திருநெல்வேலி பேட்டை நகர்நல ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவ வார்டு பகுதியில் சுவற்றில் ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் பெயர்ந்து பிரசவித்த பெண்ணின் மீது விழுந்து அவர் காயம் அடைந்ததால் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருநெல்வேலி மாநகராட்சிக்கு உட்பட்ட பேட்டை பகுதியில் சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் இருக்கும் பேட்டை நகர ஆரம்ப சுகாதார நிலையத்தில் பேறுகால பிரசவங்களும் பார்க்கப்படுகிறது. கடந்த 2017-2018 நிதியாண்டில் மத்திய அரசின் திட்டத்தின் கீழ் இந்த பேட்டை நகர்நல ஆரம்ப சுகாதார நிலையம் மேம்படுத்தப்பட்டது. அந்த நிதியின் கீழ் பேறுகால பிரசவ பகுதிகளும் கட்டப்பட்டு தற்போது பயன்பாட்டில் உள்ளது. சுகப் பிரசவங்கள் மட்டுமே பேட்டை நகர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடைபெறும் நிலையில், அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பெறுவதற்கு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பர்.
இந்த நிலையில் கடந்த 3 தினங்களுக்கு நெல்லை டவுனை சேர்ந்த யூசுப் என்பவரின் மனைவி பிஸ்மி என்ற பெண்ணிற்கு பேட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தை பிறந்துள்ளது. அவர் பிரசவ வார்டு பகுதியில் சிகிச்சையில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று எதிர்பாராத விதமாக சுவற்றின் மேல் பகுதி வரை ஒட்டப்பட்டிருந்த டைல்ஸ் கற்கள் பெயர்ந்து கீழே விழுந்தது. டைல்ஸ் கற்கள் பெயர்ந்து விழுவதை கண்டு சுதாரித்துக்கொண்ட தாய் பிஸ்மி தனது குழந்தையை பத்திரமாக அரவணைத்துக் கொண்டார்.
இதனால் பெயர்ந்து விழுந்த டைல்ஸ் அந்த பெண்ணின் முதுகில் விழுந்து காயம் ஏற்பட்டது. அத்தோடு அருகில் அவருக்கு உதவிக்கு இருந்த உறவினரின் காலில் காயம் ஏற்பட்டது. இதனையடுத்து சுதாரித்துக்கொண்ட மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் அலுவலர்கள் உடனடியாக தாயையும் சேயையும் மேல்சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த தகவல் அறிந்த அந்த பகுதிக்கு வந்த உறவினர்கள், பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து அவர்களுடன் காவல்துறை பேச்சுவார்த்தையில் ஈடுபட்டதை தொடர்ந்து மறியல் போராட்டத்தை கைவிட்டனர். பிரசவ பகுதியில் பல்வேறு பகுதிகளில் ஒட்டப்பட்டுள்ள டைல்ஸ் கற்கள் அனைத்தும் மிக மோசமான நிலையில் தானாக பெயர்ந்து விழும் நிலையில் தான் உள்ளது.
இதனையடுத்து சம்பவம் நடைபெற்ற இடத்திற்கு வருகை தந்த திருநெல்வேலி மாநகர சுகாதார அதிகாரி ராஜேந்திரன் மருத்துவமனை வளாகத்தை பார்வையிட்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். பிரசவ பகுதியில் டைல்ஸ் கற்கள் பெயர்ந்து பிரசவமாகி 3 நாட்களே ஆன பெண்ணின் மீது விழுந்து காயம் ஏற்படுத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் பிரசவ வார்டு பகுதியில் உரிய முன்னெச்சரிக்கை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகளை மருத்துவத் துறை அதிகாரிகளும் மாநகராட்சி அதிகாரிகளும் மேற்கொள்ள வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
செய்தியாளர்: நெல்லை நாகராஜன்
ஒளிப்பதிவாளர்: சங்கர்Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM