* எக்காரணத்தை கொண்டும் பின்வாங்க முடியாது* உயிர்த்தியாகம் செய்தால் ரூ.1 கோடி என புதிய சலுகைபுதுடெல்லி: அக்னிபாதை திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ள நிலையில், இத்திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புக்கான நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது, முதல் பிரிவு அக்னி வீரர்கள் வரும் டிசம்பரில் ஆயுதப் படையில் சேர்க்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான விண்ணப்ப பதிவை 24ம் தேதி முதல் விமானப்படை தொடங்குகிறது. இதைத் தொடர்ந்து, ராணுவம், கடற்படையும் ஆட்சேர்ப்பு அறிவிப்புகளை வெளியிட உள்ளன. அதோடு, பணியின் போது உயிர்த்தியாகம் செய்யும் அக்னி வீரர்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்ற புதிய சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது. முப்படைகளில் 4 ஆண்டு குறுகிய கால சேவை அடிப்படையில் 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளம் வீரர்களை சேர்க்கும் அக்னி பாதை திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 14ம் தேதி அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தில் சேரும் இளைஞர்களில் 75 சதவீதம் பேர் 4 ஆண்டுக்குப் பின் பணியிலிருந்து விடுவிக்கப்படுவார்கள், அவர்களுக்கு பென்ஷன் வழங்கப்படாது. இதனால், அக்னிபாதை திட்டத்திற்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. பீகார், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட வடமாநிலங்களில் போராட்டத்தில் குதித்த இளைஞர்கள் ரயில்களை எரித்து வன்முறையில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவுகிறது. இதையடுத்து, அக்னிபாதை திட்டத்தின் கீழ் ஆயுதப்படைகளில் சேர்க்கப்படும் அக்னி வீரர்களுக்கு பாதுகாப்பு துறையின் வேலைவாய்ப்பில் 10 சதவீதம் இடஒதுக்கீடு, துணை ராணுவத்தில் 10 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் என ஒன்றிய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. மேலும், படையில் சேர்ப்பதற்கான வயது வரம்பையும் 23 ஆக உயர்த்தியது. இந்நிலையில், தொடர்ந்து 4வது நாளாக நேற்றும் போராட்டங்கள் தொடர்ந்தன. இருப்பினும், அக்னிபாதை திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முப்படைகளும் நேற்று தொடங்கின. இந்த திட்டத்தின் கீழ் ஆட்சேர்ப்புக்கான கால அட்டவணை குறித்து முப்படைகள் அறிவிப்பு வெளியிட்டுள்ளன. இதன்படி, முதற்கட்டமாக விமானப்படை வரும் 24ம் தேதி முதல் அக்னிபாதை திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் வெளியிடப்பட உள்ளன.இது குறித்து, டெல்லியில் அக்னிபாதை திட்டத்திற்கான முப்படைகளின் உயர் அதிகாரின் கூட்டாக பேட்டி அளித்தனர். அதில், விமானப்படையின் ஏர்மார்ஷல் எஸ்.கே.ஜா கூறுகையில், ‘‘வரும் 24ம் தேதி முதல் பதிவு செயல்முறை தொடங்கும். முதல் கட்ட ஆட்தேர்வுக்கான ஆன்லைன் தேர்வுகள் அடுத்த மாதம் 24ம் தேதி தொடங்கும். டிசம்பரில் முதல் பிரிவு வீரர்கள் விமானப்படையில் சேர்க்கப்படுவார்கள். அவர்களுக்கு டிசம்பர் 30ம் தேதிக்குள் பயிற்சியை தொடங்க திட்டமிட்டுள்ளோம்’’ என்றார்.கடற்படையின் துணை அட்மிரல் தினேஜ் திரிபாதி கூறுகையில், ‘‘வரும் 25ம் தேதிக்குள் ஆட்சேர்ப்புக்கான விரிவான வழிகாட்டுதல்கள் வெளியிடப்படும். இத்திட்டத்தின் கீழ், ஆண், பெண் இருபாலரையும் விமானப்படை சேர்க்க முடிவு செய்துள்ளது. அக்னி வீரர்களாக வரும் பெண்கள் போர்கப்பல்களில் பணியாற்றுவார்கள்’’ என்றார். ராணுவத்தின் ஆட்சேர்ப்பு திட்டம் குறித்து லெப்டினன்ட் ஜெனரல் பன்சி பொன்னப்பா கூறுகையில், ‘‘ராணுவ ஆட்சேர்ப்பு குறித்து விரிவான அறிக்கை நாளை (இன்று) வெளியிடப்படும். ஜூலை 1ம் தேதி முதல் படையின் பல்வேறு பிரிவுகளில் அடுத்தடுத்த அறிவிப்புகள் வெளியிடப்படும். அக்னிபாதை திட்டத்தின் ஆட்சேர்ப்பு பணிகள் ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நாடு முழுவதும் நடைபெறும். டிசம்பர் முதல் அல்லது 2வது வாரத்தில் 25,000 வீரர்கள் கொண்ட முதல் பிரிவு பயிற்சியில் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும். 