பொறுப்புக்கூறலை தவிர்ப்பதற்கு பொருளாதார பேரழிவின் பின்னால் ஒழியும் இலங்கை: ஐ.நாவுக்கு எச்சரிக்கை



ஜெனீவா – ஐ.நா மனித உரிமைச் பேரவையின் 50வது கூட்டத் தொடரில், இலங்கையின்
வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸ், ஜூன் 13, 2022 அன்று சபையில் கூறியதானது,
தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கையினால் இழைக்கப்பட்ட கொடுங்குன்றங்களுக்குப்
பொறுப்புக் கூறுவதைத் தவிர்ப்பதற்காக, சபையைத் தவறாக வழிநடத்துவதை நோக்கமாகக்
கொண்டது என நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் ஐ.நா மனித உரிமைகள் பேரவையை
எச்சரித்துள்ளது.

தமிழ்மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும்
மனிதக் குலத்திற்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்புக்கூறத் தவறியதை மறைக்க,
சிறிலங்கா தனது தற்போதைய பொருளாதாரப் பேரழிவை முன்னிறுத்துவதனை ஐ.நா
பேரவையும், சர்வதேச சமூகமும் அனுமதிக்கக் கூடாது வலியுறுத்துகின்றோம் என பிரதமர்
வி.உருத்திரகுமாரன் கோரியுள்ளார்.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜி.எல். பீரிஸின் உரைக்குப் பதிலுரையாக
விரிவான அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள நா.தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர்
வி.உருத்திரகுமாரன்,

பாரிய இராணுவச் செலவினங்கள், 21வது திருத்தச் சட்ட மாயை,
சிங்கள அரசியல் சமூகத்தின் இனவாதம், மோசமான பயங்கரவாதத் தடுப்புச்சட்டம்,
மக்களுக்கு எதிராகத் தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை உட்பட இலங்கையின்
பல விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளதோடு, பொறுப்புக்கூறலுக்கு இலங்கையை
சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்த வேண்டும் என்பதே தமிழர்களின்
எதிர்பார்ப்பு என தெரிவித்துள்ளார்.

அறிக்கையின் முழுவிவரம்

‘தமிழ்மக்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடுங்குற்றங்களுக்குப் பொறுப்புக்
கூறுவதைத் தவிர்ப்பதற்காக இலங்கை பொருளாதாரப் பேரழிவின் பின்னால் ஒளிந்து
கொண்டிருக்கிறது : நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்

தென்னிலங்கையில் இடம்பெற்றுவரும் போராட்டத்திற்குக் கிடைத்த எதிர்வினைகளையும்,
வடக்கு, கிழக்குப் பகுதியில் இடம்பெற்று வரும் போராட்டங்களுக்குக் கிடைத்த
எதிர்வினைகளையும் ஒப்பிட்டு நோக்கில் சிங்கள அரசியல் சமூகத்தில் வேரூன்றிய
இனவாதத்தை வெளிப்படுத்துகின்றன.

பாரிய இராணுவச் செலவினங்கள் 

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதாரப் பேரழிவிற்கு முதன்மையான காரணங்களில்
ஒன்றாக, தமிழர்களை அடிமைகளாக வைத்திருக்கும் ஒரே நோக்கத்துக்காகத் தமிழர்
தாயகத்தினை ஆக்கிரமித்து நிலைநிறுத்தி வைக்கப்பட்டுள்ள பாரிய இராணுவமும், அதன்
செலவீனங்களுமே மிகப்பெரிய நிதிச்சுமையாகும்.

தமிழர் தாயகத்தில் யுத்தம்
முடிவடைந்து 13 வருடங்கள் கடந்த பின்னரும், தமிழர் தாயகத்தில் 6
பொதுமக்களுக்கு 1 இராணுவ வீரர் நிலைநிறுத்தப்பட்டுள்ளார் என அமெரிக்காவின்
கலிபோர்னியாவைத் தளமாகக் கொண்ட ஒக்லாண்ட நிருவகம் தனது அறிக்கையில்
சுட்டிக்காட்டியுள்ளது.

