லண்டன்: அமெரிக்காவின் போா் ரகசிய ஆவணங்களை கசிய விட்ட வழக்கில், கைது செய்யப்பட்டு பிரிட்டன் சிறையில் உள்ள விக்கிலீக்ஸ் வலைதள நிறுவனா் ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதனால், அவர் விரைவில் நாடு கடத்தப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்த இளையதள பத்திரிகை நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே. அமெரிக்காவின் சி.ஐ.ஏ பற்றிய ரகசிய தகவல்களை ஹேக் செய்து, ‘Vault 7’ என்ற பெயரில், 8 ஆயிரத்து 761 ஆவணங்களை கடந்த 2010ஆம் ஆண்டு வெளியிட்டு உலக நாடுகளிடையே பரபரப்பை ஏற்படுத்தினார். இதன் காரணமாக, 2019ம் ஆண்டு ஏப்ரல் ஏப்ரல் 11ந்தேதி லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் வைத்து ஜூலியன் அசாஞ்சே கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் இருந்த நிலையில்அவரை லண்டன் போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதையடுத்து, அவரை நாடு கடத்துவது தொடர்பான வழக்கு நடைபெற்று வந்தது. அதில், அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்த பிரிட்டன் அரசு சம்மதம் தெரிவித்தது. இதையடுத்து, தற்போது, அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கட்ட, பிரிட்டன் அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பிரிட்டன் உள்துறை அமைச்சக செய்தித்தொடா்பாளா், லண்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், உயா் நீதிமன்றம் ஆகியவை வழங்கிய தீா்ப்பின் அடிப்படையில், ஜூலியன் அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதற்கான உத்தரவை உள்துறை அமைச்சகம் பிறப்பித்துள்ளது. இந்த உத்தரவுக்கு எதிராக 14 நாள்களுக்குள் மேல்முறையீடு செய்யும் உரிமை அசாஞ்சேவுக்கு உள்ளது.
அசாஞ்சே வழக்கைப் பொருத்தவரை, அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடுகடத்துவதைத் தடுப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை. அமெரிக்காவில் அவருக்கு பேச்சுரிமை உள்ளிட்ட அடிப்படை உரிமைகள் மறுக்கப்படாது; மேலும், மருத்துவ உதவிகள் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் அவருக்குக் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றாா் அவா்.
முன்னதாக அசாஞ்சேவை அமெரிக்காவுக்கு நாடு கடத்துவதற்கான அதிகாரபூா்வ உத்தரவை வெஸ்ட்மின்ஸ்டா் மாஜிஸ்திரேட் நீதிபதி 2022ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ஆம் தேதி பிறப்பித்தாா். அதையடுத்து, அந்த உத்தரவு உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. இந்த நிலையில், அசாஞ்சாவை நாடுகடத்துவதற்கு உள்துறை அமைச்சா் பிரீத்தி படேல் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளாா்.
இந்த நிலையில், பிரிட்டன் அரசின் உத்தரவை எதிா்த்து நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக விக்கிலீக்ஸ் இணையதளம் டிவிட்டரில் தெரிவித்துள்ளது.