மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான அக்னிபத் எனும் புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தினார். இந்த திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.
இந்த திட்டத்தின்படி, 17.5 முதல் 21 வயதுடைய இருபாலரும் ராணுவம், கடற்படை, விமானப்படை ஆகிய முப்படைகளில் சேரலாம். இந்த திட்டத்தின் கீழ், பணியில் சேருவோர் அக்னி வீரர்கள் என்று அழைக்கப்படுவர். அவர்கள் ஒப்பந்த அடிப்படையில் 4 ஆண்டுகள் சேவையாற்ற வேண்டும். நடப்பாண்டில் 46,000 அக்னி வீரர்கள் தேர்வு செய்யப்படுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக, பீகார் உள்ளிட்ட வட மாநிலங்களில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இவை வன்முறையாகவும் மாறியுள்ளன. அக்னிபத் திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டம் வலுத்து வருவதால் பல்வேறு சலுகைகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.
அதன்படி, “அக்னிபத் திட்டத்தின்கீழ் தேர்வாகும் வீரர்களுக்கு மத்திய துணை ராணுவப் படை மற்றும் அசாம் ரைபிள் படைகளில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மத்திய துணை ராணுவ படைகள் மற்றும் அசாம் ரைபிள்களில் ஆட்சேர்ப்புக்காக அக்னி வீரர்களுக்கு வயது வரம்பில் 3 ஆண்டுகள் வரை தளர்வு வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அக்னி வீரர்களின் முதல் பேட்சுக்கு, நிர்ணயிக்கப்பட்ட உச்ச வயது வரம்பில் 5 ஆண்டுகள் வரை தளர்வு அளிக்கப்படும்.” என்று உள்துறை அமைச்சகம் சார்பில் வெளியிடப்பட்டுள்ள ட்விட்டர் பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பாதுகாப்பு துறையில் 10 சதவீதம் அக்னி வீரர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதாக மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. அக்னிபத் திட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் இளைஞர்கள் போராடி வரும் நிலையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் பணிகளில் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும், 16 பாதுகாப்பு பொதுத்துறை நிறுவனங்களிலும் 10 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.