சண்டிகர்: அக்னிபாதை போராட்டத்தின் போது பஞ்சாப் முதல்வர் பகவந்த் மானின் வாகனம் திடீரென நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் இளைஞர்கள் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வரும் நிலையில், பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் இன்று சன்ரூஃப் வழியாக சாலையில் காரில் சென்றார். அப்போது அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து போராடிய கருப்பு டி-ஷர்ட் அணிந்திருந்த இளைஞர் ஒருவர், முதல்வரின் காரை நோக்கி கை அசைத்தார். அதனால் முதல்வரின் கான்வாய் நிறுத்தப்பட்டது. அப்போது முதல்வரின் கையை குலுக்கிய அந்த நபர், ‘அக்னிபாதை திட்டத்தை செயல்படுத்துவதற்கு முன் அனைத்து தலைவர்களையும் சந்தித்து விவாதித்திருக்க வேண்டும்’ என்றார். அப்போது முதல்வர் பகவந்த் மான், ‘அக்னிபாதை திட்டம் குறித்து ஒன்றிய அரசு விவாதித்திருந்தால், தனிப்பட்ட முறையில் நான் டெல்லி சென்றிருப்பேன்’ என்றார். முதல்வர் வாகனம் திடீரென நிறுத்தப்பட்டதால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுதொடர்பான வீடியோ பதிவை ஆம்ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது.