நாட்டில் பொருளாதார வளர்ச்சியை குறிக்கோளாகக் கொண்ட 10 ஆண்டுகளுக்கான ஒரு உறுதியான அபிவிருத்தித் திட்டத்தை உருவாக்குமாறு கோபா குழு வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு அறிவுறுத்தல் வழங்கியது.
அரசாங்கக் கணக்குகள் பற்றிய (கோபா) குழு அதன் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் (பேராசிரியர்) கௌரவ திஸ்ஸ விதாரண தலைமையில் பாராளுமன்றத்தில் அண்மையில் (09) கூடிய போதே வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு இந்த அறிவுறுத்தல் வழங்கப்பட்டது.
வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்துக்கு அனுமதி பெற்றுக்கொள்ள வேண்டிய திட்டங்கள், அனுமதி கிடைக்கப்பெற்று இடைநிறுத்தப்பட்டுள்ள திட்டங்கள் மற்றும் தற்போதைய பொருளாதார நிலைமையை தவிர்த்துக்கொள்ள இந்தத் திணைக்களத்துக்குக் காணப்படும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பில் இந்தக் குழுக் கூட்டத்தில் பிரதானமாக கவனம் செலுத்தப்பட்டது.
இதன் போது வெளிநாட்டு வளங்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் குறிப்பிடுகையில், அரசியல் அதிகாரங்கள் மாற்றமடைந்தாலும் நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்புவதற்கு 10 வருடங்களுக்கு நடைமுறைப்படுத்தக் கூடிய மாற்றமடையாத திட்டவட்டமாகக் கண்டறியப்பட்ட அபிவிருத்தித் திட்டமொன்று இருக்கவேண்டும் எனத் தெரிவித்தார். இது பாராளுமன்றத்துக்கு முன்வைக்கப்பட்டு அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
அரசியல் அதிகாரத்தின் செல்வாக்கு இன்றிச் செயற்படுவதற்கு இவ்வாறான தேசிய திட்டமொன்றை உருவாக்கவேண்டிய சரியான தருணம் இதுவாகும் எனக் குழுவில் கலந்துகொண்ட உறுப்பினர்கள் சுட்டிக்காட்டினார். அரசியல் அதிகாரங்கள் மாற்றமடைந்தாலும் நாடு மாற்றமடைவதில்லை என்பதால் நாட்டின் அபிவிருத்திக்குத் திட்டவட்டமான பொருளாதார திட்டமொன்று அவசியம் என இதன்போது கோபா குழுவின் தலைவர் குறிப்பிட்டார்.
அதேபோன்று, ஒருசில அபிவிருத்தித் திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளமை தொடர்பில் கலந்துரையாடப்பட்ட போது, நிறைவேற்று அதிகாரத்தின் தீர்மானத்துக்கு அமைய இவ்வாறு சில திட்டங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக வருகை தந்த அதிகாரிகள் குறிப்பிட்டனர். அது தொடர்பில் அதிகாரிகளுக்குச் செல்வாக்குச் செலுத்த முடியாது எனவும் அவர்கள் சுட்டிக்காட்டினார். அரசியல் அதிகாரம் பிழையான தீர்மானங்களை எடுக்கும் போது அவற்றை சுட்டிக்காட்டுவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் (கலாநிதி) கௌரவ ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். இதுபோன்ற விடயங்களில் அதிகாரிகள் ஈடுபட்டு ஆலோசனை வழங்குவதற்கு எந்த வழிமுறையும் இல்லையாயின், அதனை உருவாக்குவதற்குத் தேவையான கொள்கை ரீதியான தீர்மானங்களை எடுப்பதற்கு கோபா குழு தேவையான ஆதரவை வழங்குவதாகவும் குறிப்பிட்டார்.
சர்வதேச நாணய நிதியத்துடன் பணியாற்றுவதற்குத் தேவையான திட்டங்களை தயாரிப்பது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.
இந்தக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான கௌரவ திஸ்ஸ அத்தநாயக்க, கௌரவ லசந்த அழகியவண்ண, கௌரவ தயாசிறி ஜயசேகர, (வைத்திய கலாநிதி) கௌரவ சுதர்ஷனி பர்னாந்துபுல்லே, (கலாநிதி) கௌரவ ஹரிணி அமரசூரிய, கௌரவ துமிந்த திசாநாயக்க, கௌரவ நிரோஷான் பெரேரா, கௌரவ எஸ். சிறிதரன், கௌரவ பி.வை.ஜி. ரத்னசேகர, (வைத்திய கலாநிதி) கௌரவ உபுல் கலப்பத்தி, கௌரவ வீரசுமன வீரசிங்க, கௌரவ அஷோக் அபேசிங்க மற்றும் கௌரவ பிரசன்ன ரணவீர ஆகியோர் கலந்துகொண்டனர்.