அக்னிபாத் ராணுவ ஆள் சேர்ப்பு திட்டத்திற்கு எதிரான போராட்டத்தால் பீகாரில் மட்டும் 200 கோடி ரூபாய் மதிப்பிலான ரயில்வே சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. 50 ரயில் பெட்டிகள், 5 இஞ்சின்கள் மீண்டும் பயன்படுத்த முடியாத அளவுக்கு முற்றிலுமாக தீக்கிரையாகியுள்ளதாக டானாபூர் கோட்ட ரயில்வே மேலாளர் பிரபாத் குமார் தெரிவித்துள்ளார்.
நடைமேடைகள், தொழில்நுட்பக் கருவிகள், கணிப்பொறிகள் உள்ளிட்டவற்றையும் போராட்டக்காரர்கள் சேதப்படுத்தியிருப்பதால் பீகாரில் பழையபடி ரயில்சேவை தொடங்குவதில் கடும் சிரமங்கள் உள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
ராணுவத்தில் 4 ஆண்டுகள் மட்டுமே பணியாற்றக் கூடிய வகையில், மத்திய அரசு இளைஞர்களுக்காக கொண்டுவந்துள்ள அக்னிபாத் திட்டத்திற்கு எதிராக பீகார் மாநிலத்தில்தான் முதன்முறையாக போராட்டம் தொடங்கியது. ஆங்காங்கே ரயில்களுக்கு தீ வைப்பு போன்ற அசாம்பாவித சம்பவங்களும் அரங்கேறியதில் பெரும் பொருட்சேதங்கள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்நிலையில் பீகார் மாநிலத்தில் உள்ள 12 மாவட்டங்களில் தற்காலிகமாக இணைய சேவை முடக்கப்பட்டுள்ளது. இதுபோலவே ஹரியானா மாநில அரசும் இணையதள சேவை மற்றும் எஸ்.எம்.எஸ். சேவையை முடக்கி வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM