விக்ரம் படத்தின் சக்ஸஸ் மீட் நேற்று மெட்ராஸ் ரேஸ் கிளப்பில் நடைபெற்றது. இந்தக் கொண்டாட்டத்தின் ஸ்பெஷலே படம் எவ்வளவு சிறப்பாக இருந்ததோ அதே அளவுக்கு இங்கு பரிமாறப்பட்ட விருந்தும் ஸ்பெஷலாக இருந்தது.
விழாவின் தொடக்கத்திலேயே `இன்னிக்கு ஒரு பிடி’ என மனநிலையோடு நாம் அமர்ந்திருக்கக் காரணம் அங்கு பரிமாறப்பட்ட வெல்கம் டிரிங். வழக்கமான ஜூஸ் போன்றவையாக இல்லாமல் முருங்கை கீரை சூப், கேரட் ஜூஸ், புதினா ஜூஸ் என ஆர்கனிக்காக ஆரம்பித்தனர்.
இறுதியாக கமல்ஹாசன் பேசும்போது “விக்ரம் படம் குறித்த பெருமிதமும் சந்தோஷமும் எங்களுக்கு சொல்லி மாளாது. நாங்க மணிக்கணக்காக பேசிக்கொண்டே இருப்போம். நாம் எல்லோரும் ஒன்றாக விருந்து சாப்பிட வேண்டும். நீங்கள் எல்லோரும் இருந்து எங்களை கௌரவப்படுத்த வேண்டும். டயட்ல இருக்கவங்க கொஞ்சமா சாப்பிடுங்க. பசிச்சவங்க நிறைய சாப்பிடுங்க. நாங்க பசித்தவங்க. ஆவலாக காத்திருக்கிறோம். ஆரம்பிக்கலாமா…” என முடித்தார்.
அடுத்து தொடங்கியது விருந்து. கமல்ஹாசன், லோகேஷ் கனகராஜ் என படக்குழு அங்கு வந்திருந்த 500-க்கும் மேற்பட்டவர்களுடன் ஒன்றாக அமர்ந்து உணவு சாப்பிடத் தொடங்கினர்.
கேட்டரிங் பொறுப்பு கோயம்புத்தூரைச் சேர்ந்த ‘மாதம்பட்டி பாகசாலா’ குழுவினரிடம் கொடுக்கப்பட்டிருந்தது. மெனு என்னனு பார்த்தா நாட்டுக்கோழி சூப், கொங்கு ஸ்பெஷல் மட்டன் பிரியாணி, விருதுநகர் ஸ்பெஷல் பன் பரோட்டா, பள்ளிபாளையம் சிக்கன், மதுரை மட்டன் கறி தோசை, இடியாப்பம் ஆட்டுக்கால் பாயா (படிக்கும் போதே எச்சி ஊறுனா நாங்க பொறுப்பில்ல!) அசைவ லிஸ்ட்டா வருதே என பதட்டப்படாதீர்கள்.
சைவத்துலயும் கவனிப்பு பலமாகவே இருந்தது. வெஜ் சோயாட்டா பிரியாணி, பள்ளிப்பாளையம் வெஜ் கிரேவி, கோவக்காய் சட்னி, கொய்யா சட்னி, பலவகையான தோசைகள் என நீள்கிற உணவு பட்டியல் சிறுதானியங்களில் ஒன்றான சாமை தயிர் சாதத்தோடு முடிவடைந்தது.
சுக்கு பால், பிராரோ ரோச்சர் ஐஸ் கிரீம், பழங்கள், மஹாய் பீடா… `இதன் பிறகு வீட்டுக்கு போவோமா. இல்லை, இங்கயே ஒரு மூலையில் படுத்து தூங்கிடுவோமா’ என யோசிக்க வைக்கிறளவுக்கு விருந்து வைத்திருக்கிறார்கள்.
லோகேஷ் யூனிவர்சில் பிரியாணி இல்லாமல் படம் இருக்காது. கமல் RKFI-ல் சாப்பாட்டுக்கு குறைவிருக்காது. இரண்டும் பேரும் இணைந்து ஒரு வெற்றி படம் கொடுத்த பிறகு தங்கள் சந்தோஷத்தை விருந்து வைத்து பகிர்ந்திருக்கிறார்கள்.