சென்னை: பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென்னின் 100-வது பிறந்தநாளையொட்டி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக முதல்வர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தங்களின் தாயார் 100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார் என்பதை அறிந்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். தாயார் மீது உங்களுக்கு இருக்கும் அன்பை நான் நன்கு அறிவேன். ஒவ்வொரு முறை சென்னைக்கு வரும் போதும் என் அம்மாவின் உடல்நிலை குறித்து விசாரித்ததை அன்புடன் நினைவு கூறுகிறேன். இந்த சிறப்பான நாளில் உங்கள் இருவருக்கும் எனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று அவர் பதிவிட்டுள்ளார்.
பிரதமர் நரேந்திர மோடியின் தாய் ஹீராபென் மோடி இன்று தனது 100-வது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். 1923 ஜூன் 18ல் அவர் பிறந்தார். அவரது பிறந்தநாளை ஒட்டி குஜராத் மாநிலம் காந்திநகரில் உள்ள தனது வீட்டுக்குச் சென்ற பிரதமர் மோடி, தாய்க்கு மாலை அணிவித்து காலைத் தொட்டு வணங்கி ஆசிர்வாதம் பெற்றார். பின்னர் அவர் பாதங்களைக் கழுவி பாதை பூஜை செய்து, அந்தத் தண்ணீரை தன் கண்களில் தடவிக் கொண்டார். பின்னர், அவருக்கு மாலையும், சால்வையும் அணிவித்தார்.
இது தொடர்பாக அவர் தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். கூடவே அவர், என் தாய் வீட்டுச் செலவை சமாளிக்க நிறைய வீடுகளில் பாத்திரம் தேய்த்தார். ராட்டை சுற்றுவார். பருத்தி பறிப்பார். நூல் நூற்பது தொடங்கி வீட்டு வேலை வரை எங்களைக் காப்பாற்ற எல்லா வேலைகளையும் செய்தார். வலி மிகுந்த வேலைகளுக்கு இடையேயும் கூட பருத்தி முள் எங்களைக் குத்திவிடக் கூடாது என வீட்டை சுத்தம் செய்வார். ஒருவேளை என் தந்தை உயிரோடு இருந்திருந்தால் அவரும் இந்த ஆண்டு நூற்றாண்டு பிறந்தநாளை எட்டியிருப்பார் என்று பதிவிட்டிருந்தார்.