புத்தனும் நடன மங்கைகளும் ~ Back பேக் – 21

தவாங் நகரில், என் முதல் காலை 7 மணிக்கு விடிந்தது. போர்வையை விலக்கி எழ முடியாதவாறு, குளிர் என்னை அழுத்தி இருந்தது. சிறிது நேரத்தில் அந்த இறுக்கத்தைத் தளர்த்திவிட்டு கட்டிலில் இருந்து எழுந்தேன். எதிரே இருந்த, ஆஷுவின் அறை சாத்திக் கிடந்ததை வைத்து, அவன் இன்னும் எழவில்லை என்ற முடிவுக்கு வந்தேன். விடுதியின் வரவேற்பறைக்கு வந்தேன். அதனை ஒட்டியிருந்த சமையலறை பூட்டிக்கிடந்தது. சோனமும் அப்போது எழுந்திருக்கவில்லை. அவள் எழுந்திருந்தாள் ஒரு டீ போடச் சொல்லிக் குடிக்கலாம் என்று தோன்றியது. பொதுவாகவே எனக்கு டீ, காபி குடிப்பதில் பெரிய ஈடுபாடு இருப்பதில்லை. குளிர்ப்பிரதேசங்களுக்குச் செல்கையில் மட்டும் அந்த ஆர்வம் தன்னிச்சையாக எழுந்து விடுகிறது. சூடாக நான்கைந்து மிடறு தேநீர் அருந்தியபடியே பால்கனியில் நின்று அந்நகரைப் பார்க்கிற பரவசம் எனக்குத் தேவையாக இருந்தது.

முதல் தளத்தில் இருந்து இறங்கிக் கீழே வந்தேன். குளிர் சற்று கூடியது போல் உணர்ந்தேன். மழை பெய்து கொண்டிருந்தது. மண்சாலையின் ஓரங்களில், கடைகளின் வாசல், மேற்கூரை எங்கும் பனி. ஞாயிறின் உக்கிரம் தீண்டப்படாததால் அவை உறையாது அப்படியே இருந்தன. விடுதி வாசலை ஒட்டியிருக்கும் ஆர்ச்சைக் கடந்து, சற்றே மேடான பகுதியில் ஏறிச்சென்றால் அங்கே ஒரு ரவுண்டானா இருந்தது. அந்த மையத்தில் இருந்து மேலும் இரண்டு சாலைகள் பிரிந்து சென்றன. அந்த இடம்தான் தவாங் நகரின் இதயப்பகுதி. இடப்புறச் சாலையில் வரிசையாகக் கடைகள் நிரம்பியிருந்தன. அந்நேரத்தில் எந்தக் கடையும் திறக்கப்பட்டிருக்கவில்லை.

தவாங்

பசிக்க ஆரம்பித்திருந்தது. மீண்டும் விடுதிக்குத் திரும்பியபோது எதிர்ப்புறம் பூட்டியிருந்த பேக்கரிக்கு பின்புறத்தில் இருந்து ஒன்றிரண்டு பேர் வந்து கொண்டிருந்தனர். பின்புறத்தில் தேநீர் விற்றுக் கொண்டிருந்தனர். ஆலு சமோசாவும் தயாராகியிருந்தது. தேநீரும், சமோசாவும் சாப்பிட்டுவிட்டு விடுதிக்கு வருகையில் ஆஷுவும், சோனமும் சமையலறையில் பேசிக்கொண்டிருந்தனர். சோனம் தேநீர் தயாரித்துக் கொண்டிருந்தாள்.

இன்றைய பயணத்திட்டத்தை வகுக்கும் பொருட்டே, ஆஷு சோனத்திடம் விசாரித்துக் கொண்டிருந்தான். தவாங்கின் பிரசித்திபெற்ற புத்தக்கோயிலுக்குச் சென்றுவிட்டு அங்கிருந்து புத்தர் சிலையைக் காணச் செல்லலாம் என்று சோனம் சொன்னாள். நடந்து செல்கிற தொலைவில் இவைதான் இருந்தன. பைக் வாடகைக்குக் கிடைக்குமா என்று கேட்டேன். நாளொன்றுக்கு 1500 – 2000 ரூபாய் வரை வசூலிக்கிறார்கள் என்று சொன்னாள்.

