புனே: உலகின் மிகப்பெரிய மொட்டை மாடியை 3 ஏக்கர் பரப்பளவில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்பின் நிறுவனம் அமைத்து வருகிறது. உலகின் மிகப்பெரிய மொட்டை மாடியாக சிங்கப்பூரின் ‘மெரினா பே சேன்ட்ஸ்’ கட்டிடம் விளங்கி வருகிறது. இது 2.5 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இந்நிலையில், அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு சொந்தமான, ‘டிரம்ப் ரியல் எஸ்டேட் நிறுவனம்,’ மகாராஷ்டிரா மாநிலம், புனேயில் 3 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மொட்டை மாடியை கட்டி வருகிறது. டிரம்ப் நிறுவனத்தின் இந்திய கிளையின் அதிகாரி கல்பேஷ் மேத்தா இதை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‘‘புனேயில் 3 ஏக்கரில் கட்டப்பட்டு வரும் இந்த மொட்டை மாடியின் பணிகள் 50 சதவீதம் முடிந்து விட்டது. 17 மாடிகள் அடங்கிய 5 கட்டிடங்களின் மீது இந்த மொட்டை மாடி அமைகிறது. இதில் குழந்தைகளுக்கான விளையாட்டு திடல், பூந்தோட்டம், நடைப்பயிற்சி பாதை, ஜிம், நீச்சல் குளம், உணவகம், உணவருந்தும் பகுதி ஆகியவை அமைகின்றன. இந்த அடுக்குமாடி குடியிருப்பில் 70 சதவீதம் விற்பனை செய்யப்பட்டு விட்டன. இதன் அருகே 6.7 ஏக்கரில் மற்றொரு கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் உள்கட்டமைப்பை பாலிவுட் டிசைனர் சுசானே கான் வடிவமைத்துள்ளார். இவர் நடிகர் ஹிர்திக் ரோஷனின் முன்னாள் மனைவி,’’ என்றார்.