தஞ்சையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பச்சிளம் ஆண் குழந்தையை முட்புதரில் கண்டுபிடித்த போலீசார் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி அருகேயுள்ள வேலிப்பட்டி என்ற கிராமத்தில் முட்புதரில், பிறந்து சில மணி நேரங்களே ஆன ஆண் குழந்தை ஒன்று தொப்புள் கொடி பிரிக்கப்படாத நிலையில் அழுது கொண்டிருந்தது. குழந்தையின் அழுகுரல் கேட்டு அந்த வழியாக சென்றவர்கள் ஓடிவந்து பார்த்தனர். ஆனால் குழந்தை அருகில் யாரும் இல்லாமல் தனியாக இருந்ததைக்கண்டு உடனடியாக பூதலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 108 ஆம்புலன்சில் குழந்தையுடன் தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனைக்கு சென்றனர். அங்கு பச்சிளம் குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது குழந்தை நலமுடன் உள்ளது.
இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொப்புள்கொடியுடன் ஆண் குழந்தையை போட்டுச் சென்றது யார்? மருத்துவமனையில் பிரசவித்த பின்னர் அங்கிருந்து குழந்தையை தூக்கிவந்து குழந்தையின் தாய் போட்டு சென்றாரா? அல்லது வேறு யாரேனும் கடத்தி வந்து மாட்டிக்கொள்வோம் என்ற பயத்தில் முட்புதரில் குழந்தையை போட்டுச் சென்றனரா? தகாத உறவில் பிறந்த குழந்தை என்பதால் போட்டுச் சென்றனரா? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் செங்கிப்பட்டி, பூதலூர், தஞ்சை உள்ளிட்ட இடங்களில் உள்ள மகப்பேறு மருத்துவமனைகளில் இன்று பிரசவம் நடந்த பெண்கள் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
இதுகுறித்து தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். யாரேனும் குழந்தைக்கு உரிமம் கோரி வராவிட்டால் தொட்டில் குழந்தை திட்டத்தில் இந்த குழந்தையைச் சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM