கோவை: சரியான வழிகாட்டுதல்கள், முறையான ஏற்பாடுகள் இல்லாததால் அவதிக்குள்ளானதாக கோவை – ஷீரடி தனியார் ரயிலில் பயணித்த பயணிகள் குற்றச்சாட்டியுள்ளனர்.
‘பாரத் கவுரவ்’ திட்டத்தின்கீழ் நாட்டின் முதல் தனியார் ரயில் கோவையிலிருந்து ஷீரடிக்கு கடந்த 14-ம் தேதி புறப்பட்டுச் சென்றது. அப்போது, பக்தர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்களுக்கு இசை வாத்தியங்கள் முழங்க தனியார் நிறுவனம் சார்பில் பணிப்பெண்கள் வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், ஷீரடி சென்று தனது பயணத்தை முடித்த அந்த ரயில் இன்று (சனிக்கிழமை) கோவை வந்ததடைந்தது.
இந்த ரயிலில் பயணித்த பயணிகள் சிலர் கூறியது: “கோவையில் இருந்து ஷீரடி சென்றடைந்த பிறகு உடனடியாக எங்களை தங்குமிடத்துக்கு அழைத்துச் செல்லவில்லை. மணிக்கணக்கில் காத்திருக்க வைத்தனர். அறை ஒதுக்கவே காலை 10.30 மணி ஆகிவிட்டது. முன்பின் தெரியாத ஊருக்கு செல்கிறோம். இவர்கள் சரியாக வழிகாட்டுதல்கள் ஏற்பாடுகளை செய்திருப்பார்கள் என நம்பினோம். ஆனால், அவ்வாறு இல்லை.
இப்படிதான் செல்ல வேண்டுமெனில் நாங்களே சாதாரண ரயிலில் சென்றிருக்கலாம். உணவு கட்டணமும் அதிகமாக இருந்தது. முறையாக எதுவும் நடைபெறவில்லை. கோயிலுக்கு செல்லும் இடத்தில் எந்த பிரச்சினையும் இல்லாமல் நிம்மதியாக சென்று வரவேண்டும். ஆனால், இந்தப் பயணத்தில் திருப்தி இல்லை.
ஒருங்கிணைப்பாளர்களும் சரியாக பதில் சொல்லவில்லை. மன உளைச்சலில் இருக்கிறோம். தரிசனத்துக்கு செல்லும் போதும் அலைக்கழிக்கப்பட்டோம். எனவே, தனியார் நிறுவனத்திடம் இருந்து அரசே இந்த சேவையை ஐஆர்சிடிசி மூலம் நடத்த வேண்டும்” என்று பயணிகள் தெரிவித்தனர்.
இந்த ரயில் பயணத்துக்கு ஸ்லீப்பர் வகுப்புக்கு ரூ.2,500, மூன்றாம் ஏசி வகுப்புக்கு ரூ.5,000, இரண்டாம் ஏசி வகுப்புக்கு ரூ.7,000, முதல் ஏசி வகுப்புக்கு ரூ.10,000 என வசூலிக்கப்பட்டது. தங்கும் வசதியுடன் கூடிய பேக்கேஜ் கட்டணம் ரூ.3,000 சேர்த்து வசூலிக்கப்பட்டதும் கட்டண அதிகம் என்ற சர்ச்சையை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.