பைக் ஒரு நாள் கிடைத்தால்கூட போதும் என்று ஆஷு சொன்னான். வாடகையைப் பங்கிட்டுக் கொண்டு தவாங்கில் இருந்து மேற்குப்பகுதியை நோக்கிச் சென்று வரலாம் என்றான். பனிப்பொழிவில் நனைய வேண்டும் என்கிற எனது நெடுநாள் ஆசை ஈடேறிய நிறைவில் இருந்த எனக்கு, பெரிதாக திட்டம் ஏதுமில்லை. இந்த நகரின் அன்றாடத்தில் கலந்திருக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருந்தது. சோனத்திடம் தொலைபேசி எண் வாங்கி இரண்டு, மூன்று இடங்களில் வாடகை பைக்குக்காக முயன்று, ஆஷு தோல்வியடைந்தான். சாப்பிட்டு விட்டு புத்தக்கோயில், புத்தர் சிலையைப் பார்த்துவிட்டு வருவதற்குள் மதியம் ஆகி விடும். இன்றைய நாளுக்கு இதுவே போதும் என்று சொன்னேன்.

அருணாசலப் பிரதேசம்

சாப்பிட்டுவிட்டு, நாங்கள் புத்தர் கோயிலை நோக்கிச் சென்றோம். மீண்டும் மெலிதாக பனி பொழிய ஆரம்பித்தது. நகரின் இதயப்பகுதியான ரவுண்டானாவில் இருந்து இடப்புறம் திரும்பிச் சென்று கொண்டிருந்தோம். நடைபாதை நெடுகிலும் பனி மீது கால் வைக்கையில் வழுக்கி விடும் அபாயம் இருந்தது. செல்கையில் மேட்டை நோக்கி ஏற வேண்டியிருந்தது. அந்த குறைந்த காற்றழுத்தத்தில் மேட்டில் ஏறுவது, பெரும் சவாலாக இருந்தது.

ஆஷு, என்னைவிட வேகமாகச் சென்று கொண்டிருந்தான். எனக்கு வேகமாக மூச்சிரைத்ததால் ஆங்காங்கே நின்று நின்று செல்ல வேண்டியதாக இருந்தது. வழியில் நிறுத்தப்பட்டிருந்த ஒரு காரினை, பனி மூடியிருந்தது. அதன் பேனட்டில், என் பெயரை எழுதினேன். கடற்கரை மணலில் பெயரை எழுதிவிட்டு அலை வந்து அழித்துச் செல்வதைக் காண்கையில் வருகிற பரவசம் இதனை எழுதும்போதும் இருந்தது. ஆஷு, எனது செயலை குழந்தைத்தனமான செய்கையாக நினைத்தான். அவன் பார்வையிலேயே அதனைக் கண்டு கொண்டேன். நம்முள் நிறைந்திருக்கும் சிறு சிறு குழந்தைத்தனங்கள் அளிக்கும் ஆசுவாசம் அளப்பரியது.

புத்தக் கோயிலுக்குச் சென்றோம். நடுவே சிமென்ட் தரை மைதானத்தைச் சுற்றி நாற்புறமும் கட்டடங்கள் எழுப்பப்பட்டிருந்தன. கட்டடங்களின் சுவர் முழுக்க ஓவியங்கள் வரையப்பட்டிருந்தன. புத்தத் துறவிகளின் படங்கள், டிராகன் போன்ற விலங்குகளின் படங்கள் வரையப்பட்டிருக்கின்றன. புத்த மதத்தின் மரபுகளை முழுமையாகத் தெரிந்து கொள்ளும்போதுதான் நாம் அந்த ஓவியங்களையும் புரிந்து கொள்ள முடியும். நான் பத்தாண்டுகளுக்கு முன்பே இது போன்ற புத்தக்கோயிலைப் பார்த்திருக்கிறேன்.

