ஐ.பி.எல் தொடருக்கான ஓ.டி.டி உரிமைத்தை அடுத்த ஐந்து ஆண்டு காலத்திற்கு ரிலையன்ஸ் நிறுவனம் சுமார் ₹238 பில்லியனுக்கு வாங்கியது. தொடக்கத்தில் டிஜிட்டல் தளங்களுக்கான உரிமையை அமேசான் நிறுவனமே கைப்பற்றும் என அனைவரும் எதிர்பார்த்திருந்த நிலையில், ஏலத்திற்கு முந்தைய தினம் இப்போட்டியிலிருந்து திடீரென பின்வாங்கியது அந்நிறுவனம்.
இந்திய சந்தைக்குள் 2013-ம் ஆண்டு நுழைந்த அமேசான் நிறுவனம், இங்குள்ள மார்கெட்டைத் தொடர்ந்து தம்மிடையே தக்கவைத்துக்கொண்டு வந்தது. ரிலையன்ஸ் நிறுவனம் போட்டிக்கு வந்த நிலையில், சற்றுத் தடுமாறிய அமேசான், கடந்த பிப்ரவரி மாதம் நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரியை மாற்றியது. யுனிலிவரின் தலைமை அதிகாரியாகப் பணியாற்றி வந்த மனோஜ் திவாரி அமேசான் நிறுவனத்திற்கு இந்தியாவுக்கான சி.இ.ஓ-வாக நியமிக்கப்பட்டார். இவர் கடந்த இருபது ஆண்டுகள் யுனிலிவர் நிறுவனத்தில் இந்தியா, தாய்லாந்து, வியட்நாம் போன்ற நாடுகளில் பணியாற்றி உள்ளார்.
இந்தியாவில் இதுவரை 6.5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யதுள்ள அமேசான், 1 லட்சத்திற்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. 60 வேர்ஹவுஸை நாடு முழுக்க கட்டியுள்ளது. திவாரியின் தலைமையில் இந்த எண்ணிக்கையை மேலும் அதிகப்படுத்தத் திட்டமிட்டுள்ளார் அமேசானின் நிறுவனரான ஜெப் பெசோஸ். இந்நிலையில் இப்பதவிக்கு வந்த பிறகு முதன்முறையாக பேட்டியளித்துள்ளார் மனோஜ் திவாரி. “ஐ.பி.எல் தொடருக்கான விலை என்பது மிக அதிகம். அதில் செலவு செய்து பணத்தை விரயம் செய்ய விரும்பவில்லை. இந்தியாவில் ஏறத்தாழ 1.5 பில்லியன் மக்கள் உள்ளனர். அவர்களையும் இந்தியப் பொருளாதாரத்தையும் மையப்படுத்தி பின்வரும் காலங்களில் அமேசான் முதலீடு செய்யவுள்ளது. பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியாவிற்கு முக்கிய இடம் உள்ளது. இந்தியாவோடு சேர்த்து அமேசான் நிறுவனமும் வளர வேண்டும் என்பதுதான் எங்கள் நோக்கம்” என்று தெரிவித்தார்.
” இந்தியாவின் ஆன்லைன் வர்த்தக சந்தை 2030-ம் ஆண்டிற்குள் சுமார் $350 பில்லியன் டாலர் அளவிற்கு வளரும் என கணிக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட் போன் பயன்பாட்டால் ஆன்லைன் வர்த்தகம் 23 சதவிகிதம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் ரிலையன்ஸ், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்களை தாண்டி ஸ்டார்ட் அப் நிறுவனங்களும் இப்போட்டியில் இணைந்துள்ளன. ஆனால் சுமார் ₹1 ட்ரில்லியன் மதிப்பிலான இந்த ரீடெயில் துறையை வெறும் 3 சதவிகித மக்களே ஆன்லைனில் வர்த்தகம் புரிகிறார்கள்” என்று கூறினார் அவர்.
வியாபாரிகளை ஊக்குவிக்கும் பொருட்டு கடந்த மாதம் ‘ஸ்மார்ட் கமெர்ஸ்’ என்ற முன்னெடுப்பை அமேசான் நிறுவனம் தொடங்கியது. அதன் மூலம் சிறு வியாபாரிகள் பலரும் தங்கள் பொருட்களை ஆன்லைனில் சந்தைப்படுத்த அமேசான் நிறுவனம் உதவியது. அதேநேரம் நுகர்வோரை தக்கவைத்துக் கொள்ளவும் அமேசான் நிறுவனம் தவறியதில்லை. Amazon pay, Cashback, பணம் இல்லையென்றால் பொருளை வாங்கிவிட்டு பின்னர் பணத்தைத் தருவது (Buy now, Pay later) போன்ற பல திட்டங்கள் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இறுதியாக “இந்தியாவில் இன்னும் 13 மில்லியன் கடைகளை டிஜிட்டல் மயப்படுத்திவிட்டால், நாட்டின் மூளை முடுக்கெல்லாம் ஆன்லைன் வர்த்தகம் இருக்கும்” என்று கூறினார் திவாரி.