புதுச்சேரி: பள்ளிகள் திறக்கப்படும் முதல் நாளிலேயே பாட புத்தகங்களை வழங்குவதற்கு, புதுச்சேரி அரசின் பள்ளி கல்வித் துறைமுழு வீச்சில் களம் இறங்கியுள்ளது.
புதுச்சேரி மாநிலத்திற்கு தனி கல்வி வாரியம் இல்லாததால் புதுச்சேரி, காரைக்கால் பிராந்தியங்களில் தமிழக பாடத் திட்டமும், ஏனாமில் ஆந்திர மாநில பாடத் திட்டமும், மாகியில் கேரள மாநில பாடத் திட்டமும் பின்பற்றப்படுகிறது. பள்ளி மாணவர்கள் கல்வி கற்க, ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை என்.சி.ஆர்.டி., சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்களும், ஆறாம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை தமிழகம், ஆந்திரா, கேரளா மாநில பாடத் திட்ட புத்தகங்களும் ஆண்டுதோறும் கொள்முதல் செய்யப்பட்டு வினியோகிக்கப்படுகிறது.
இந்நிலையில், கோடை விடுமுறை முடிந்து வரும் 23ம் தேதி புதுச்சேரியில் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது. பள்ளி துவங்கும் முதல் நாளிலேயே பாட புத்தகங்களை வழங்க பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. அதற்கான பணிகளையும் முழு வீச்சில் முடுக்கிவிட்டுள்ளது. இதற்காக 5.70 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது.பிராந்திய ரீதியாக புத்தக கொள்முதலுக்கான பொறுப்பாளர்களை நியமித்து, வரும் 20ம் தேதி முதல் புத்தகங்கள் கொள்முதல் செய்யப்பட உள்ளது. சி.பி.எஸ்.இ., பாட புத்தகங்களை பெங்களூருவில் இருந்து கொள்முதல் செய்ய ஆர்டர் கொடுக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பிராந்தியத்திற்கு தேவையான தமிழ்நாடு பாட நுால் நிறுவன பாட புத்தகங்கள், கடலுார் கிளையில் இருந்து கொள்முதல் செய்து, முருங்கப்பாக்கம் அரசு பள்ளிகளில் பிரித்து இறக்கி வைக்கப்பட உள்ளது. பின், அங்கிருந்து அனைத்து பள்ளிகளுக்கும் சப்ளை செய்யப்பட உள்ளது.புதுச்சேரி பிராந்தியத்தை பொறுத்தவரை, ஒன்றாம் வகுப்பு முதல், பத்தாம் வகுப்பு வரை 1.70 லட்சம் பாட புத்தகங்கள் தேவைப்படுகிறது. இதேபோல், பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 வகுப்பினை தமிழ் வழியிலும் பயிலும் மாணவர்களுக்கு 28 ஆயிரம் பாட புத்தகங்கள், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்களுக்கு 63 ஆயிரம் பாட புத்தகங்கள் என மொத்தம் 91 ஆயிரம் புத்தகங்கள் தேவைப்படுகிறது.
கடந்த சில ஆண்டுகளாக, கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் துவங்கும்போது, பள்ளி மாணவர்களுக்கு புத்தகம் கிடைப்பதில்லை. அப்படியே கிடைத்தாலும் ஒரு சில பாட புத்தகங்கள் மட்டுமே கிடைக்கும். இந்த முறை அப்படி இல்லாமல், அனைத்து பாட புத்தகங்களையும் முழுவதுமாக வழங்குவதற்கு பள்ளி கல்வித் துறை திட்டமிட்டுள்ளது. இதற்காக, துறை இயக்குனர் ருத்ரகவுடு உத்தரவின்பேரில் கல்வித் துறை அதிகாரிகள் முழுவீச்சில் களம் இறங்கியுள்ளனர்.
Advertisement