சர்கார் பட துணை நடிகரொருவர் தன்னிடம் ரூ.82 லட்சம் மோசடி செய்துள்ளதாக தயாரிப்பாளரொருவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
சென்னையை பூர்வீகமாக கொண்டு ஜெர்மனியில் மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வரும் ரோல்ஸ்டன் கருப்பசாமி மற்றும் அவரது நண்பர் தென்னாப்பிரிக்காவில் பணிபுரிந்து வரும் தியாகு. இவர்கள் இணைந்து சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளனர். அதில், நடிகராக இருந்து இயக்குநரான ஆறுபாலா என்பவர் தங்களிடம் ரூ.82 லட்சம் வரை மோசடி செய்ததாக குறிப்பிட்டுள்ளனர்.
புகார் அளித்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரோல்ஸ்டன் கருப்பசாமி என்பவர், “கடந்த சில வருடங்களுக்கு முன்பு நாங்கள் இருவரும் இணைந்து தயாரித்த குறும்படம் பெருமளவில் வெற்றியடைந்திருந்தது. அக்காரணத்தினால், ஒரு திரைப்படம் எடுக்க முடிவு செய்தேன். அப்போது நண்பர் ஜெயகிருஷ்ணன் மூலமாக சர்கார் உட்பட பல திரைப்படங்களில் துணை நடிகராக பணியாற்றிய ஆறுபாலா என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. 50லட்ச ரூபாய் செலவில் போர்க்குடி என்ற பெயரில் படத்தை இயக்கப்போவதாக ஆறுபாலா கூறியதால், அவரை நம்பி படத்தை தயாரிக்க முடிவு செய்தேன்.
கொரோனா காலத்தில் சென்னைக்கு வரமுடியாத காரணத்தினால் old patriotic production என்ற பெயரில் தயாரிப்பு நிறுவனம் தொடங்க ஆறுபாலாவிடம் கூறினேன். தயாரிப்பு நிறுவனம் பெயரில் வங்கி கணக்கை தொடங்க அவர் கூறினார். பின்னர் படத்திற்காக தவணை முறையில் 82லட்சம் ரூபாய் வரை வங்கி கணக்கிற்கு அனுப்பினேன். ஆனால் பல மாதங்களாக படத்தை முடிக்காமல், தொடர்ந்து பணம் கேட்டு ஆறுபாலா தொந்தரவு செய்து வந்தார். இந்நிலையில் திடீரென வரவு செலவு கணக்கை பார்த்த ராஜபாண்டி என்பவர் பணத்தை கையாடல் செய்துவிட்டதாக ஆறுபாலா என்னிடம் கூறினார்.
சந்தேகமடைந்து விசாரித்த போது போலி வரவு செலவு கணக்குகளை ஆறுபாலா எங்களுக்கு அனுப்பியது தெரியவந்தது. இதனையடுத்து சென்னை வந்து விசாரித்த போது ராஜபாண்டி, தமிழ்செல்வி, ஆறுபாலா ஆகியோர் இணைந்து படத்தை முடிக்காமல், எங்களது பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வருவதும் தெரியவந்தது.
இந்த மோசடி தொடர்பாக ஆறுபாலாவிடம் கேட்டபோது, மேற்கொண்டு இவ்விவகாரம் பற்றி கேட்டால் படத்தின் நாயகன் முகத்தில் ஆசிட் வீசி கொலை செய்துவிடுவதாக அவரௌ மிரட்டியதாக தெரிகிறது. மேலும் இப்போது எங்களை வெளிநாடு செல்ல முடியாது என ஆறுபாலா மிரட்டி வருகிறார். இது குறித்து கில்டில் புகார் அளித்த போது மோசடி நடந்திருப்பது உறுதி என கூறப்பட்டது.
இதையும் படிங்க… எந்த தீமைக்குள்ளும் சிறு நன்மை உண்டு…! #MorningMotivation
இதனால் படம் எடுக்கப்போவதாக 82 லட்சம் மோசடி செய்த நடிகர் ஆறுபாலா, ராஜபாண்டி, தமிழ்செல்வி ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கூறினார். இதுதொடர்பான ஆடியோ ஆதாரங்களுடன் காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக அவர் கூறினார்.
– செய்தியாளர்: சுப்பிரமணியன்