பத்தி, உர உற்பத்தியிலில் ஏற்பட்டுள்ள வீழ்ச்சி, எண்ணெய் விலை உயர்வு போன்றவற்றால் உணவு உற்பத்தி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக கணக்காய்வாளர் நாயகம் சுட்டிக்காட்டினார். இந்நிலையில், அண்மைக்காலமாக இலங்கையில் ஏற்பட்ட உர நெருக்கடி மற்றும் அந்நிய செலாவணி கையிருப்பு பற்றாக்குறை மற்றும் பூச்சிக்கொல்லி பயன்பாடு தொடர்பான கொள்கை சிக்கல்கள் காரணமாக அத்தியாவசிய உணவுப் பொருட்களின் உற்பத்தி குறைந்துள்ளது. இலங்கை சுங்க மற்றும் ஹெக்டர் கொப்பேகடுவ விவசாய ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் தரவுகளின்படி, சம்பா அரிசி, நாட்டு அரிசி, சீனி, சிகப்பு பருப்பு, கோதுமை மா, பெரிய வெங்காயம், உருளைக்கிழங்கு, டின் மீன், பால்மா, செத்தல் மிளகாய் கொண்டைக்கடலை, கோழி இறைச்சி, மீன் மற்றும் முட்டை உள்ளிட் 16 வகையான உணவுகள் வர்த்தக அமைச்சினால் அத்தியாவசிய உணவுகளாக அடையாளம் காணப்பட்டுள்ளன.
இந்த வருடத்தில் பெரும்போக மற்றும் சிறுபோகத்தில் உற்பத்தி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் அளவு மற்றும் நாட்டின் தேவையை பூர்த்தி செய்ய தேவையான அளவு குறித்து அதிகாரிகள் குழுவுக்கு விளக்கினர். புதிய அரசாங்கத்தின் கீழ் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா தலைமையில் அமைக்கப்பட்ட விசேட குழு பிரதமர் அலுவலகத்தில் கூடி இது குறித்து ஆராயவிருப்பதாக விவசாய அமைச்சின் செயலாளர் சுட்டிக்காட்டினார். எதிர்வரும் ஜனவரி மாதத்திற்குள் நாட்டின் காபோஹைட்ரேட், புரதம் மற்றும் ஏனைய எரிசக்தி தேவைகளை எவ்வாறு பூர்த்தி செய்வது என்பது தொடர்பில் விவசாய அமைச்சு முறையான வேலைத்திட்டத்தை வகுத்துள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார். இது அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களின் தகவலுக்காக மின்னஞ்சலில் அனுப்பி வைக்கப்படும் என செயலாளர் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ (பேராசிரியர்) ரஞ்சித் பண்டார, கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ உதய கம்மன்பில, கௌரவ லசந்த அழகியவன்ன, கௌரவ (வைத்தியகலாநிதி) சுதர்ஷனி பெர்னாண்டோபுள்ளே, கௌரவ (கலாநிதி) ஹரினி அமரசூரிய, கௌரவ நிரோஷன் பெரேரா ஆகியோரும் அமைச்சின் செயலாளர் உள்ளிட்ட அரசாங்க அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.