புதிய ராணுவ ஆள்சேர்ப்பு திட்டமான ‘அக்னிபத்’க்கு எதிரான வன்முறை போராட்டங்கள் தீவிரமடைந்து வரும் நிலையில், ஹைதராபாத் எம்.பி அசாதுதீன் ஓவைசி, எத்தனை போராட்டக்காரர்களின் வீடுகளை புல்டோசர்களால் இடிப்பீர்கள்? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார்.
அக்னிபத் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பீகார், உத்தரப்பிரதேசம், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இளைஞர்கள் நடத்திவரும் போராட்டம், பெரும் கலவரமாக வெடித்தது. இந்தக் கலவரத்தில், பீகார், தெலங்கானா மாநில ரயில் நிலையங்களில், ரயில்களுக்குத் தீவைக்கப்பட்டது. அதுமட்டுமல்லாமல், தெலங்கானா ரயில் நிலையத்தில் ஏற்பட்ட கலவரத்தில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த நிலையில் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சித் தலைவரும், ஹைதராபாத் எம்.பி-யுமான அசாதுதீன் ஓவைசி, “பிரதமர் நரேந்திர மோடியின் தவறான முடிவால் இளைஞர்கள் தெருக்களில் போராடுகிறார்கள். எத்தனை போராட்டக்காரர்களின் வீடுகள் புல்டோசர்களால் இடிக்கப்படும்? போராட்டக்காரர்கள் குழந்தைகளைப் போன்றவர்கள். அவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட வேண்டும்.
முஸ்லிம்களாகிய நாங்களும் இந்த நாட்டின் குழந்தைகள், நீங்கள் எங்களிடம் பேசுங்கள், கடந்த வெள்ளிக்கிழமை எங்களிடம் நீங்கள் பேசியிருக்க வேண்டும். ஆனால், அஃப்ரின் பாத்திமாவின் வீடு ஏன் இடிக்கப்பட்டது? அவர் தந்தை ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றதால்தானே? நீதி என்பது அரசியலமைப்பின் அடிப்படைக் கொள்கை. நீதிமன்றம் அவரை தண்டிக்க முடியும், ஆனால் அவர் மனைவி மற்றும் மகளை தண்டிக்க முடியாதே. இதுதானா உங்கள் நீதி?
நபிகள் நாயகம் குறித்த தனது கருத்துக்காக கட்சியால் இடைநீக்கம் செய்யப்பட்ட நூபுர் ஷர்மா விரைவில் ஒரு பெரிய தலைவராக ஆக்கப்படுவார். மேலும், கட்சியின் டெல்லி முதல்வர் வேட்பாளராகவும் பரிந்துரைக்கப்படலாம்.
நுபுர் ஷர்மாவை கைதுசெய்து, அவர் மீது இந்திய சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும். அரசியலமைப்பு சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நாங்கள் விரும்பினோம். ஆனால் பாருங்கள் வரும் 6-7 மாதங்களில் நுபுர் ஷர்மா பெரிய தலைவராக வருவார். அது எனக்குத் தெரியும். இது நமது தேசத்தின் யதார்த்தம். முஸ்லிம்களை எவ்வளவு அதிகமாக துஷ்பிரயோகம் செய்கின்றீர்களோ, அவ்வளவு உயர்ந்த பதவியை நீங்கள் பெறுவீர்கள்” என்று தெரிவித்துள்ளார்.