மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ராணுவத்தில் ஆள்சேர்ப்பதற்கான புதிய திட்டமான ‘அக்னிபத்’-ஐ அறிமுகப்படுத்தினார். அரசின் இந்த திட்டத்தை ஆதரித்தும், விமர்சித்தும் பலர் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பணி நிரந்தரமும், எந்தவித ஓய்வூதியப் பலன்களும் இல்லாமல் ராணுவத்தில் ஆள் சேர்க்கும் ‘அக்னிபத்’ திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி வட மாநிலங்களில் இளைஞர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக, உத்தரப்பிரதேசம், பீகார், ஹரியானா, மத்தியப் பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
தென் மாநிலங்களை பொறுத்தவரை, தெலங்கானாவில் பெரிய அளவில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, அக்னிபத் திட்டத்துக்கு எதிரான போராட்டங்கள் சில இடங்களில் வன்முறையாக மாறி வருகின்றன. இத்திட்டத்தை எதிர்த்து இரண்டு இளைஞர்கள் தற்கொலை செய்துகொண்ட சம்பவமும் இப்போது நாடு முழுவதும் பேசு பொருளாக மாறியுள்ளது.
இந்த நிலையில், டெல்லியில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, “மத்திய அரசு புதிதாக அறிமுகப்படுத்தியுள்ள அக்னிபத் திட்டம் மூலம் ஏற்பட்டுள்ள கொந்தளிப்பால் நாடு முழுவதும் பொதுச் சொத்துகளுக்கு சேதம், காவல் நிலையங்கள் மீது தாக்குதல் என தொடர்கின்றன. அக்னிபத் திட்டத்தின் மூலம் பணியமர்த்தப்படுபவர்கள் அக்னிவீரர்கள். அவர்களுக்கு டிரைவிங், எலக்ட்ரிக்கல், (வாஷிங்) துவைப்பவது மற்றும் முடிதிருத்துவது உள்ளிட்ட பயிற்சிகள் அளிக்கப்படும். அவர்களுக்குத் திறன் பயிற்சி அளிக்கக் கூடாது என்று விதி இருக்கிறதா? நான்கு வருட பயிற்சிக்குப் பிறகு, இந்த திறன்கள் எதிர்காலத்தில் அவர்களுக்கு உதவியாக இருக்கும்” எனத் தெரிவித்திருக்கிறார்.