கர்நாடகாவில், கொல்லேகால் அருகே உள்ள திபெத் அகதிகள் முகாமில், இதே பிரமாண்டத்துடன் கட்டப்பட்டிருந்த புத்தக்கோயிலைப் பார்த்திருக்கிறேன். இந்தியக் குடிமகன்களைக் காட்டிலும், திபெத் அகதிகள் அங்கு செழிப்பாக இருக்கின்றனர். அதனையும், சத்தியமங்கலம் அருகே பவானிசாகரில் அமைக்கப்பட்டிருக்கும் குடிசைகளால் நிரம்பிய ஈழத்தமிழ் அகதிகள் முகாமையும் ஒப்பிட்டு, ஒரு கட்டுரை எழுதுவதற்காக, அங்கு சென்றிருந்தேன். அந்த நினைவுகள் மீண்டெழுந்தென.

புத்தக்கோவில் சுவரில் உள்ள ஓவியங்கள்

நடுவே இருந்த மைதானத்தில், பாரம்பர்ய உடை அணிந்த நடன மங்கைகள் வரிசையாக நிறுத்தப்பட்டு, ஒருங்கிணைக்கப்பட்டுக் கொண்டிருந்தனர். கேமரா மற்றும் ஹெலி கேமராவில், அவர்களின் நடனத்தைப் படம் பிடிக்கும் வேலை நடந்து கொண்டிருந்தது. நானும் என் மொபைலில் அவர்களின் நடனக் காட்சியைப் படம் பிடித்தேன். மெல்லிசை ஒலிக்கப்பட அதற்கேற்ப ஒத்திசைவுடன் அவர்கள் தங்களது பாரம்பர்ய நடனத்தை நிகழ்த்தினர். 5 நிமிடங்கள் நிகழ்த்தப்பட்ட அந்த நடனம், அநேகமாக ஓர் ஆவணப்படத்துக்காக இருக்கலாம் என்று நினைத்தேன்.

நினைத்தேன், நினைத்துக் கொண்டேன் என்கிற சொற்களை அதிகம் பயன்படுத்துவதன் காரணம் என்னவெனில், தனிப்பயணியாக நான் சென்று அங்குள்ள சூழலை அவதானிக்கிறேன். அதுபற்றிய தீவிர ஆய்வில் ஈடுபடவில்லை. அந்தச் சூழலின் ஒப்பீட்டின் அளவில், நான் என்ன புரிந்து கொண்டேன் என்பதைத்தான் இவ்வாறு குறிப்பிடுகிறேன். நடனம் முடிந்த பிறகு, சில நடன மங்கைகளுடன் செல்ஃபி எடுத்துக் கொண்டேன். எந்தவொரு தருணத்தின் நினைவையும் மீட்டெடுக்க நமக்குக் கிடைத்த ஒரே கருவி, அது மட்டும்தான். ஆஷு, அங்கங்கு சென்று சில ஓவியங்களைப் பார்த்துக் கொண்டிருந்தான்.

தவாங்கில் உள்ள புத்தக்கோவில்

நான் கோயிலுக்குள் சென்று, புத்தர் முன் விழுந்து வணங்கினேன். என் அகங்காரங்கள் அத்தனையையும் உதறிவிட்டு இலகுவான மனிதனானதைப் போலான உணர்வு, என்னுள் மேலிட்டது. புத்தக் கோயிலில் இருந்து மேலும் இரண்டு கி.மீ நடந்து புத்தர் சிலைக்குச் சென்றோம். பிரமாண்டமாக எழுப்பப்பட்டிருந்த புத்தர் சிலை முன்பு, சிறிது நேரம் அமர்ந்திருந்தோம். நான் எனது முதல் சிறுகதைத் தொகுப்பின் கடைசிப் பிரதியை, புத்தர் முன்பு வைத்து வணங்கினேன். இன்றைக்கு இதுவே போதும் என்று ஆஷுவிடம் சொல்லிவிட்டு, அங்கிருந்த இரும்பு பெஞ்சில் உட்கார்ந்து, புத்தரின் வடிவான வதனைத்தை தரிசித்தபடியே உட்கார்ந்திருந்தேன்.

திரிவோம்…

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.