தஞ்சாவூர்: காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை தொகுப்புத் திட்டம் நிகழாண்டும் செயல்படுத்தப்படும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின்அறிவித்து 18 நாட்களுக்கு மேலாகியும், இத்திட்டம் இன்னும் செயல்பாட்டுக்கு வரவில்லை. இத்திட்டத்தை விரைந்து செயல்படுத்த வேண்டும் என டெல்டா விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர்.
காவிரி டெல்டா மாவட்டங்களின் பாசனத்துக்காக மேட்டூர் அணை மே 24-ம் தேதியே திறக்கப்பட்டு, அந்த தண்ணீர் கடைமடைப் பகுதி வரை சென்று, விவசாயிகள் குறுவை சாகுபடி பணியை தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், மே 30-ம் தேதி டெல்டா மாவட்டங்களில் ஆறுகள், கால்வாய்கள், பாசன வாய்க்கால்கள் தூர் வாரும் பணியை ஆய்வு செய்ய வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், டெல்டா மாவட்டங்களில் ரூ.61 கோடி மதிப்பீட்டில் குறுவை தொகுப்புத்திட்டம் செயல்படுத்தப்படும் என அறிவித்தார்.
இந்த திட்டம் தொடர்பாக தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாநில வேளாண்மை, கூட்டுறவு, உணவுத் துறை அமைச்சர்கள் உள்ளடக்கிய 5 அமைச்சர்கள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஜூன் 7-ம் தேதி நடைபெற்றது.
இதில், காவிரி டெல்டாவில் உள்ள 7 மாவட்டங்களைச் சேர்ந்த ஆட்சியர்கள், வேளாண்மை, கூட்டுறவுத் துறை அதிகாரிகள், விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் பங்கேற்றனர். அப்போது, குறுவை தொகுப்புத் திட்டம் குறித்து விவாதிக்கப்பட்டு, இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்பட்டது.
தற்போது, டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதற்காக குறுவை தொகுப்புத் திட்டத்தின் கீழ் யூரியா, பொட்டாஷ் ஆகிய உரங்கள் மானியத்தில் வழங்கப்படும். திட்டம் செயல்பாட்டுக்கு வராததால், தற்போது நடவு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் அடியுரம் தெளிக்க,உரங்களை அதிக விலை கொடுத்து வெளியில் வாங்க வேண்டிய நிலையில் உள்ளனர். எனவே, முதல்வர் அறிவித்த குறுவைதொகுப்புத் திட்டத்தை உரிய காலத்தில் செயல்படுத்த வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதுகுறித்து தமிழக விவசாயிகள் சங்கத்தின் டெல்டா மாவட்டங்களின் ஒருங்கிணைப்பாளர் ப.ஜெகதீசன் கூறியது: தமிழக அரசு குறுவை தொகுப்புத் திட்டத்தை கடந்தாண்டு சிறப்பாக செயல்படுத்தியது. அனைத்து விவசாயிகளுக்கும் தொகுப்புத் திட்டத்தின் கீழ் பயனடையும் வகையில் ஒரு விவசாயிக்கு 2 ஏக்கருக்கு மட்டுமே எனஉரங்கள் பகிர்ந்து வழங்கப்பட்டன.
கடந்தாண்டு கிராம நிர்வாக அலுவலர்களிடம் குறுவை நெல் நடவு செய்துள்ளதாக சான்று பெற்று, அதை வேளாண்மைத் துறையிடம் வழங்கிய பின்னர், கூட்டுறவுத் துறைமூலம் விவசாயிகளுக்கு உரங்கள் வழங்கப்பட்டன.
தற்போது குறுவை சாகுபடி முன்கூட்டியே தொடங்கியுள்ள நிலையில், குறுவை தொகுப்புத் திட்டத்தில் விதைகள், உரங்கள் உள்ளிட்ட என்னென்ன பொருட்கள் வழங்கப்படும் என தெளிவாக அறிவிக்க வேண்டும். திட்டத்தை தற்போதே செயல்படுத்தினால், அதற்கு ஏற்ற வகையில் விவசாயிகளும் வேளாண் பணிகளை தொடங்க முடியும். காலதாமதமாக அறிவிக்கும்போது, திட்டத்தின் பயன் முழுமை அடையாது.
கடந்தாண்டு குறுவை தொகுப்புத் திட்டம் செயல்படுத்தும்போது, உரங்களுக்கான பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே, இந்தாண்டு பற்றாக்குறை இல்லாமல் பார்த்துக்கொள்ள அரசு முனைப்புடன் செயல்பட வேண்டும் என்றார்.
இதுகுறித்து வேளாண் துறை அதிகாரிகள் கூறும்போது, ‘‘டெல்டா மாவட்டங்களில் நிகழாண்டு 5.20 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடிசெய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, நடவுபணிகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. டெல்டாவில் 20 சதவீத நடவுப் பணிகள் முடிந்துள்ளன.
குறுவை தொகுப்புத்திட்டத்தின் கீழ் 3 லட்சம் விவசாயிகள் பயனடையும் வகையில், 1.90 லட்சம் ஏக்கர் பரப்பளவுக்கு யூரியா, பொட்டாஷ் ஆகிய உரங்களின் தொகுப்பு ரூ.47 கோடிக்கு மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. மேலும், விதைகள், இடுபொருட்கள் மானிய விலையில் வழங்கப்பட உள்ளன. இந்ததிட்டத்தை செயல்படுத்துவதற்கான அறிவிப்பை நாங்களும் எதிர்பார்த்து காத்திருக்கிறோம்’’ என்றனர்.