21வது திருத்தச் சட்ட மாயை  

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் தனது உரையில், இலங்கையின்
அரசியலமைப்பின் 21வது திருத்தம் குறித்து ஒரு மாயக் கருத்தைக் சர்வதேச
சமூகத்தை நோக்கி முன்வைத்துள்ளார்.

இது ‘நாடாளுமன்றம், சுயாதீன நிறுவனங்கள்,
நிதி பரிவர்த்தனை மற்றும் அதிகாரங்களின் மீதான சமநிலைகளை
உறுதிப்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டது’ என பாசாங்குத்தனமாக
குறிப்பிட்டுள்ளார்.

ஏனெனில் இலங்கை அரசாங்கத்தால் முன்வைக்கப்பட்ட
திருத்தங்கள் உண்மையில் ஜனாதிபதியின் அதிகாரங்களைச் சரிபார்க்கும் வகையில்
செயல்படவில்லை.

ஜனாதிபதி தொடர்ந்து சில அமைச்சுகளைத் தனது அதிகாரத்தின் கீழ்
வைத்திருக்கலாம் என்பதோடு நாடாளுமன்றத்தை ஒத்திவைக்கும் அதிகாரமும்
காணப்படுகின்றது. குறிப்பாக ‘ஜனநாயக விழுமியங்களை ஒருங்கிணைக்க’ இலங்கை
அரசியல் சமூகமும் அதன் நாடாளுமன்றமும் இனரீதியாக நடுநிலையாக இருக்க வேண்டும்.

ஜனாதிபதி அதிகாரத்தைச் சமநிலைப்படுத்த நாடாளுமன்றத்துக்குக் கூடுதலான அதிகாரங்களை
வழங்குவதனை சிங்கள அரசியல் சமூகத்தில் உள்ள பௌத்த இனவாதத்தை மாற்றாது.
இலங்கை அரசு ஒரு சிங்கள பௌத்த அடிப்படைவாத அரசாகவே உள்ளது. 21வது திருத்தம்
நிறைவேற்றப்பட்ட பின்னரும் அது அவ்வாறே தொடரும்.

சிங்கள அரசியல் சமூகத்தின் இனவாதம்

கோட்டா கோ கம உட்பட பெரும்பாலான சிங்கள ஆர்ப்பாட்டக்காரர்களால் தெற்கில்
பொருளாதார முறைகேடுகளுக்கு எதிராக வெடித்த போராட்டங்களை, இலங்கை அரசாங்கம்
கையாண்ட விதமானது அரசாங்கம் மற்றும் அரச கட்டமைப்புக்கள் அப்பட்டமான இனவாதத்தைக்
காட்டுகிறது.

வடக்கிலும் கிழக்கிலும் தமிழ்ப் போராட்டக்காரர்களுக்கு வழமையாக
நிகழ்வதற்கு மாறாக, தெற்கில் ரம்புக்கனையில் ஆர்ப்பாட்டக்காரர் ஒருவரை
பொலிஸார் சுட்டுக் கொன்றபோது, ரம்புக்கனை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி கைது
செய்யப்பட்டார்.

காலிமுகத்திடலில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள்
தாக்கப்பட்ட போது, நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருந்த போதிலும் குற்றவாளிகள் கைது
செய்யப்பட்டு, பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சிங்கள வழக்கறிஞர்கள், பொலிஸாராலும்
தாக்கப்படவில்லை. போராட்டக்காரர்களுக்கு முன்னால் நின்றனர், அதேசமயம்
முள்ளிவாய்க்கால் நினைவு தினத்திலோ அல்லது மாவீரர் நாளிலோ போராட்டக்காரர்கள்
தாக்கப்படும்போது இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் வரவில்லை.

போராட்ட செய்திகளைச்
சேகரிக்கும் சிங்கள ஊடகவியலாளர்கள் தாக்கப்படவில்லை மற்றும் அவர்களின்
கமெராக்கள் பலவந்தமாகக் கைப்பற்றப்படவில்லை.

அதேசமயம் வலிந்து காணாமல்
போனவர்களின் குடும்பங்கள் போன்ற போராட்ட செய்திகளைச் சேகரிக்கும் தமிழ்
ஊடகவியலாளர்கள் இலங்கை பொலிஸாரால் துன்புறுத்தப்பட்டு விசாரணைக்கு
அழைத்துச் செல்லப்படுகிறார்கள்.

எனவே, இலங்கையின் வடக்கு, கிழக்குப் பகுதிகளில்
நடைபெறும் போராட்டங்களைக் கையாளும் விதத்திலிருந்து தென்னிலங்கைப்
போராட்டங்களைக் கையாளும் விதத்தின் மூலம் அரசாங்கமும், அதன் சட்டத்தை
நடைமுறைப்படுத்தும் பிரிவினரும், சிங்கள சிவில் சமூகமும் தமது இனவாதத்தைத் தெளிவாக
வெளிப்படுத்தியுள்ளனர்.

மோசமான பயங்கரவாதத் தடுப்புச்சட்டம் 

 நாகரீக நாடுகளின் மீதான அசிங்கமான கறை என சர்வதேச சட்ட வல்லுநர்கள் ஆணையத்தால்
வகைப்படுத்தப்பட்ட, இலங்கையின் மோசமான பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தில்
திருத்தம் செய்வது குறித்தும் வெளிவிவகார அமைச்சர் பேசியுள்ளார்.

பல்வேறு
சர்வதேச மனித உரிமை அமைப்புகள், தமிழ்மக்கள் கோரியது போல் பயங்கரவாத
தடைச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டுமே தவிர, திருத்தம் செய்யப்படவேண்டியதில்லை.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த 22 பேர்
விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிவிவகார அமைச்சர் கூறுகிறார். இந்த 22 பேர் பல
வருடங்கள் சிறைவாசத்திற்குப் பிறகு விடுவிக்கப்பட்டனர் என்பதோடு சித்திரவதை,
தனிமைப்படுத்தல் போன்ற கொடுமைகளை அனுபவித்தனர்.

பயங்கரவாத தடுப்புச்
சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட இன்னும் பலரும் தொடர்ந்தும் சிறைகளில்
உள்ளனர்.

மாவீரர் நாள் அல்லது முள்ளிவாய்க்கால் நினைவு நாளில் ஒன்றுகூடியதற்காகத்
தமிழர்கள் இந்த நிகழ்வுகளைச் செய்தி வெளியிட்டதற்காகக் கைது செய்யப்பட்ட
ஊடகவியலாளர்கள் அனைவருமே பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழே கைது
செய்யப்பட்டமையையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் சுட்டிக்காட்ட விரும்புகிறது.

ஆனால் தென்னிலங்கையில் நடந்த போராட்டங்களில் இடம்பெற்ற கைதுகள் பயங்கரவாத
தடைச்சட்டத்தின் கீழ் செய்யப்படவில்லை. அவை அவசரகால விதிகளின் கீழ் கைது
செய்யப்பட்டனர். பின்னர் அவ்விதிகள் காலாவதியாகிவிடப்பட்டன. அதேசமயம் 1979ம்
ஆண்டு முதல் பயங்கரவாத தடைச்சட்டம் நடைமுறையிலிருந்து வருகின்றது.

