அக்னிபத் போராட்டம்; பின்னணியில் செயல்பட்ட முக்கிய புள்ளி கைது

செகந்திராபாத்,

ராணுவம் உள்ளிட்ட படைகளில் இந்திய இளைஞர்களை சேர்க்கும் அக்னிபத் என்ற புதிய திட்டம் மத்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. அக்னி வீரர்கள்

இத்திட்டத்தின் கீழ் தேர்வாகும் இளைஞர்கள் 4 ஆண்டுகளுக்கு மட்டும் ஒப்பந்த அடிப்படையில் சேர்க்கப்படுவார்கள். அதன்பின் பணியில் இருந்து ஓய்வு பெறுவோருக்கு ஓய்வூதியம் எதுவும் வழங்கப்படாது. இதனால், இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வடமாநிலங்களில் இளைஞர்கள் பலர் போராட்டத்தில் குதித்தனர்.

இந்த போராட்டத்தின்போது, பீகார், உத்தரபிரதேசம் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்களில் வன்முறை வெடித்தது. இதில், 3 ரெயில்கள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. ரெயில் நிலையங்கள் சூறையாடப்பட்டன. டிக்கெட் கவுண்ட்டரில் இருந்த பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

பீகாரில் துணை முதல்-மந்திரி மற்றும் பீகார் பா.ஜ.க. தலைவர் உள்ளிட்டோரின் வீடுகள் தாக்கப்பட்டன. இந்த நிலையில், போராட்டங்களை சில பயிற்சி நிலையங்கள் தூண்டி விட்டுள்ளன என விசாரணையில் தெரிய வந்துள்ளது.

தெலுங்கானாவின் செகந்திராபாத் நகரில் உள்ள ரெயில் நிலையத்தில் கடந்த வெள்ளி கிழமை நடந்த வன்முறை சம்பவத்துடன் தொடர்புடைய முன்னாள் ராணுவ வீரர் ஒருவர் கைது செய்யப்பட்டு உள்ளார்.

அவர், அவுலா சுப்பாராவ் என அறியப்பட்டு உள்ளார். போராட்டக்காரர்களால் பல ரெயில்களுக்கு தீ வைத்த சம்பவத்தின் பின்னணியில் அவர் செயல்பட்டு உள்ளார். இதில், கூட்டத்தினரை கலைக்க போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் வாரங்காலை சேர்ந்த ராஜேஷ் (வயது 19) என்ற வாலிபர் உயிரிழந்து உள்ளார் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

ஆந்திர பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தினை சேர்ந்த சுப்பாராவ் கடந்த சில ஆண்டுகளாக ராணுவத்தில் சேர விரும்புவோருக்கான பயிற்சி அகாடமியை நடத்தி வருகிறார். அதற்கு நரசராவ் பேட்டை, ஐதராபாத் உள்ளிட்ட இடங்களில் கிளைகளும் உள்ளன. வேறு 7 இடங்களிலும் அவரது பயிற்சி அகாடமிகள் செயல்பட்டு வருகின்றன என கூறப்படுகிறது.

போராட்டங்களை நடத்த திட்டமிட்டு வாட்ஸ்அப் குழுக்களை அவர் உருவாக்கி உள்ளார் என கூறப்படுகிறது. செகந்திராபாத்தில் வன்முறையின்போது, தீ வைப்பு மற்றும் சூறையாடல் போன்றவற்றில் அவருக்கு முக்கிய பங்கு உள்ளது.

அதோனி, கர்னூல், குண்டூர், நெல்லூர், அமடலாவலசை, விசாகப்பட்டினம் மற்றும் யலமஞ்சிலி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த வன்முறையுடன் தொடர்புடைய பல்வேறு நபர்களையும் போலீசார் கைது செய்து உள்ளனர். அவர்களிடமும் விசாரணை நடந்து வருகிறது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.