நிலவில் தண்ணீர்: சீனா உறுதி| Dinamalar

பீஜிங்:நிலவில் தண்ணீர் வளம் இருந்ததற்கான ஆதாரங்கள் கிடைத்துள்ளதாக சீன விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
நம் அண்டை நாடான சீனா, 2020ல் ‘சாங்கி – 5’ என்ற ஆளில்லா விண்கலத்தை நிலவுக்கு அனுப்பியது. இந்த விண்கலம் நிலவில் இதுவரை யாரும் ஆராய்ந்திராத ‘புயல் கடல்’ என்ற பகுதியில் தரையிறங்கியது. அத்துடன், அங்கிருந்து 1,731 கிராம் மண் மற்றும் கற்களை சேகரித்து பூமிக்கு திரும்பியது.
இந்த மண் மாதிரியை சீன விஞ்ஞானிகள் ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கை வெளியிட்டு உள்ளனர். ‘நேச்சர்ஸ் கம்யூனிகேஷன்ஸ்’ என்ற அறிவியல் இதழில் வெளியான அந்த ஆய்வுக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது:
நிலவில் இருந்து எடுத்து வரப்பட்ட மண்ணில் ‘அபடைட்’ என்ற படிகம் போன்ற கனிமப் பொருள் காணப்படுகிறது. அதில் ‘ஹைட்ராக்சில்’ என்ற வடிவத்தில் தண்ணீர் உள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சூரியக் கதிரின் தாக்கத்தில் ஏற்பட்ட ரசாயன மாற்றங்களால் நிலவில் பெரும்பகுதி நீர்வளம் உருவாகியுள்ளதாக கருதப்படுகிறது.
இந்த ஆய்வின் வாயிலாக நிலவில் நீர் வளம் இருந்திருப்பது புலனாகிறது. எனினும் நீர் வளம் எப்படி உருவானது என்பது குறித்து ஒருமித்த கருத்து இன்னும் ஏற்படவில்லை.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.