கைது
செய்யப்பட்ட தமிழர்கள் அனைவரும் இந்த சட்டத்தின் கீழேயே கைது செய்யப்பட்டனர்.
இன்றும் கூட இச்சட்டத்தின் கீழேயே கைது செய்யப்படுகின்றனர். இதே போல் 2019ம்
ஆண்டு ஈஸ்டர் குண்டுவெடிப்புகளுக்குப் பிறகு முஸ்லிம்களும் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

ஆனால் தெற்கில் போராட்டம் நடத்திய சிங்களவர்கள்
இச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை. இதனால்தான் சித்திரவதை தொடர்பான
ஐ.நா.வின் சிறப்பு அறிக்கையாளர் பெல் எமர்சன் தனது அறிக்கையொன்றில் ‘பயங்கரவாத
தடுப்புச் சட்டம் தமிழர்கள் மீதே கூடியளவு தாக்கத்தை ஏற்படுத்துகிறது’ என்று
சுட்டிக்காட்டியுள்ளார்.

பொய்யான கூற்றுக்கு பொறுப்புக்கூறவேண்டிய இலங்கை  

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் சபைக்கு அளித்த அறிக்கையில், ‘காணாமல்
போனோர் அலுவலகத்தின் செயல்முறையின் ஒரு பகுதியாக விசாரணைக் குழுவிற்கு
அழைக்கப்பட்ட 83வீத நபர்களைச் சந்தித்துள்ளது’ என்றும் கூறியுள்ளார். ஆனால்,
‘காணாமல் போனவர்கள் அனைவரும் இறந்துவிட்டார்கள்’ என்று இலங்கையின்
ஜனாதிபதியே குறிப்பிட்டுள்ளார்.

பிபிசியின் ஜனவரி 20, 2020 செய்தியறிக்கையின்
படி : ‘இலங்கை போரின் போது காணாமல் போன 20,000க்கும் அதிகமானோர்
இறந்துவிட்டதாகச் இலங்கையின் ஜனாதிபதி முதன்முறையாக ஒப்புக்கொண்டுள்ளார்.

தலைநகர் கொழும்பில் உள்ள ஐ.நா. அலுவலக செய்திக்குறிப்பில் காணாமல்
போனவர்களுக்கு இறப்பு சான்றிதழ் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த
செய்தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் தி இந்து உட்படப் பல சர்வதேச ஊடகங்களிலும்
பரவலாக வெளியிடப்பட்டது. இருந்த போதிலும் இலங்கை வெளிவிவகார அமைச்சர் இந்த
மோசடிக் கூற்றைத் தொடர்ந்தும் செய்து வருகின்றார்.

காணாமல் ஆக்கப்பட்டோர்
தொடர்பான தீர்வைக் காண, காணாமல் போனோர் அலுவலகம் தீவிரமாகச் செயற்பட்டு
வருகின்றது என்ற பொய்யான கூற்றுக்கு இலங்கையின் வெளிவிவகார அமைச்சரை
பொறுப்புக்கூறுமாறு ஐ.நா மனித உரிமைகள் பேரவை உறுப்பினர்கள் மற்றும் பேரவையின்
தலைவர் கோரவேண்டுமென நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது.

மேலும், வெளிவிவகார அமைச்சர் தனது உரையில், இழப்பீடு அலுவலகத்திற்கு ஏற்கனவே
ஒதுக்கப்பட்ட 759 மில்லியனுடன் கூடுதலாக 53 மில்லியன் இலங்கை ரூபாய்கள்
ஒதுக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.

நிதி நிவாரணம் மூலம் மட்டுமே
பாதிக்கப்பட்டவர்களின் துன்பங்களையும் இழப்புக்களை ஈடுசெய்ய முடியாது என்பதை
நாங்கள் சுட்டிக்காட்ட விரும்புகிறோம்.

ஐரோப்பிய நீதிமன்றங்கள் மற்றும்
அமெரிக்கப் பிராந்திய நீதிமன்றங்களின் கூற்றுப்படி ‘பயனுள்ள தீர்வு’ என்பது
முழுமையான பயனுள்ள விசாரணை, மற்றும் மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான
நடவடிக்கைகளை உள்ளடக்கியது என தெளிவாகக் குறிப்பிட்டுள்ளது.

வாழ்வின்
இழப்புக்களை பணக்கையேடு மட்டும் தணிக்காது.

