தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, தன் மீது சுமத்திய ஊழல் குற்றச்சாட்டுகளை மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி மறுத்துள்ளார்.
ஆரம்பம் முதலே அமைச்சர் செந்தில் பாலாஜி, அண்ணாமலை இருவருக்கும் இடையே கருத்து மோதல் நிகழ்ந்து வருகிறது. அண்ணாமலை, செந்தில் பாலாஜி மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சுமத்துவதும், அதற்கு செந்தில் பாலாஜி மறுப்பு தெரிவித்து விளக்கமளிப்பது தமிழக அரசியலில் தொடர்கதையாகி விட்டது. சில நேரங்களில் இருவருமே ஒருவரையொருவர் தரம் தாழ்ந்து விமர்சித்தும் வருகின்றனர்.
இப்படி இருக்க, தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் ஊழல் வழக்கில் சிறைத் தண்டனை பெறும் முதல் நபர் செந்தில் பாலாஜிதான் என்று அண்ணாமலை வியாழக்கிழமை விமர்சித்திருந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை கோவையில் வளர்ச்சிப் பணிகளை தொடங்கி வைத்த பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பாலாஜி, “சிலபேர் வேலை வெட்டி இல்லாமல் இருக்கிறார்கள். எனக்கு நிறைய வேலை இருக்கிறது. வேலை வெட்டி இல்லாதவர்களுக்கு நான் பதில் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. கறந்த பால் மடி புகாது. அதேபோல நீங்கள் சொன்னவரின் கனவு ஒருபோதும் பலிக்காது. அவர்கள் நோட்டாவுடன் போட்டிப் போடுபவர்கள். கோவையில் 100 வார்டுகளில் போட்டியிட்டனர். ஆனால் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை.
இவ்வளவு வீர வசனம் பேசுபவர் அரவக்குறிச்சியில் ஏன் மண்ணைக் கவ்வினார். மக்கள் ஏன் விரட்டியடித்தார்கள். இப்போதும் கூட அவர்கள் என் மீது நடவடிக்கை எடுக்கலாமே.
அரவக்குறிச்சியில் ஓட்டுக்கு ரூ.1,000 பணம் கொடுத்தனர். அந்தப் பணம் எங்கிருந்து வந்தது. ஐ.பி.எஸ் ஆபிஸராக இருந்தபோது சம்பளத்தில் சேர்த்து வைத்த பணமா? இல்லையென்றால் ஆட்டுக்குட்டி மேய்த்ததில் வந்த பணத்தையா கொடுத்தார்.
சட்டமன்ற தேர்தல் பிரசாரத்தின் போது என்னைத் தூக்கிப் போட்டு பல்லை உடைப்பேன் என்று அவர் கூறினார். இப்படித்தான் அவர் மக்கள் முன்பு பேசுவார். மக்கள் பணியாற்ற நினைப்பவர்கள் இப்படியா பேசுவார்கள். விளம்பரத்துக்கும் வேலைக்கும் வித்தியாசம் இருக்கிறது. நாங்கள் வேலையில் இருக்கிறோம். அவர் வெட்டி விளம்பரத்தில் இருக்கிறார். அவர் மட்ட ரகமான அரசியல்வாதி. உள்ளாட்சித் தேர்தல் நடத்துவது மாநில தேர்தல் ஆணையம். ஆனால் மத்திய தேர்தல் ஆணையத்துக்குப் பதிவு போட்டவர் அவர். படித்த முட்டாள்களில் அவர்தான் நம்பர் 1. எந்த காலத்திலும் அவர்கள் நினைப்பது நடக்காது என்று அண்ணாமலை விமர்சனத்துக்கு பதிலளிக்கும் விதமாக அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“