2வது பிரிவு அடுத்த ஆண்டு பிப்ரவரி 23ல் பயிற்சியை தொடங்குவார்கள். நாடு முழுவதும் 40,000 அக்னி வீரர்களை தேர்வு செய்ய மொத்தம் 83 ஆட்சேர்ப்பு முகாம்கள் நடத்தப்படும்,’’ என்றார். இதுதவிர, அக்னிபாதை திட்டம் எக்காரணம் கொண்டும் திரும்பப் பெறப்படாது என்றும், பணியின் போது அக்னி வீரர்கள் வீரமரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்திற்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கப்படும் என்றும் ராணுவ அதிகாரிகள் அறிவித்துள்ளனர். இதற்கிடையே, அக்னிபாதை திட்டம் தொடர்பாக 2வது நாளாக பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், நேற்றும் முப்படை தளபதிகளுடன் தீவிர ஆலோசனை நடத்தியது குறிப்பிடத்தக்கது.* அக்னி வீரர்கள் சேர்ப்பு எப்போது?விமானப்படை:ஆன்லைன் பதிவு – ஜூன் 24ஆன்லைன் தேர்வு – ஜூலை 24பயிற்சி தொடக்கம் – டிசம்பர் 30கடற்படை:* ஆட்சேர்ப்புக்கான அறிவிப்பு – ஜூன் 25* ஆண்கள், பெண்களுக்கு வாயப்பு* பெண்களுக்கு போர்கப்பலில் பணிராணுவம்:* ஆட்சேர்ப்பு அறிவிப்பு – இன்று வெளியீடு* ஆட்சேர்ப்பு – ஆகஸ்ட், செப்டம்பர், அக்டோபர் * முதல் பிரிவு சேர்ப்பு – டிசம்பர் முதல், 2வது வாரம்* இரண்டாவது பிரிவு – 2023, பிப்ரவரி 23* ஆட்சேர்ப்பு முகாம் – நாடு முழுவதும் 83 இடங்கள்33 ஆண்டுகளுக்கு முன்பே பரிசீலிக்கப்பட்ட திட்டம்* அக்னிபாதை திட்டம் குறித்து கடந்த 1989ம் ஆண்டிலிருந்து ஆயுதப்படையில் விவாதிக்கப்பட்டு வருகிறது. கார்கில் மறுஆய்வுக் குழு கூட இத்திட்டம் தொடர்பாக பரிந்துரைத்துள்ளது. * இத்திட்டம் அவசர அவசரமாக கொண்டு வரப்பட்டதல்ல. அனைத்து அமைச்சகங்களுடனும், நிபுணர்களுடனும், முன்னாள் ராணுவ அதிகாரிகளுடனும் அரசு முழுமையாக ஆலோசனை நடத்தி கொண்டு வரப்பட்ட திட்டமாகும். இதற்காக நீண்ட ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு படைகள் குறித்து ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.* நமக்கு இளம் வீரர்கள் வேண்டும். தற்போதுள்ள ஆயுதப்படையில் 30 வயதுகளிலேயே வீரர்கள் இருக்கிறார்கள். எனவே, இளமையும், அனுபவமும் கலந்த படையை உருவாக்க வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். அதோடு எதிர்கால போர்கள் தொழில்நுட்பத்தை சார்ந்ததாக இருக்கக் கூடியவை. அதற்கும் தயாராகும் வகையில் கொண்டு வரப்பட்டதுதான் அக்னிபாதை திட்டம். – ராணுவ உயர் அதிகாரிகள்* வன்முறையில் ஈடுபட்டால் அக்னி வீரர் ஆக முடியாதுஅக்னிபாதை திட்டம் தொடர்பாக ராணுவ விவகாரத்துறையின் கூடுதல் செயலாளரான லெப்டினன்ட் ஜெனரல் அனில் பூரி கூறுகையில், ‘‘ராணுவ பணி என்பது சம்பளத்தை பொறுத்தல்ல. அது உணர்வு சார்ந்த விஷயம். ஆனாலும், அக்னி வீரர்களுக்கு எந்த பாரபட்சமும் காட்டவில்லை. வழக்கமான வீரர்களுக்கு வழங்கப்படும் அதே சம்பளம் வழங்கப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் முப்படையில் 17,600 வீரர்கள் முன்கூட்டியே பணியை ராஜினாமா செய்கின்றனர். அவர்களை யாரும் ஏன் என்று கேள்வி கேட்பதில்லை. இத்திட்டத்திற்கு சமீபத்தில் எழுந்த போராட்டங்களை எதிர்பார்க்கவில்லை. ஆயுதப்படையில் ஒழுக்கமின்மைக்கு இடமில்லை. எனவே, அக்னிபாதை திட்டத்தில் ஆட்தேர்வு நடக்கும் போது, 100 சதவீதம் விண்ணப்பதாரர்களின் பின்புலம் குறித்து போலீஸ் மூலம் விசாரிக்கப்படும். போலீசில் வழக்கு உள்ளவர்கள் நிச்சயம் ராணுவத்தில் சேர முடியாது. அதோடு, வன்முறை, தீ வைப்பு சம்பவங்களில் ஈடுபடவில்லை என ஒவ்வொரு அக்னி வீரரும் எழுத்துப்பூர்வமாக உறுதிமொழி அளிக்க வேண்டும். எனவே, இத்திட்டத்தை செயல்படுத்துவதில் அரசு தொடர்ந்து முன்னேறி வருவதால், இளைஞர்கள் போராட்டத்தை கைவிட வேண்டும்,’’ என்றார்.ஆண்டுக்கு ஒரு லட்சம் பேர் இலக்கு* முதற்கட்டமாக இந்த ஆண்டு 46,000 அக்னி வீரர்களை சேர்க்க முடிவு செய்யப்பட்டுள்ளது.* அடுத்த 4 ஆண்டுகளில் 50 ஆயிரம் அல்லது 60 ஆயிரம் வீரர்கள் அக்னிபாதை திட்டத்தின் கீழ் தேர்வு செய்யப்படுவார்கள்.* அதைத் தொடர்ந்து அக்னி வீரர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஒரு லட்சமாக உயர்த்த ஒன்றிய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.