வெளிவிவகார அமைச்சர் தனது உரையில், ‘ஐக்கிய நாடுகளின் ஒழுங்குமுறை எண்.1 இன்
கீழ் 2012ம் ஆண்டு தடைவிதிக்கப்பட்ட தனிநபர்கள், அமைப்புக்கள் தொடர்பில்
மதிப்பாய்வு செய்யப்படுவதோடு, தற்போது 318 தனிநபர்கள் மற்றும் 4 அமைப்புக்கள்
தடைப்பட்டியலில் இருந்து நீக்க முன்மொழியப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார். 

தொடரும் வேடிக்கை விளையாட்டு

இலங்கையின் இந்த நடத்தையானது எங்கள் தொடர்பாக தொடர்ச்சியான வேடிக்கை
விளையாட்டாகும். 2014 ஆண்டில் சிறிலங்கா அரசாங்கம், 424 தனிநபர்கள் மற்றும் 16
அமைப்புக்களை ‘பயங்கரவாத பட்டியலிட்டு’ தடைவிதித்தது.

2015ம் ஆண்டில் ஆட்சிக்கு
வந்த புதிய அரசாங்கம் மீண்டும் வேடிக்கை விளையாட்டாக 8 அமைப்புக்களையும், 259
தனிபர்களையும் புனிதர்களாக்கி தனது தடைப் பட்டியலிலிருந்து நீக்கியது.

திரும்பவும் 2021ல் புதிய அரசாங்கம் மீண்டும் தனது வேடிக்கை விளையாட்டை
காட்டியது. 380 தனிநபர்களையும் மற்றும் 7 அமைப்புக்களையும் பயங்கரவாத
தடைப்பட்டியலில் இட்டுக்கொண்டது.

ஐ.நா மனித உரிமைப் பேரவையில் இலங்கை
வெளிவிவார அமைச்சரின் சமீபத்திய அறிக்கையானது இந்த எண்ணிக்கை வேடிக்கை
விளையாட்டை மீளவும், தொடர்வதனை வெளிக்காட்டுகின்றது.

இலங்கை அரசாங்கத்தின் இந்த எண்ணிக்கை வேடிக்கை விளையாட்டானது, 2012ம்
ஆண்டு-ஐ.நா. ஒழுங்குமுறை இலக்கம் 1ஐ இலங்கை துஸ்பிரயோகம் செய்வதனை
நிரூபிக்கின்றது. இலங்கை அரசாங்கத்தின் இந்த நடத்தை ஐ.நாவின்
நம்பகத்தன்மையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துகிறது.

துரதிர்ஷ்டவசமாக, 13
வருடங்களுக்கு முன்னர் யுத்தம் முடிவடைந்த பின்னர் எந்தவொரு வன்முறைச்
சம்பவமும் இடம்பெறாத போதிலும், சில வெளிநாட்டு சக்திகளால் விடுதலைப் புலிகளை
‘பயங்கரவாத அமைப்பாக’ தொடர்ந்து பெயரிடுவது, இலங்கை அரசாங்கத்தை இந்த
வேடிக்கை விளையாட்டைத் தொடர்ந்து விளையாடச் செய்துள்ளது.

தமிழ் மக்களுக்கு எதிராக தொடரும் கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை

தமிழர் பகுதிகளில் இலங்கையின் ஆயுதப் படைகளின் பாரிய இராணுவ பிரசன்னம்
தமிழ் மக்களின் அடையாளத்தை அழிப்பதற்கும், தமிழ்மக்களின் மனித உரிமை
மீறல்களுக்கும் தொடர்ந்து பங்களிக்கிறது.

