பெங்களூரு: பல் வலிக்கு சிகிச்சை பெற்றபோது நடிகை சுவாதியின் முகம் திடீரென வீங்கியதால் அவர் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறார். கர்நாடகா மாநிலம் பெங்களூரு நகரின் ஜே.பி.நகரில் வசித்து வரும் கன்னட நடிகை சுவாதி. கடந்த 20 நாட்களுக்கு மேலாக பல் வலியால் அவதிப்பட்டு வந்தார். மருத்துவ சிகிச்சைக்காக ஹெண்ணூரில் உள்ள ஒரு தனியார் மருந்துவமனைக்கு சென்றார். அங்கு சுவாதிக்கு சிகிச்சை அளித்த டாக்டர், மருந்துக்கு பதிலாக ஒரு ஊசியை கொடுத்து அதை செலுத்தி கொள்ளும்படி கூறியதாக தெரிகிறது. அதன்படி குறிப்பிட்ட அந்த ஊசியை சுவாதி செலுத்திக் கொண்டார். இதனால் சுவாதியின் முகம் திடீரென வீங்கிவிட்டது. மருந்தின் பக்கவிளைவால் முகத்தின் அமைப்பு மாறிவிட்டது. அதிர்ச்சியடைந்த அவர், கடந்த 20 நாட்களாக வீட்டைவிட்டு வெளியே வரவில்லை. தனக்கு சிகிச்சை அளித்த டாக்டரிடம் தொடர்பு கொண்டு அவர் கேட்ட போது, விரைவில் முக வீக்கம் சரியாகிவிடும் என்று கூறியுள்ளார். ஆனால் தற்போது வரை சுவாதிக்கு முக வீக்கம் சரியாகாததால் அவதிக்குள்ளாகி வருகிறார். இதுதொடர்பாக தனது சமூகவலைதள பக்கத்தில், தவறான மருத்துவ சிகிச்சையால் மருத்துவமனை நிர்வாகம் தனது முகத்தை சிதைத்துவிட்டதாக சுவாதி கதறி அழும் வீடியோ வைரலாகி வருகிறது. இது தொடர்பாக சட்டப்படி நடவடிக்கை எடுக்க உள்ளதாக சுவாதி கூறியுள்ளார்.