உதாரணமாக, சமீபத்தில் தமிழர்களின்
பண்டைய வழிபாட்டுத்தளத்தினை ஆக்கிரமித்து அபகரித்து புத்த விகாரையொன்றினை
கட்டுவதற்கு எதிராக, அமைதி வழியில் போராடிய தமிழ்மக்கள் மீது இராணுவமும்
காவல்துறையும் தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தத் தாக்குதலில் தமிழ் நாடாளுமன்ற
உறுப்பினர் ஒருவரும் காயமடைந்துள்ளார். நீதிமன்ற உத்தரவையும் மீறியே புத்த
விகாரையினை கட்ட முனைந்துள்ளதோடு, இது தமிழர்கள் மீது தொடரும் பண்பாட்டு
இனஅழிப்பாகவுள்ளது.

சிங்கள சிவில் சமூகத்திடமும் மற்றும் அரசாங்கத்திலும் பௌத்த இனவாதம்
ஆழவேர்விட்டுள்ள நிலையில், தமிழர்களுக்கு முன்பு எப்போதையும் விட பாதுகாப்பு
தேவைப்படுகிறது.

தமிழர்களுக்கு எதிரான குற்றங்களுக்காக இலங்கை
அரசியல்வாதிகள், இராணுவத்தினர் தண்டனைகளிலிருந்து விடுபடுவதற்கு
முற்றுப்புள்ளி இருந்தால் மட்டுமே பாதுகாப்பு கிடைக்கும்.

இலங்கை அரசின்
மனித உரிமை அட்டூழியங்களுக்கு முழுப் பொறுப்புக்கூறலைக் கோருவதன் மூலம்
தண்டனையின்மையை முடிவுக்குக் கொண்டுவர ஐ.நா மனித உரிமைகள் பேரவை உதவ முடியும்.

சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி மற்றும் ஏனைய பலதரப்பு அமைப்புக்கள் மற்றும்
அரசாங்கங்கள் இலங்கையின் வெளிநாட்டுக் கடனை மறுசீரமைக்க உதவுவதற்குத் தயாராக
இருப்பதால், இராணுவத்தைக் குறைத்து தமிழர் தாயகத்திலிருந்து அகற்றுமாறு
சிறிலங்கா அரசாங்கத்திற்கு முதலில் அறிவுறுத்த வேண்டும்.

மனிதக் குலத்திற்கு
எதிரான குற்றங்களுக்குக் கொழும்பின் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில்
தங்கியிருந்து இலங்கைக்கு நிதியுதவி செய்யப் பலதரப்பு நிறுவனங்களும்
அரசாங்கங்களும் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்த வேண்டும்.

இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் நிறுத்துக

நிறைவாக, 2021 ஜனவரி 12ம் தேதி ஐ.நா மனித உரிமைகளுக்கான ஆணையாளரர் மிசேல்
பசேலேற் அம்மையாரின் அறிக்கையில், இலங்கையை சர்வதேச குற்றவியல்
நீதிமன்றத்திற்கு அனுப்புமாறு விடுத்த அழைப்பையும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்
மீண்டும் வலியுறுத்துகிறது.

ஐநா மனித உரிமைகளுக்கான நான்கு முன்னாள்
ஆணையாளர்கள், ஐ.நா.வின் நான்கு முன்னாள் உயர் அதிகாரிகள், இலங்கைக்குப் பயணம்
செய்து அறிக்கைகளை எழுதிய ஐ.நாவின் ஒன்பது முன்னாள் சிறப்பு அறிக்கையாளர்கள்,
ஐ.நா. செயலாளர் நாயகம் குழுவின் மூன்று உறுப்பினர்கள், இலங்கை பற்றிய
நிபுணர்கள் ஆகியோர் இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு
அனுப்புமாறு என்ற அழைப்பை விடுத்திருந்தனர்.

செப்டெம்பர் மாதம் 46-1 தீர்மானம் காலாவதியாகும் போது, ஐ.நா மனித உரிமைகள்
பேரவையின் அடுத்த அமர்வில், பொறுப்புக்கூறல் தொடர்பில் தீர்க்கமான நடவடிக்கை
எடுக்கப்படும் என பாதிக்கப்பட்ட தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்றனர் என குறிப்பிட்டுள்ளார்.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.